விடகிலேன் அடிநாயேன் பாடல் வரிகள் (vitakilen atinayen) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவையாறு தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவையாறு
சுவாமி : செம்பொற்சோதீசுவரர்
அம்பாள் : அறம்வளர்த்தநாயகி

விடகிலேன் அடிநாயேன்

விடகிலேன் அடிநாயேன்
வேண்டியக்கால் யாதொன்றும்
இடகிலேன் அமணர்கள்தம்
அறவுறைகேட் டலமலந்தேன்
தொடர்கின்றேன் உன்னுடைய
தூமலர்ச்சே வடிகாண்பான்
அடைகின்றேன் ஐயாறர்க்
காளாய்நான் உய்ந்தேனே. 1

செம்பவளத் திருவுருவர்
திகழ்சோதி குழைக்காதர்
கொம்பமருங் கொடிமருங்குற்
கோல்வளையா ளொருபாகர்
வம்பவிழும் மலர்க்கொன்றை
வளர்சடைமேல் வைத்துகந்த
அம்பவள ஐயாறர்க்
காளாய்நான் உய்ந்தேனே. 2

நணியானே சேயானே
நம்பானே செம்பொன்னின்
துணியானே தோலானே
சுண்ணவெண் ணீற்றானே
மணியானே வானவர்க்கு
மருந்தாகிப் பிணிதீர்க்கும்
அணியானே ஐயாறர்க்
காளாய்நான் உய்ந்தேனே. 3

ஊழித்தீ யாய்நின்றாய்
உள்குவார் உள்ளத்தாய்
வாழித்தீ யாய்நின்றாய்
வாழ்த்துவார் வாயானே
பாழித்தீ யாய்நின்றாய்
படர்சடைமேற் பனிமதியம்
ஆழித்தீ ஐயாறார்க்
காளாய்நான் உய்ந்தேனே. 4

சடையானே சடையிடையே
தவழுந்தண் மதியானே
விடையானே விடையேறிப்
புரமெரித்த வித்தகனே
உடையானே உடைதலைகொண்
டூரூருண் பலிக்குழலும்
அடையானே ஐயாறர்க்
காளாய்நான் உய்ந்தேனே. 5

நீரானே தீயானே
நெதியானே கதியானே
ஊரானே உலகானே
உடலானே உயிரானே
பேரானே பிறைசூடீ
பிணிதீர்க்கும் பெருமானென்
றாராத ஐயாறர்க்
காளாய்நான் உய்ந்தேனே. 6

கண்ணானாய் மணியானாய்
கருத்தானாய் *அருத்தானாய்
எண்ணானாய் எழுத்தானாய்
எழுத்தினுக்கோர் இயல்பானாய்
விண்ணானாய் விண்ணிடையே புரமெரித்த வேதியனே
அண்ணான ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.

* அருத்தனாயென்பதற்கு – உண்ணப்படும் பொருள்களாயின
எனப் பொருள்படுகின்றது. 7

மின்னானாய் உருமானாய்
வேதத்தின் பொருளானாய்
பொன்னானாய் மணியானாய்
பொருகடல்வாய் முத்தானாய்
நின்னானார் இருவர்க்குங்
காண்பரிய நிமிர்சோதி
அன்னானே ஐயாறர்க்
காளாய்நான் உய்ந்தேனே. 8

முத்திசையும் புனற்பொன்னி
மொய்பவளங் கொழித்துந்தப்
பத்தர்பலர் நீர்மூழ்கிப்
பலகாலும் பணிந்தேத்த
எத்திசையும் வானவர்கள்
எம்பெருமா னெனஇறைஞ்சும்
அத்திசையாம் ஐயாறர்க்
காளாய்நான் உய்ந்தேனே. 9

கருவரைசூழ் கடலிலங்கைக்
கோமானைக் கருத்தழியத்
திருவிரலால் உதகரணஞ்
செய்துகந்த சிவமூர்த்தி
பெருவரைசூழ் வையகத்தார்
பேர்நந்தி என்றேத்தும்
அருவரைசூழ் ஐயாறர்க்
காளாய்நான் உய்ந்தேனே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment