தொண்டர்க்குத் தூநெறியாய் பாடல் வரிகள் (tontarkkut tuneriyay) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருத்தலையாலங்காடு தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருத்தலையாலங்காடுதொண்டர்க்குத் தூநெறியாய்

தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் றன்னைச்
சூழ்நரகில் வீழாமே காப்பான் றன்னை
அண்டத்துக் கப்பாலைக் கப்பா லானை
ஆதிரைநா ளாதரித்த அம்மான் றன்னை
முண்டத்தின் முளைத்தெழுந்த தீயா னானை
மூவுருவத் தோருருவாய் முதலாய் நின்ற
தண்டத்திற் றலையாலங் காடன் றன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே. 1

அக்கிருந்த அரையானை அம்மான் றன்னை
அவுணர்புர மொருநொடியி லெரிசெய் தானைக்
கொக்கிருந்த மகுடத்தெங் கூத்தன் றன்னைக்
குண்டலஞ்சேர் காதானைக் குழைவார் சிந்தை
புக்கிருந்து போகாத புனிதன் றன்னைப்
புண்ணியனை எண்ணருஞ்சீர்ப் போக மெல்லாந்
தக்கிருந்த தலையாலங் காடன் றன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே. 2

மெய்த்தவத்தை வேதத்தை வேத வித்தை
விளங்கிளமா மதிசூடும் விகிர்தன் றன்னை
எய்த்தவமே உழிதந்த ஏழை யேனை
இடர்க்கடலில் வீழாமே யேற வாங்கிப்
பொய்த்தவத்தா ரறியாத நெறிநின் றானைப்
புனல்கரந்திட் டுமையொடொரு பாகம் நின்ற
தத்துவனைத் தலையாலங் காடன் றன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே. 3

சிவனாகித் திசைமுகனாய்த் திருமா லாகிச்
செழுஞ்சுடராய்த் தீயாகி நீரு மாகிப்
புவனாகிப் புவனங்க ளனைத்து மாகிப்
பொன்னாகி மணியாகி முத்து மாகிப்
பவனாகிப் பவனங்க ளனைத்து மாகிப்
பசுவேறித் திரிவானோர் பவனாய் நின்ற
தவனாய தலையாலங் காடன் றன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே. 4

கங்கையெனுங் கடும்புனலைக் கரந்தான் றன்னைக்
காமருபூம் பொழிற்கச்சிக் கம்பன் றன்னை
அங்கையினில் மான்மறியொன் றேந்தி னானை
ஐயாறு மேயானை ஆரூ ரானைப்
பங்கமிலா அடியார்க்குப் பரிந்தான் றன்னைப்
பரிதிநிய மத்தானைப் பாசூ ரானைச்
சங்கரனைத் தலையாலங் காடன் றன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே. 5

விடந்திகழும் அரவரைமேல் வீக்கி னானை
விண்ணவர்க்கு மெண்ணரிய அளவி னானை
அடைந்தவரை அமருலக மாள்விப் பானை
அம்பொன்னைக் கம்பமா களிறட் டானை
மடந்தையொரு பாகனை மகுடந் தன்மேல்
வார்புனலும் வாளரவும் மதியும் வைத்த
தடங்கடலைத் தலையாலங் காடன் றன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே. 6

விடையேறிக் கடைதோறும் பலிகொள் வானை
வீரட்டம் மேயானை வெண்ணீற் றானை
முடைநாறு முதுகாட்டி லாட லானை
முன்னானைப் பின்னானை அந்நா ளானை
உடையாடை யுரிதோலே உகந்தான் றன்னை
உமையிருந்த பாகத்து ளொருவன் றன்னைச்
சடையானைத் தலையாலங் காடன் றன்னை
சாராதே சாலநாள் போக்கி னேனே. 7

கரும்பிருந்த கட்டிதனைக் கனியைத் தேனைக்
கன்றாப்பின் நடுதறியைக் காறை யானை
இரும்பமர்ந்த மூவிலைவே லேந்தி னானை
என்னானைத் தென்னானைக் காவான் றன்னைச்
சுரும்பமரும் மலர்க்கொன்றை சூடி னானைத்
தூயானைத் தாயாகி உலகுக் கெல்லாந்
தரும்பொருளைத் தலையாலங் காடன் றன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே. 8

பண்டளவு நரம்போசைப் பயனைப் பாலைப்
படுபயனைக் கடுவெளியைக் கனலைக் காற்றைக்
கண்டளவிற் களிகூர்வார்க் கெளியான் றன்னைக்
காரணனை நாரணனைக் கமலத் தோனை
எண்டளவி லென்னெஞ்சத் துள்ளே நின்ற
எம்மானைக் கைம்மாவி னுரிவை பேணுந்
தண்டரனைத் தலையாலங் காடன் றன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே. 9

கைத்தலங்கள் இருபதுடை அரக்கர் கோமான்
கயிலைமலை அதுதன்னைக் கருதா தோடி
முத்திலங்கு முடிதுளங்க வளைக ளெற்றி
முடுகுதலுந் திருவிரலொன் றவன்மேல் வைப்பப்
பத்திலங்கு வாயாலும் பாடல் கேட்டுப்
பரிந்தவனுக் கிராவணனென் றீந்த நாம
தத்துவனைத் தலையாலங் காடன் றன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment