புள்ளித்தோ லாடை பாடல் வரிகள் (pullitto latai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவீழிமிழலை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவீழிமிழலை
சுவாமி : வீழியழகர்
அம்பாள் : அழகுமுலையம்மை
புள்ளித்தோ லாடை
புள்ளித்தோ லாடை பூண்பது நாகம்
பூசுசாந் தம்பொடி நீறு
கொள்ளீத்தீ விளக்குக் கூளிகள் கூட்டங்
காளியைக் குணஞ்செய்கூத் துடையோன்
அள்ளற் காராமை அகடு வான்மதியம்
ஏய்க்கமுட் டாழைக ளானை
வெள்ளைக்கொம் பீனும் விரிபொழில் வீழி
மிழலையா னெனவினை கெடுமே. 1
இசைந்தவா றடியா ரிடுதுவல் வானோர்
இழுகுசந் தனத்திளங் கமலப்
பசும்பொன்வா சிகைமேற் பரப்புவாய்
கரப்பாய் பத்திசெய் யாதவர் பக்கல்
அசும்புபாய் கழனி யலர்கயன் முதலோ
டடுத்தரிந் தெடுத்தவான் சும்மை
விசும்புதூர்ப் பனபோல் விம்மிய வீழி
மிழலையா னெனவினை கெடுமே. 2
நிருத்தனா றங்கன் நீற்றன் நான்மறையன்
நீலமார் மிடற்றன்நெற் றிக்கண்
ஒருத்தன்மற் றெல்லா வுயிர்கட்கும் உயிராய்
யுளனிலன் கேடிலி யுமைகோன்
திருத்தமாய் நாளும் ஆடுநீர்ப் பொய்கை
சிறியவர் அறிவினின் மிக்க
விருத்தரை யடிவீழ்ந் திடம்புகும் வீழி
மிழலையா னெனவினை கெடுமே. 3
தாங்கருங் காலந் தவிரவந் திருவர்
தம்மொடுங் கூடினா ரங்கம்
பாங்கினால் தரித்துப் பண்டுபோ லெல்லாம்
பண்ணிய கண்ணுதற் பரமர்
தேங்கொள்பூங் கமுகு தெங்கிளங் கொடிமாச்
செண்பகம் வண்பலா இலுப்பை
வேங்கைபூ மகிழால் வெயில்புகா வீழி
மிழலையா னெனவினை கெடுமே. 4
கூசுமா மயானங் கோயில்வா யிற்கண்
குடவயிற் றனசில பூதம்
பூசுமா சாந்தம் பூதிமெல் லோதி
பாதிநற் பொங்கர வரையோன்
வாசமாம் புன்னை மௌவல்செங் கழுநீர்
மலரணைந் தெழுந்தவான் தென்றல்
வீசுமாம் பொழில்தேன் துவலைசேர் வீழி
மிழலையா னெனவினை கெடுமே. 5
பாதியோர் மாதர் மாலுமோர் பாகர்
பங்கயத் தயனுமோர் பாலர்
ஆதியாய் நடுவாய் அந்தமாய் நின்ற
அடிகளார் அமரர்கட் கமரர்
போதுசேர் சென்னிப் புரூரவாப் பணிசெய்
பூசுரர் பூமகன் அனைய
வேதியர் வேதத் தொலியறா வீழி
மிழலையா னெனவினை கெடுமே. 6
தன்றவம் பெரிய சலந்தர னுடலந்
தடிந்தசக் கரமெனக் கருளென்
றன்றரி வழிபட் டிழிச்சிய விமானத்
திறையவன் பிறையணி சடையன்
நின்றநாட் காலை யிருந்தநாள் மாலை
கிடந்தமண் மேல்வரு கலியை
வென்றவே தியர்கள் விழாவறா வீழி
மிழலையா னெனவினை கெடுமே. 7
கடுத்தவா ளரக்கன் கைலையன் றெடுத்த
கரமுரஞ் சிரநெரிந் தலற
அடர்த்ததோர் விரலால் அஞ்செழுத் துரைக்க
அருளினன் தடமிகு நெடுவாள்
படித்தநான் மறைகேட் டிருந்தபைங் கிளிகள்
பதங்களை யோதப்பா டிருந்த
விடைக்குலம் பயிற்றும் விரிபொழில் வீழி
மிழலையா னெனவினை கெடுமே. 8
அளவிட லுற்ற அயனொடு மாலும்
அண்டமண் கெண்டியுங் காணா
முளையெரி யாய மூர்த்தியைத் தீர்த்த
முக்கண்எம் முதல்வனை முத்தைத்
தளையவிழ் கமலத் தவிசின்மேல் அன்னந்
தன்னிளம் பெடையொடும் புல்கி
விளைகதிர்க் கவரி வீசவீற் றிருக்கும்
மிழலையா னெனவினை கெடுமே. 9
கஞ்சிப்போ துடையார் கையிற்கோ சாரக்
கலதிகள் கட்டுரை விட்டு
அஞ்சித்தே விரிய எழுந்தநஞ் சதனை
யுண்டம ரர்க்கமு தருளி
இஞ்சிக்கே கதலிக் கனிவிழக் கமுகின்
குலையொடும் பழம்விழத் தெங்கின்
மிஞ்சுக்கே மஞ்சு சேர்பொழில் வீழி
மிழலையா னெனவினை கெடுமே. 10
வேந்தர்வந் திறைஞ்ச வேதியர் வீழி
மிழலையுள் விண்ணிழி விமானத்
தேய்ந்ததன் றேவி யோடுறை கின்ற
ஈசனை யெம்பெரு மானைத்
தோய்ந்தநீர்த் தோணி புரத்துறை மறையோன்
தூமொழி ஞானசம் பந்தன்
வாய்ந்தபா மாலை வாய்நவில் வாரை
வானவர் வழிபடு வாரே.
திருச்சிற்றம்பலம்