Sivan Songs

வெங்கள்விம்மு குழலிளைய பாடல் வரிகள் | venkalvim mu kulalilaiya Thevaram song lyrics in tamil

வெங்கள்விம்மு குழலிளைய பாடல் வரிகள் (venkalvim mu kulalilaiya) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்புகலூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருப்புகலூர்
சுவாமி : அக்னிஸ்வரர்
அம்பாள் : கருந்தார்குழலியம்மை

வெங்கள்விம்மு குழலிளைய

வெங்கள்விம்மு குழலிளைய
ராடவ்வெறி விரவுநீர்ப்
பொங்குசெங்கட் கருங்கயல்கள்
பாயும்புக லூர்தனுள்
திங்கள்சூடித் திரிபுரமொ
ரம்பாஎரி யூட்டிய
எங்கள்பெம்மான் அடிபரவ
நாளும்மிடர் கழியுமே. 1

வாழ்ந்தநாளும் மினிவாழுநா
ளும்மிவை யறிதிரேல்
வீழ்ந்தநாளெம் பெருமானை
யேத்தாவிதி யில்லிர்காள்
போழ்ந்ததிங்கட் புரிசடை
யினான்றன்புக லூரையே
சூழ்ந்தவுள்ளம் உடையீர்கள்
உங்கள்துயர் தீருமே. 2

மடையின்நெய்தல் கருங்குவளை
செய்யம்மலர்த் தாமரை
புடைகொள் செந்நெல் விளைகழனி
மல்கும்புக லூர்தனுள்
தொடைகொள் கொன்றை புனைந்தானொர்
பாகம்மதி சூடியை
அடையவல்லார் அமருலகம்
ஆளப்பெறு வார்களே. 3

பூவுந்நீரும் பலியுஞ்
சுமந்துபுக லூரையே
நாவினாலே நவின்றேத்த
லோவார்செவித் துளைகளால்
யாவுங்கேளார் அவன்பெருமை
யல்லால்அடி யார்கள்தாம்
ஓவுநாளும் உணர்வொழிந்த
நாளென்றுளங் கொள்ளவே. 4

அன்னங்கன்னிப் பெடைபுல்கி
யொல்கியணி நடையவாய்ப்
பொன்னங்காஞ்சி மலர்ச்சின்ன
மாலும்புக லூர்தனுள்
முன்னம்மூன்று மதிலெரித்த
மூர்த்திதிறங் கருதுங்கால்
இன்னரென்னப் பெரிதரியர்
ஏத்தச்சிறி தெளியரே. 5

குலவராகக் குலம்இலரு
மாகக்குணம் புகழுங்கால்
உலகில்நல்ல கதிபெறுவ
ரேனும்மலர் ஊறுதேன்
புலவமெல்லாம் வெறிகமழும்
அந்தண்புக லூர்தனுள்
நிலவமல்கு சடையடிகள்
பாதம்நினை வார்களே. 6

ஆணும்பெண்ணும் மெனநிற்ப
ரேனும்மர வாரமாப்
பூணுமேனும் புகலூர்
தனக்கோர்பொரு ளாயினான்
ஊணும்ஊரார் இடுபிச்சை
யேற்றுண்டுடை கோவணம்
பேணுமேனும் பிரானென்ப
ரால்எம்பெரு மானையே. 7

உய்யவேண்டில் எழுபோதநெஞ்
சேயுயர் இலங்கைக்கோன்
கைகளொல்கக் கருவரையெடுத்
தானையோர் விரலினால்
செய்கைதோன்றச் சிதைத்தருள
வல்லசிவன் மேயபூம்
பொய்கைசூழ்ந்த புகலூர்
புகழப்பொருளாகுமே. 8

நேமியானும் முகநான்
குடையந்நெறி யண்ணலும்
ஆமிதென்று தகைந்தேத்தப்
போயாரழ லாயினான்
சாமிதாதை சரணாகு
மென்றுதலை சாய்மினோ
பூமியெல்லாம் புகழ்செல்வம்
மல்கும்புக லூரையே. 9

வேர்த்தமெய்யர் உருவத்துடை
விட்டுழல் வார்களும்
போர்த்தகூறைப் போதிநீழ
லாரும்புக லூர்தனுள்
தீர்த்தமெல்லாஞ் சடைக்கரந்த
தேவன்திறங் கருதுங்கால்
ஓர்த்துமெய்யென் றுணராது
பாதந்தொழு துய்ம்மினே. 10

புந்தியார்ந்த பெரியோர்கள்
ஏத்தும்புக லூர்தனுள்
வெந்த சாம்பற் பொடிப்பூச
வல்லவிடை யூர்தியை
அந்தமில்லா அனலாட
லானையணி ஞானசம்
பந்தன்சொன்ன தமிழ்பாடி
யாடக்கெடும் பாவமே.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment