விரும்புந் திங்களுங் பாடல் வரிகள் (virumpun tinkalun) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் தண்டலைநீள்நெறி – தண்டலைச்சேரி தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : தண்டலைநீள்நெறி – தண்டலைச்சேரி
சுவாமி : நீணெறிநாதேசுவரர்
அம்பாள் : ஞானாம்பிகையம்மை

விரும்புந் திங்களுங்

விரும்புந் திங்களுங்
கங்கையும் விம்மவே
சுரும்புந் தும்பியுஞ்
சூழ்சடை யார்க்கிடங்
கரும்புஞ் செந்நெலுங்
காய்கமு கின்வளம்
நெருங்குந் தண்டலை
நீணெறி காண்மினே. 1

இகழுங் காலன்
இதயத்தும் என்னுளுந்
திகழுஞ் சேவடி
யான்திருந் தும்மிடம்
புகழும் பூமக
ளும்புணர் பூசுரர்
நிகழுந் தண்டலை
நீணெறி காண்மினே. 2

பரந்த நீலப்
படரெரி வல்விடங்
கரந்த கண்டத்தி
னான்கரு தும்மிடஞ்
சுரந்த மேதி
துறைபடிந் தோடையில்
நிரந்த தண்டலை
நீணெறி காண்மினே. 3

தவந்த என்புந்
தவளப் பொடியுமே
உவந்த மேனியி
னானுறை யும்மிடஞ்
சிவந்த பொன்னுஞ்
செழுந்தர ளங்களும்
நிவந்த தண்டலை
நீணெறி காண்மினே. 4

இப்பதிகத்தில் 5 -ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 5

இப்பதிகத்தில் 6-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 6

இப்பதிகத்தில் 7-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 7

இலங்கை வேந்தன்
இருபது தோளிற
விலங்க லில்லடர்த்
தான்விரும் பும்மிடஞ்
சலங்கொள் இப்பி
தரளமுஞ் சங்கமும்
நிலங்கொள் தண்டலை
நீணெறி காண்மினே. 8

கருவ ருந்தியின்
நான்முகன் கண்ணனென்
றிருவ ருந்தெரி
யாவொரு வன்னிடஞ்
செருவ ருந்திய
செம்பியன் கோச்செங்கண்
நிருபர் தண்டலை
நீணெறி காண்மினே. 9

கலவு சீவரத்
தார்கையில் உண்பவர்
குலவ மாட்டாக்
குழகன் உறைவிடஞ்
சுலவு மாமதி
லுஞ்சுதை மாடமும்
நிலவு தண்டலை
நீணெறி காண்மினே. 10

நீற்றர் தண்டலை
நீணெறி நாதனைத்
தோற்று மேன்மையர்
தோணி புரத்திறை
சாற்று ஞானசம்
பந்தன் தமிழ்வல்லார்
மாற்றில் செல்வர்
மறப்பர் பிறப்பையே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment