வேதியா வேத பாடல் வரிகள் (vetiya veta) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருஆலவாய் – மதுரை தலம் பாண்டியநாடு நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : பாண்டியநாடு
தலம் : திருஆலவாய் – மதுரை
சுவாமி : சொக்கநாதேசுவரர்
அம்பாள் : மீனாட்சியம்மை
வேதியா வேத
வேதியா வேத கீதா
விண்ணவர் அண்ணா என்றென்
றோதியே மலர்கள் தூவி
ஒருங்கிநின் கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய்
படர்சடை மதியஞ் சூடும்
ஆதியே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே. 1
நம்பனே நான்மு கத்தாய்
நாதனே ஞான மூர்த்தி
என்பொனே ஈசா என்றென்
றேத்திநான் ஏசற் றென்றும்
பின்பினே திரிந்து நாயேன்
பேர்த்தினிப் பிறவா வண்ணம்
அன்பனே ஆலவாயில் அப்பனே
அருள் செயாயே. 2
ஒருமருந் தாகி யுள்ளாய்
உம்பரோ டுலகுக் கெல்லாம்
பெருமருந் தாகி நின்றாய்
பேரமு தின்சு வையாய்க்
கருமருந் தாகி யுள்ளாய்
ஆளும்வல் வினைகள் தீர்க்கும்
அருமருந் தால வாயில்
அப்பனே அருள்செ யாயே. 3
செய்யநின் கமல பாதஞ்
சேருமா தேவர் தேவே
மையணி கண்டத் தானே
மான்மறி மழுவொன் றேந்துஞ்
சைவனே சால ஞானங்
கற்றறி விலாத நாயேன்
ஐயனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே. 4
வெண்டலை கையி லேந்தி
மிகவுமூர் பலிகொண் டென்றும்
உண்டது மில்லை சொல்லில்
உண்டது நஞ்சு தன்னைப்
பண்டுனை நினைய மாட்டாப்
பளகனேன் உளம தார
அண்டனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே. 5
எஞ்சலில் புகலி தென்றென்
றேத்திநான் ஏசற் றென்றும்
வஞ்சக மொன்று மின்றி
மலரடி காணும் வண்ணம்
நஞ்சினை மிடற்றில் வைத்த
நற்பொருட் பதமே நாயேற்
கஞ்சலென் றால வாயில்
அப்பனே அருள்செ யாயே. 6
வழுவிலா துன்னை வாழ்த்தி
வழிபடுந் தொண்ட னேன்உன்
செழுமலர்ப் பாதங் காணத்
தெண்டிரை நஞ்ச முண்ட
குழகனே கோல வில்லீ
கூத்தனே மாத்தா யுள்ள
அழகனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே. 7
நறுமலர் நீருங் கொண்டு
நாடொறு மேத்தி வாழ்த்திச்
செறிவன சித்தம் வைத்துத்
திருவடி சேரும் வண்ணம்
மறிகடல் வண்ணன் பாகா
மாமறை யங்க மாறும்
அறிவனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே. 8
நலந்திகழ் வாயின் நூலாற்
சருகிலைப் பந்தர் செய்த
சிலந்தியை அரச தாள
அருளினாய் என்று திண்ணங்
கலந்துடன் வந்து நின்றாள்
கருதிநான் காண்ப தாக
அலந்தனன் ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே. 9
பொடிக்கொடு பூசிப் பொல்லாக்
குரம்பையிற் புந்தி யொன்றிப்
பிடித்துநின் றாள்க ளென்றும்
பிதற்றிநா னிருக்க மாட்டேன்
எடுப்பனென் றிலங்கைக் கோன்வந்
தெடுத்தலும் இருப துதோள்
அடர்த்தனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே.
இத்தலம் பாண்டி நாட்டிலுள்ளது.
திருச்சிற்றம்பலம்