வடிவுடை மாமலை பாடல் வரிகள் (vativutai mamalai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் நாகைக்காரோணம் – நாகப்பட்டினம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : நாகைக்காரோணம் – நாகப்பட்டினம்
சுவாமி : காயாரோகணேஸ்வரர்
அம்பாள் : கருந்தடங்கண்ணி

வடிவுடை மாமலை

வடிவுடை மாமலை மங்கைபங்
காகங்கை வார்சடையாய்
கடிகமழ் சோலை சுலவு
கடல்நாகைக் காரோணனே
பிடிமத வாரணம் பேணுந்
துரகநிற் கப்பெரிய
இடிகுரல் வெள்ளெரு தேறுமி
தென்னைகொல் எம்மிறையே. 1

கற்றார் பயில்கடல் நாகைக்கா
ரோணத்தெங் கண்ணுதலே
விற்றாங் கியகரம் வேல்நெடுங்
கண்ணி வியன்கரமே
நற்றாள் நெடுஞ்சிலை நாண்வலித்
தகர நின்கரமே
செற்றார் புரஞ்செற்ற சேவக
மென்னைகொல் செப்புமினே. 2

தூமென் மலர்க்கணை கோத்துத்தீ
வேள்வி தொழிற்படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த
கடல்நாகைக் காரோணநின்
நாமம் பரவி நமச்சிவா
யவென்னும் அஞ்செழுத்துஞ்
சாமன் றுரைக்கத் தருதிகண்
டாயெங்கள் சங்கரனே. 3

பழிவழி யோடிய பாவிப்
பறிதலைக் குண்டர்தங்கள்
மொழிவழி யோடி முடிவேன்
முடியாமைக் காத்துக்கொண்டாய்
கழிவழி யோதம் உலவு
கடல்நாகைக் காரோணவென்
வழிவழி யாளாகும் வண்ணம்
அருளெங்கள் வானவனே. 4

செந்துவர் வாய்க்கருங் கண்ணிணை
வெண்ணகைத் தேன்மொழியார்
வந்து வலஞ்செய்து மாநட
மாட மலிந்தசெல்வக்
கந்த மலிபொழில் சூழ்கடல்
நாகைக்கா ரோணமென்றுஞ்
சிந்தைசெய் வாரைப் பிரியா
திருக்குந் திருமங்கையே. 5

பனைபுரை கைம்மத யானை
யுரித்த பரஞ்சுடரே
கனைகடல் சூழ்தரு நாகைக்கா
ரோணத்தெங் கண்ணுதலே
மனைதுறந் தல்லுணா வல்லமண்
குண்டர் மயக்கநீக்கி
எனைநினைந் தாட்கொண்டாய்க் கென்னினி
யான்செயும் இச்சைகளே. 6

சீர்மலி செல்வம் பெரிதுடை
யசெம்பொன் மாமலையே
கார்மலி சோலை சுலவு
கடல்நாகைக் காரோணனே
வார்மலி மென்முலை யார்பலி
வந்திடச் சென்றிரந்து
ஊர்மலி பிச்சைகொண் டுண்பது
மாதிமை யோவுரையே. 7

வங்கம் மலிகடல் நாகைக்கா
ரோணத்தெம் வானவனே
எங்கள் பெருமானொர் விண்ணப்பம்
உண்டது கேட்டருளீர்
கங்கை சடையுட் கரந்தாயக்
கள்ளத்தை மெள்ளவுமை
நங்கை அறியிற்பொல் லாதுகண்டா
யெங்கள் நாயகனே. 8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் மறைந்து போயிற்று. 9

கருந்தடங் கண்ணியுந் தானுங்
கடல்நாகைக் காரோணத்தான்
இருந்த திருமலை யென்றிறைஞ்
சாதன் றெடுக்கலுற்றான்
பெருந்தலை பத்தும் இருபது
தோளும் பிதிர்ந்தலற
இருந்தரு ளிச்செய்த தேமற்றுச்
செய்திலன் எம்மிறையே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment