வெண்மதி தவழ்மதில் பாடல் வரிகள் (venmati tavalmatil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவீழிமிழலை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவீழிமிழலை
சுவாமி : வீழியழகர்
அம்பாள் : அழகுமுலையம்மை

வெண்மதி தவழ்மதில்

வெண்மதி தவழ்மதில் மிழலையு ளீர்சடை
ஒண்மதி அணியுடை யீரே
ஒண்மதி அணியுடை யீருமை உணர்பவர்
கண்மதி மிகுவது கடனே. 1

விதிவழி மறையவர் மிழலையு ளீர்நடம்
சதிவழி வருவதொர் சதிரே
சதிவழி வருவதொர் சதிருடை யீருமை
அதிகுணர் புகழ்வதும் அழகே. 2

விரைமலி பொழிலணி மிழலையு ளீரொரு
வரைமிசை உறைவதும் வலதே
வரைமிசை உறைவதொர் வலதுடை யீருமை
உரைசெயும் அவைமறை யொலியே. 3

விட்டெழில் பெறுபுகழ் மிழலையு ளீர்கையில்
இட்டெழில் பெறுகிற தெரியே
இட்டெழில் பெறுகிற தெரியுடை யீர்புரம்
அட்டது வரைசிலை யாலே. 4

வேணிகர் கண்ணியர் மிழலையு ளீர்நல
பானிகர் உருவுடை யீரே
பானிகர் உருவுடை யீரும துடனுமை
தான்மிக உறைவது தவமே. 5

விரைமலி பொழிலணி மிழலையு ளீர்சென்னி
நிரையுற அணிவது நெறியே
நிரையுற அணிவதோர் நெறியுடை யீரும
தரையுற அணிவன அரவே. 6

விசையுறு புனல்வயல் மிழலையு ளீர்அர
வசைவுற அணிவுடை யீரே
அசைவுற அணிவுடை யீருமை அறிபவர்
நசையுறு நாவினர் தாமே. 7

விலங்கலொண் மதிளணி மிழலையு ளீரன்றவ்
இலங்கைமன் இடர்கெடுத் தீரே
இலங்கைமன் இடர்கெடுத் தீருமை யேத்துவார்
புலன்களை முனிவது பொருளே. 8

வெற்பமர் பொழிலணி மிழலையு ளீருமை
அற்புதன் அயனறி யானே
அற்புதன் அயனறி யாவகை நின்றவன்
நற்பதம் அறிவது நயமே. 9

வித்தக மறையவர் மிழலையு ளீரன்று
புத்தரொ டமணழித் தீரே
புத்தரொ டமணழித் தீருமைப் போற்றுவார்
பத்திசெய் மனமுடை யவரே. 10

விண்பயில் பொழிலணி மிழலையுள் ஈசனைச்
சண்பையுள் ஞானசம் பந்தன்
சண்பையுள் ஞானசம் பந்தன தமிழிவை
ஒண்பொருள் உணர்வதும் உணர்வே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment