வண்ணமா மலர்கொடு பாடல் வரிகள் (vannama malarkotu) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருமுதுகுன்றம் – விருத்தாசலம் தலம் நடுநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : நடுநாடு
தலம் : திருமுதுகுன்றம் – விருத்தாசலம்
சுவாமி : பழமலைநாதர்
அம்பாள் : பெரியநாயகி

வண்ணமா மலர்கொடு

வண்ணமா மலர்கொடு
வானவர் வழிபட
அண்ணலார் ஆயிழை
யாளொடும் அமர்விடம்
விண்ணின்மா மழைபொழிந்
திழியவெள் ளருவிசேர்
திண்ணிலார் புறவணி
திருமுது குன்றமே. 1

வெறியுலாங் கொன்றையந்
தாரினான் மேதகு
பொறியுலாம் அரவசைத்
தாடியோர் புண்ணியன்
மறியுலாங் கையினான்
மங்கையோ டமர்விடஞ்
செறியுளார் புறவணி
திருமுது குன்றமே. 2

ஏறினார் விடைமிசை
யிமையவர் தொழவுமை
கூறனார் கொல்புலித்
தோலினார் மேனிமேல்
நீறனார் நிறைபுனற்
சடையனார் நிகழ்விடந்
தேறலார் பொழிலணி
திருமுது குன்றமே. 3

உரையினார் உறுபொரு
ளாயினான் உமையொடும்
விரையினார் கொன்றைசேர்
சடையினார் மேவிடம்
உரையினார் ஒலியென
வோங்குமுத் தாறுமெய்த்
திரையினார் எறிபுனல்
திருமுது குன்றமே. 4

கடியவா யினகுரற்
களிற்றினைப் பிளிறவோர்
இடியவெங் குரலினோ
டாளிசென் றிடுநெறி
வடியவாய் மழுவினன்
மங்கையோ டமர்விடம்
செடியதார் புறவணி
திருமுது குன்றமே. 5

கானமார் கரியின்ஈர்
உரிவையார் பெரியதோர்
வானமார் மதியினோ
டரவர்தாம் மருவிடம்
ஊனமா யினபிணி
யவைகெடுத் துமையொடுந்
தேனமார் பொழிலணி
திருமுது குன்றமே. 6

மஞ்சர்தாம் மலர்கொடு
வானவர் வணங்கிட
வெஞ்சொலார் வேடரோ
டாடவர் விரும்பவே
அஞ்சொலாள் உமையொடும்
மமர்விட மணிகலைச்
செஞ்சொலார் பயில்தருந்
திருமுது குன்றமே. 7

காரினார் அமர்தருங்
கயிலைநன் மலையினை
ஏரினார் முடியிரா
வணனெடுத் தானிற
வாரினார் முலையொடும்
மன்னினார் மருவிடம்
சீரினார் திகழ்தருந்
திருமுது குன்றமே. 8

ஆடினார் கானகத்
தருமறை யின்பொருள்
பாடினார் பலபுகழ்ப்
பரமனார் இணையடி
ஏடினார் மலர்மிசை
அயனுமா லிருவரும்
தேடினார் அறிவொணார்
திருமுது குன்றமே. 9

மாசுமெய் தூசுகொண்
டுழல்சமண் சாக்கியர்
பேசுமெய் யுளவல்ல
பேணுவீர் காணுமின்
வாசமார் தருபொழில்
வண்டினம் இசைசெயத்
தேசமார் புகழ்மிகுந்
திருமுது குன்றமே. 10

திண்ணினார் புறவணி
திருமுது குன்றரை
நண்ணினான் காழியுள்
ஞானசம் பந்தன்சொல்
எண்ணினால் ஈரைந்து
மாலையும் இயலுமாப்
பண்ணினாற் பாடுவார்க்
கில்லையாம் பாவமே.

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment