Viraiyaar kondraiyinai Thevaram song lyrics in tamil

விரையார் கொன்றையினாய் பாடல் வரிகள் (viraiyaar kondraiyinai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவான்மியூர் தலம் தொண்டைநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : தொண்டைநாடு
தலம் : திருவான்மியூர்
சுவாமி : பால்வண்ணநாதர்
அம்பாள் : சொக்கநாயகி

விரையார் கொன்றையினாய்

விரையார் கொன்றையினாய்
விடமுண்ட மிடற்றினனே
உரையார் பல்புகழாய்
உமைநங்கையோர் பங்குடையாய்
திரையார் தெண்கடல்சூழ்
திருவான்மி யூருறையும்
அரையா வுன்னையல்லா
லடையாதென தாதரவே. 1

இடியார் ஏறுடையாய்
இமையோர்தம் மணிமுடியாய்
கொடியார் மாமதியோ
டரவம்மலர்க் கொன்றையினாய்
செடியார் மாதவிசூழ்
திருவான்மி யூருறையும்
அடிகேள் உன்னையல்லால்
அடையாதென தாதரவே. 2

கையார் வெண்மழுவா
கனல்போல்திரு மேனியனே
மையார் ஒண்கண்நல்லாள்
உமையாள்வளர் மார்பினனே
செய்யார் செங்கயல்பாய்
திருவான்மி யூருறையும்
ஐயா வுன்னையல்லால்
அடையாதென தாதரவே. 3

பொன்போ லுஞ்சடைமேற்
புனல்தாங்கிய புண்ணியனே
மின்போ லும்புரிநூல்
விடையேறிய வேதியனே
தென்பால் வையமெலாந்
திகழுந்திரு வான்மிதன்னில்
அன்பா வுன்னையல்லால்
அடையாதென தாதரவே. 4

கண்ணா ருந்நுதலாய்
கதிர்சூழொளி மேனியின்மேல்
எண்ணார் வெண்பொடிநீ
றணிவாயெழில் வார்பொழில்சூழ்
திண்ணார் வண்புரிசைத்
திருவான்மி யூருறையும்
அண்ணா வுன்னையல்லால்
அடையாதென தாதரவே. 5

நீதீ நின்னையல்லால்
நெறியாதும் நினைந்தறியேன்
ஓதீ நான்மறைகள்
மறையோன்தலை யொன்றினையுஞ்
சேதீ சேதமில்லாத்
திருவான்மி யூருறையும்
ஆதீ உன்னையல்லால்
அடையாதென தாதரவே. 6

வானார் மாமதிசேர்
சடையாய்வரை போலவருங்
கானார் ஆனையின்தோல்
உரித்தாய்கறை மாமிடற்றாய்
தேனார் சோலைகள்சூழ்
திருவான்மி யூருறையும்
ஆனா யுன்னையல்லால்
அடையாதென தாதரவே. 7

பொறிவாய் நாகணையா
னொடுபூமிசை மேயவனும்
நெறியார் நீள்கழல்மேல்
முடிகாண்பரி தாயவனே
செறிவார் மாமதில்சூழ்
திருவான்மி யூருறையும்
அறிவே யுன்னையல்லால்
அடையாதென தாதரவே. 8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 9

குண்டா டுஞ்சமணர்
கொடுஞ்சாக்கிய ரென்றிவர்கள்
கண்டார் காரணங்கள்
கருதாதவர் பேசநின்றாய்
திண்டேர் வீதியதார்
திருவான்மி யூருறையும்
அண்டா வுன்னையல்லால்
அடையாதென தாதரவே. 10

கன்றா ருங்கமுகின்
வயல்சூழ்தரு காழிதனில்
நன்றா னபுகழான்
மிகுஞானசம் பந்தனுரை
சென்றார் தம்மிடர்தீர்
திருவான்மி யூரதன்மேற்
குன்றா தேத்தவல்லார்
கொடுவல்வினை போயறுமே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment