வான்சொட்டச் சொட்டநின் பாடல் வரிகள் (vancottac cottanin) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவீழிமிழலை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவீழிமிழலை
சுவாமி : வீழியழகர்
அம்பாள் : அழகுமுலையம்மை

வான்சொட்டச் சொட்டநின்

வான்சொட்டச் சொட்டநின் றட்டும்
வளர்மதி யோடயலே
தேன்சொட்டச் சொட்டநின் றட்டுந்
திருக்கொன்றை சென்னிவைத்தீர்
மான்பெட்டை நோக்கி மணாளீர்
மணிநீர் மிழலையுள்ளீர்
நான்சட்ட வும்மை மறக்கினும்
என்னைக் குறிக்கொண்மினே. 1

அந்தமும் ஆதியு மாகிநின்
றீரண்டம் எண்டிசையும்
பந்தமும் வீடும் பரப்புகின்
றீர்பசு வேற்றுகந்தீர்
வெந்தழல் ஓம்பு மிழலையுள்
ளீரென்னைத் தென்றிசைக்கே
உந்திடும் போது மறக்கினும்
என்னைக் குறிக்கொண்மினே. 2

அலைக்கின்ற நீர்நிலங் காற்றனல்
அம்பர மாகிநின்றீர்
கலைக்கன்று சேருங் கரத்தீர்
கலைப்பொரு ளாகிநின்றீர்
விலக்கின்றி நல்கும் மிழலையுள்
ளீர்மெய்யிற் கையொடுகால்
குலைக்கின்று நும்மை மறக்கினும்
என்னைக் குறிக்கொண்மினே. 3

தீத்தொழி லான்றலை தீயிலிட்
டுச்செய்த வேள்விசெற்றீர்
பேய்த்தொழி லாட்டியைப் பெற்றுடை
யீர்பிடித் துத்திரியும்
வேய்த்தொழி லாளர் மிழலையுள்
ளீர்விக்கி அஞ்செழுத்தும்
ஓத்தொழிந் தும்மை மறக்கினும்
என்னைக் குறிக்கொண்மினே. 4

தோட்பட்ட நாகமுஞ் சூலமுஞ்
சுற்றியும் பத்திமையான்
மேற்பட்ட அந்தணர் வீழியும்
என்னையும் வேறுடையீர்
நாட்பட்டு வந்து பிறந்தேன்
இறக்க நமன்தமர்தம்
கோட்பட்டு நும்மை மறக்கினும்
என்னைக் குறிக்கொண்மினே. 5

கண்டியிற் பட்ட கழுத்துடை
யீர்கரி காட்டிலிட்ட
பண்டியிற் பட்ட பரிகலத்
தீர்பதி வீழிகொண்டீர்
உண்டியிற் பட்டினி நோயில்
உறக்கத்தில் உம்மையைவர்
கொண்டியிற் பட்டு மறக்கினும்
என்னைக் குறிக்கொண்மினே. 6

தோற்றங்கண் டான்சிர மொன்றுகொண்
டீர்தூய வெள்ளெருதொன்
றேற்றங்கொண் டீரெழில் வீழி
மிழலை இருக்கைகொண்டீர்
சீற்றங்கொண் டென்மேல் சிவந்ததொர்
பாசத்தால் வீசியவெங்
கூற்றங்கண் டும்மை மறக்கினும்
என்னைக் குறிக்கொண்மினே. 7

சுழிப்பட்ட கங்கையுந் திங்களுஞ்
சூடிச்சொக் கம்பயின்றீர்
பழிப்பட்ட பாம்பரைப் பற்றுடை
யீர்படர் தீப்பருக
விழிப்பட்ட காமனை வீட்டீர்
மிழலையுள் ளீர்பிறவிச்
சுழிப்பட்டு நும்மை மறக்கினும்
என்னைக் குறிக்கொண்மினே. 8

பிள்ளையிற் பட்ட பிறைமுடி
யீர்மறை யோதவல்லீர்
வெள்ளையிற் பட்டதோர் நீற்றீர்
விரிநீர் மிழலையுள்ளீர்
நள்ளையிற் பட்டைவர் நக்கரைப்
பிக்க நமன்தமர்தங்
கொள்ளையிற் பட்டு மறக்கினும்
என்னைக் குறிக்கொண்மினே. 9

கறுக்கொண் டரக்கன் கயிலையைப்
பற்றிய கையுமெய்யும்
நெறுக்கென் றிறச்செற்ற சேவடி
யாற்கூற்றை நீறுசெய்தீர்
வெறிக்கொன்றை மாலை முடியீர்
விரிநீர் மிழலையுள்ளீர்
இறக்கின்று நும்மை மறக்கினும்
என்னைக் குறிக்கொண்மினே.

இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment