வாரணவு முலைமங்கை பாடல் வரிகள் (varanavu mulaimankai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கச்சிநெறிக்காரைக்காடு – காஞ்சிபுரம் தலம் தொண்டைநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : தொண்டைநாடு
தலம் : திருக்கச்சிநெறிக்காரைக்காடு – காஞ்சிபுரம்
சுவாமி : காரைத்திருநாதஈசுவரர்
அம்பாள் : காரார்குழலியம்மை

வாரணவு முலைமங்கை

வாரணவு முலைமங்கை
பங்கினராய் அங்கையினிற்
போரணவு மழுவொன்றங்
கேந்திவெண் பொடியணிவர்
காரணவு மணிமாடங்
கடைநவின்ற கலிக்கச்சி
நீரணவு மலர்ப்பொய்கை
நெறிக்காரைக் காட்டாரே 1

காரூரும் மணிமிடற்றார்
கரிகாடர் உடைதலைகொண்
டூரூரன் பலிக்குழல்வார்
உழைமானின் உரியதளர்
தேரூரு நெடுவீதிச்
செழுங்கச்சி மாநகர்வாய்
நீரூரும் மலர்ப்பொய்கை
நெறிக்காரைக் காட்டாரே. 2

கூறணிந்தார் கொடியிடையைக்
குளிர்சடைமேல் இளமதியோ
டாறணிந்தார் ஆடரவம்
பூண்டுகந்தார் ஆன்வெள்ளை
ஏறணிந்தார் கொடியதன்மேல்
என்பணிந்தார் வரைமார்பில்
நீறணிந்தார் கலிக்கச்சி
நெறிக்காரைக் காட்டாரே. 3

பிறைநவின்ற செஞ்சடைகள் பின்தாழப் பூதங்கள்
மறைநவின்ற பாடலோ டாடலராய் மழுவேந்திச்
சிறைநவின்ற வண்டினங்கள் தீங்கனிவாய்த் தேன்கதுவும்
நிறைநவின்ற கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே. 4

அன்றாலின் கீழிருந்தங்
கறம்புரிந்த அருளாளர்
குன்றாத வெஞ்சிலையிற்
கோளரவம் நாண்கொளுவி
ஒன்றாதார் புரம்மூன்றும்
ஓங்கெரியில் வெந்தவிய
நின்றாருங் கலிக்கச்சி
நெறிக்காரைக் காட்டாரே. 5

பன்மலர்கள் கொண்டடிக்கீழ்
வானோர்கள் பணிந்திறைஞ்ச
நன்மையிலா வல்லவுணர்
நகர்மூன்றும் ஒருநொடியில்
வின்மலையின் நாண்கொளுவி
வெங்கணையா லெய்தழித்த
நின்மலனார் கலிக்கச்சி
நெறிக்காரைக் காட்டாரே. 6

புற்றிடைவாள் அரவினொடு
புனைகொன்றை மதமத்தம்
எற்றொழியா அலைபுனலோ
டிளமதியம் ஏந்துசடைப்
பெற்றுடையார் ஒருபாகம்
பெண்ணுடையார் கண்ணமரும்
நெற்றியினார் கலிக்கச்சி
நெறிக்காரைக் காட்டாரே. 7

ஏழ்கடல்சூழ் தென்னிலங்கைக்
கோமானை யெழில்வரைவாய்த்
தாழ்விரலால் ஊன்றியதோர்
தன்மையினார் நன்மையினார்
ஆழ்கிடங்குஞ் சூழ்வயலு
மதில்புல்கி யழகமரும்
நீள்மறுகிற் கலிக்கச்சி
நெறிக்காரைக் காட்டாரே. 8

ஊண்டானும் ஒலிகடல்நஞ்
சுடைதலையிற் பலிகொள்வர்
மாண்டார்தம் எலும்பணிவர்
வரியரவோ டெழிலாமை
பூண்டாரும் ஓரிருவர்
அறியாமைப் பொங்கெரியாய்
நீண்டாருங் கலிக்கச்சி
நெறிக்காரைக் காட்டாரே. 9

குண்டாடிச் சமண்படுவார்
கூறைதனை மெய்போர்த்து
மிண்டாடித் திரிதருவார்
உரைப்பனகள் மெய்யல்ல
வண்டாருங் குழலாளை
வரையாகத் தொருபாகங்
கண்டாருங் கலிக்கச்சி
நெறிக்காரைக் காட்டாரே. 10

கண்ணாருங் கலிக்கச்சி
நெறிக்காரைக் காட்டுறையும்
பெண்ணாருந் திருமேனிப்
பெருமான தடிவாழ்த்தித்
தண்ணாரும் பொழிற்காழித்
தமிழ்ஞான சம்பந்தன்
பண்ணாருந் தமிழ்வல்லார்
பரலோகத் திருப்பாரே.

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது

திருச்சிற்றம்பலம்

Leave a Comment