வெங்கள் விம்மு வெறியார் பாடல் வரிகள் (venkal vim mu veriyar) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்புத்தூர் தலம் பாண்டியநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : பாண்டியநாடு
தலம் : திருப்புத்தூர்
சுவாமி : ஸ்ரீ தளீஸ்வரர்
அம்பாள் : சிவகாமி

வெங்கள் விம்மு வெறியார்

வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலை
திங்க ளோடு திளைக்குந் திருப்புத் தூர்க்
கங்கை தங்கு முடியா ரவர்போலும்
எங்கள் உச்சிஉறையும் இறையாரே. 1

வேனல் விம்மு வெறியார் பொழிற்சோலைத்
தேனும் வண்டுந் திளைக்குந் திருப்புத்தூர்
ஊனம் இன்றி யுறைவா ரவர்போலும்
ஏன முள்ளும் எயிறும் புனைவாரே. 2

பாங்கு நல்ல வரிவண் டிசைபாடத்
தேங்கொள் கொன்றை திளைக்குந் திருப்புத்தூர்
ஓங்கு கோயில் உறைவா ரவர்போலும்
தாங்கு திங்கள் தவழ்புன் சடையாரே. 3

நாற விண்ட நறுமா மலர்கவ்வித்
தேறல் வண்டு திளைக்குந் திருப்புத்தூர்
ஊறல் வாழ்க்கை யுடையா ரவர்போலும்
ஏறு கொண்ட கொடியெம் இறையாரே. 4

இசைவி ளங்கும் எழில்சூழ்ந் தியல்பாகத்
திசைவி ளங்கும் பொழில்சூழ் திருப்புத்தூர்
பசைவி ளங்கப் படித்தா ரவர்போலும்
வசைவி ளங்கும் வடிசேர்1 நுதலாரே.

பாடம் : 1 மடிசேர் 5

வெண்ணி றத்த விரையோ டலருந்தித்
தெண்ணி றத்த புனல்பாய் திருப்புத்தூர்
ஒண்ணி றத்த ஒளியா ரவர்போலும்
வெண்ணி றத்த விடைசேர் கொடியாரே. 6

நெய்த லாம்பல் கழுநீர் மலர்ந்தெங்கும்
செய்கண் மல்கு சிவனார் திருப்புத்தூர்த்
தையல் பாகம் மகிழ்ந்தா ரவர்போலும்
மையுள் நஞ்ச மருவும் மிடற்றாரே. 7

கருக்கம் எல்லாங் கமழும் பொழிற்சோலைத்
திருக்கொள் செம்மை விழவார் திருப்புத்தூர்
இருக்க வல்ல இறைவ ரவர்போலும்
அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே. 8

மருவி யெங்கும் வளரும் மடமஞ்ஞை
தெருவு தோறுந் திளைக்குந் திருப்புத்தூர்ப்
பெருகி வாழும் பெருமா னவன்போலும்
பிரமன் மாலும் அறியாப் பெரியோனே. 9

கூறைபோர்க்குந் தொழிலா ரமண்கூறல்
தேறல் வேண்டா தெளிமின் திருப்புத்தூர்
ஆறும் நான்கும் அமர்ந்தா ரவர்போலும்
ஏறுகொண்ட கொடியெம் இறையாரே. 10

நல்ல கேள்வி ஞான சம்பந்தன்
செல்வர் சேடர் உறையுந் திருப்புத்தூர்ச்
சொல்லல் பாடல் வல்லார் தமக்கென்றும்
அல்லல் தீரும் அவலம் அடையாவே.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment