யாழைப்பழித் தன்னமொழி பாடல் வரிகள் (yalaippalit tannamoli) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருமறைக்காடு – வேதாரண்யம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருமறைக்காடு – வேதாரண்யம்யாழைப்பழித் தன்னமொழி
யாழைப்பழித் தன்னமொழி
மங்கையொரு பங்கன்
பேழைச்சடை முடிமேற்பிறை
வைத்தான்இடம் பேணில்
தாழைப்பொழி லூடேசென்று
பூழைத்தலை நுழைந்து
வாழைக்கனி கூழைக்குரங்
குண்ணும்மறைக் காடே. 1
சிகரத்திடை இளவெண்பிறை
வைத்தான்இடந் தெரியில்
முகரத்திடை முத்தின்னொளி
பவளத்திரள் ஓதத்
தகரத்திடை தாழைத்திரள்
ஞாழற்றிரள் நீழல்
மகரத்தொடு சுறவங்கொணர்ந்
தெற்றும்மறைக் காடே. 2
அங்கங்களும் மறைநான்குடன்
விரித்தானிடம் அறிந்தோம்
தெங்கங்களும் நெடும்பெண்ணையும்
பழம்வீழ்மணற் படப்பைச்
சங்கங்களும் இலங்கிப்பியும்
வலம்புரிகளும் இடறி
வங்கங்களும் உயர்கூம்பொடு
வணங்கும்மறைக் காடே. 3
நரைவிரவிய மயிர்தன்னொடு
பஞ்சவடி மார்பன்
உரைவிரவிய உத்தமனிடம்
உணரல்லுறு மனமே
குரைவிரவிய குலசேகரக்
கொண்டற்றலை விண்ட
வரைபுரைவன திரைபொருதிழிந்
தெற்றும்மறைக் காடே. 4
சங்கைப்பட நினையாதெழு
நெஞ்சேதொழு தேத்தக்
கங்கைச்சடை முடியுடையவர்க்
கிடமாவது பரவை
அங்கைக்கடல் அருமாமணி
உந்திக்கரைக் கேற்ற
வங்கத்தொடு சுறவங்கொணர்ந்
தெற்றும்மறைக் காடே. 5
அடல்விடையினன் மழுவாளினன்
அலராலணி கொன்றைப்
படருஞ்சடை முடியுடையவர்க்
கிடமாவது பரவைக்
கடலிடையிடை கழியருகினிற்
கடிநாறுதண் கைதை
மடலிடையிடை வெண்குருகெழு
மணிநீர்மறைக் காடே. 6
முளைவளரிள மதியுடையவன்
முன்செய்தவல் வினைகள்
களைகளைந்தெனை ஆளல்லுறு
கண்டன்னிடஞ் செந்நெல்
வளைவிளைவயற் கயல்பாய்தரு
குணவார்மணற் கடல்வாய்
வளைவளையொடு சலஞ்சலங்கொணர்ந்
தெற்றும்மறைக் காடே. 7
நலம்பெரியன சுரும்பார்ந்தன
நங்கோனிடம் அறிந்தோம்
கலம்பெரியன சாருங்கடற்
கரைபொருதிழி கங்கைச்
சலம்புரிசடை முடியுடையவர்க்
கிடமாவது பரவை
வலம்புரியொடு சலஞ்சலங்கொணர்ந்
தெற்றும்மறைக் காடே. 8
குண்டாடியுஞ் சமணாடியுங்
குற்றுடுக்கையர் தாமுங்
கண்டார்கண்ட காரணம்மவை
கருதாதுகை தொழுமின்
எண்டோ ளினன் முக்கண்ணினன்
ஏழிசையினன் அறுகால்
வண்டாடுதண் பொழில்சூழ்ந்தெழு
மணிநீர்மறைக் காடே. 9
பாரூர்பல புடைசூழ்வள
வயல்நாவலர் வேந்தன்
வாரூர்வன முலையாள்உமை
பங்கன்மறைக் காட்டை
ஆரூரன தமிழ்மாலைகள்
பாடும்மடித் தொண்டர்
நீரூர்தரு நிலனோடுயர்
புகழாகுவர் தாமே. 10
திருச்சிற்றம்பலம்