வரைத்தலைப் பசும்பொனோ பாடல் வரிகள் (varaittalaip pacumpono) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருத்துருத்தி – குத்தாலம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருத்துருத்தி – குத்தாலம்
சுவாமி : உத்தரவேதீஸ்வரர்
அம்பாள் : பரிமளசுகந்த நாயகி
வரைத்தலைப் பசும்பொனோ
வரைத்தலைப் பசும்பொனோ
டருங்கலன்கள் உந்திவந்
திரைத்தலைச் சுமந்துகொண்
டெறிந்திலங்கு காவிரிக்
கரைத்தலைத் துருத்திபுக்
கிருப்பதே கருத்தினாய்
உரைத்தலைப் பொலிந்துனக்
குணர்த்துமாறு வல்லமே. 1
அடுத்தடுத்த கத்தியோடு
வன்னிகொன்றை கூவிளம்
தொடுத்துடன் சடைப்பெய்தாய்
துருத்தியாயோர் காலனைக்
கடுத்தடிப் புறத்தினா
னிறத்துதைத்த காரணம்
எடுத்தெடுத் துரைக்குமாறு
வல்லமாகின் நல்லமே. 2
கங்குல்கொண்ட திங்களோடு
கங்கைதங்கு செஞ்சடைச்
சங்கிலங்கு வெண்குழை
சரிந்திலங்கு காதினாய்
பொங்கிலங்கு பூணநூல்
உருத்திரா துருத்திபுக்
கெங்குநின் இடங்களா
அடங்கிவாழ்வ தென்கொலோ. 3
கருத்தினாலோர் காணியில்
விருத்தியில்லை தொண்டர்தம்
அருத்தியால்தம் மல்லல்சொல்லி
ஐயமேற்ப தன்றியும்
ஒருத்திபால் பொருத்திவைத்
துடம்புவிட்டி யோகியாய்
இருத்திநீ துருத்திபுக்
கிதென்னமாயம் என்பதே. 4
துறக்குமா சொலப்படாய்
துருத்தியாய் திருந்தடி
மறக்குமா றிலாதஎன்னை
மையல்செய்திம் மண்ணின்மேல்
பிறக்குமாறு காட்டினாய்
பிணிப்படும் உடம்புவிட்
டிறக்குமாறு காட்டினாய்க்
கிழுக்குகின்ற தென்னையே. 5
வெயிற்கெதிர்ந் திடங்கொடா
தகங்குளிர்ந்த பைம்பொழில்
துயிற்கெதிர்ந்த புள்ளினங்கள்
மல்குதண் துருத்தியாய்
மயிற்கெதிர்ந் தணங்குசாயல்
மாதொர்பாக மாகமூ
எயிற்கெதிர்ந் தொரம்பினால்
எரித்தவில்லி யல்லையே. 6
கணிச்சியம்ப டைச்செல்வா
கழிந்தவர்க் கொழிந்தசீர்
துணிச்சிரக் கிரந்தையாய்
கரந்தையாய் துருத்தியாய்
அணிப்படுந் தனிப்பிறைப்
பனிக்கதிர்க் கவாவுநல்
மணிப்படும்பை நாகம்நீ
மகிழ்ந்தஅண்ணல் அல்லையே. 7
சுடப்பொடிந் துடம்பிழந்
தநங்கனாய மன்மதன்
இடர்ப்படக் கடந்திடந்
துருத்தியாக எண்ணினாய்
கடற்படை யுடையஅக்
கடல்இலங்கை மன்னனை
அடற்பட அடுக்கலில்
அடர்த்தஅண்ணல் அல்லையே. 8
களங்குளிர்ந் திலங்குபோது
காதலானும் மாலுமாய்
வளங்கிளம்பொ னங்கழல்
வணங்கிவந்து காண்கிலார்
துளங்கிளம்பி றைச்செனித்
துருத்தியாய் திருந்தடி
உளங்குளிர்ந்த போதெலாம்
உகந்துகந் துரைப்பனே. 9
புத்தர்தத் துவமிலாச்
சமணுரைத்த பொய்தனை
உத்தமமெனக்கொளா
துகந்தெழுந்து வண்டினம்
துத்தநின்று பண்செயுஞ்
சூழ்பொழில் துருத்தியெம்
பித்தர்பித்த னைத்தொழப்
பிறப்பறுதல் பெற்றியே. 10
கற்றுமுற்றி னார்தொழுங்
கழுமலத் தருந்தமிழ்
சுற்றுமுற்று மாயினான்
அவன்பகர்ந்த சொற்களால்
பெற்றமொன் றுயர்த்தவன்
பெருந்துருத்தி பேணவே
குற்றமுற்று மின்மையிற்
குணங்கள்வந்து கூடுமே.
திருச்சிற்றம்பலம்