அல்லி மலர்நாற்றத் பாடல் வரிகள் (alli malarnarrat) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவின்னம்பர் – இன்னம்பூர் தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவின்னம்பர் – இன்னம்பூர்அல்லி மலர்நாற்றத்

அல்லி மலர்நாற்றத் துள்ளார் போலும்
அன்புடையார் சிந்தை யகலார் போலுஞ்
சொல்லின் அருமறைகள் தாமே போலுந்
தூநெறிக்கு வழிகாட்டுந் தொழிலார் போலும்
வில்லிற் புரமூன் றெரித்தார் போலும்
வீங்கிருளும் நல்வெளியு மானார் போலும்
எல்லி நடமாட வல்லார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. 1

கோழிக் கொடியோன்றன் தாதை போலுங்
கொம்பனாள் பாகங் குளிர்ந்தார் போலும்
ஊழி முதல்வருந் தாமே போலும்
உள்குவார் உள்ளத்தி னுள்ளார் போலும்
ஆழித்தேர் வித்தகருந் தாமே போலும்
அடைந்தவர்கட் கன்பராய் நின்றார் போலும்
ஏழு பிறவிக்குந் தாமே போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. 2

தொண்டர்கள் தந்தகவி னுள்ளார் போலுந்
தூநெறிக்குந் தூநெறியாய் நின்றார் போலும்
பண்டிருவர் காணாப் படியார் போலும்
பத்தர்கள்தஞ் சித்தத் திருந்தார் போலுங்
கண்ட மிறையே கறுத்தார் போலுங்
காமனையுங் காலனையுங் காய்ந்தார் போலும்
இண்டைச் சடைசேர் முடியார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. 3

வானத் திளந்திங்கட் கண்ணி தன்னை
வளர்சடைமேல் வைத்துகந்த மைந்தர் போலும்
ஊனொத்த வேலொன் றுடையார் போலும்
ஒளிநீறு பூசு மொருவர் போலுந்
தானத்தின் முப்பொழுதுந் தாமே போலுந்
தம்மின் பிறர்பெரியா ரில்லை போலும்
ஏனத் தெயிறிலங்கப் பூண்டார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. 4

சூழுந் துயர மறுப்பார் போலுந்
தோற்றம் இறுதியாய் நின்றார் போலும்
ஆழுங் கடல்நஞ்சை யுண்டார் போலும்
ஆட லுகந்த அழகர் போலுந்
தாழ்வின் மனத்தேனை யாளாக் கொண்டு
தன்மை யளித்த தலைவர் போலும்
ஏழு பிறப்பு மறுப்பார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. 5

பாதத் தணையுஞ் சிலம்பர் போலும்
பாரூர் விடையொன் றுடையார் போலும்
பூதப் படையாள் புனிதர் போலும்
பூம்புகலூர் மேய புராணர் போலும்
வேதப் பொருளாய் விளைவார் போலும்
வேடம் பரவித் திரியுந் தொண்டர்
ஏதப் படாவண்ணம் நின்றார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. 6

பல்லார் தலையோட்டில் ஊணார் போலும்
பத்தர்கள்தஞ் சித்தத் திருந்தார் போலுங்
கல்லாதார் காட்சிக் கரியார் போலுங்
கற்றவர்கள் ஏதங் களைவார் போலும்
பொல்லாத பூதப் படையார் போலும்
பொருகடலும் ஏழ்மலையுந் தாமே போலும்
எல்லாரு மேத்தத் தகுவார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. 7

மட்டு மலியுஞ் சடையார் போலும்
மாதையோர் பாக முடையார் போலுங்
கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலுங்
காலன்றன் வாழ்நாள் கழிப்பார் போலும்
நட்டம் பயின்றாடும் நம்பர் போலும்
ஞாலமெரி நீர்வெளிகா லானார் போலும்
எட்டுத் திசைகளுந் தாமே போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. 8

கருவுற்ற காலத்தே என்னை யாண்டு
கழற்போது தந்தளித்த கள்வர் போலுஞ்
செருவிற் புரமூன்று மட்டார் போலுந்
தேவர்க்குந் தேவராஞ் செல்வர் போலும்
மருவிப் பிரியாத மைந்தர் போலும்
மலரடிகள் நாடி வணங்க லுற்ற
இருவர்க் கொருவராய் நின்றார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. 9

அலங்கற் சடைதாழ ஐய மேற்று
அரவ மரையார்க்க வல்லார் போலும்
வலங்கை மழுவொன் றுடையார் போலும்
வான்றக்கன் வேள்வி சிதைத்தார் போலும்
விலங்கல் எடுத்துகந்த வெற்றி யானை
விறலழித்து மெய்ந்நரம்பாற் கீதங் கேட்டன்
றிலங்கு சுடர்வாள் கொடுத்தார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment