வானவன்காண் வானவர்க்கும் பாடல் வரிகள் (vanavankan vanavarkkum) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் சிவபுரம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : சிவபுரம்வானவன்காண் வானவர்க்கும்

வானவன்காண் வானவர்க்கும் மேலா னான்காண்
வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும்
ஆனவன்காண் ஆனைந்து மாடி னான்காண்
ஐயன்காண் கையிலன லேந்தி யாடுங்
கானவன்காண் கானவனுக் கருள்செய் தான்காண்
கருதுவார் இதயத்துக் கமலத் தூறுந்
தேனவன்காண் சென்றடையாச் செல்வன் றான்காண்
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. 1

நக்கன்காண் நக்கரவ மரையி லார்த்த
நாதன்காண் பூதகண மாட ஆடுஞ்
சொக்கன்காண் கொக்கிறகு சூடி னான்காண்
துடியிடையாள் துணைமுலைக்குச் சேர்வ தாகும்
பொக்கன்காண் பொக்கணத்த வெண்ணீற் றான்காண்
புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற
திக்கன்காண் செக்கரது திகழு மேனிச்
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. 2

வம்பின்மலர்க் குழலுமையாள் மணவா ளன்காண்
மலரவன்மால் காண்பரிய மைந்தன் றான்காண்
கம்பமதக் கரிபிளிற வுரிசெய் தோன்காண்
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டத் தான்காண்
அம்பர்நகர்ப் பெருங்கோயி லமர்கின் றான்காண்
அயவந்தி யுள்ளான்காண் ஐயா றன்காண்
செம்பொனெனத் திகழ்கின்ற உருவத் தான்காண்
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. 3

பித்தன்காண் தக்கன்றன் வேள்வி யெல்லாம்
பீடழியச் சாடி யருள்கள் செய்த
முத்தன்காண் முத்தீயு மாயி னான்காண்
முனிவர்க்கும் வானவர்க்கும் முதலாய் மிக்க
அத்தன்காண் புத்தூரி லமர்ந்தான் றான்காண்
அரிசிற் பெருந்துறையே ஆட்சி கொண்ட
சித்தன்காண் சித்தீச் சரத்தான் றான்காண்
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. 4

தூயவன்காண் நீறு துதைந்த மேனி
துளங்கும் பளிங்கனைய சோதி யான்காண்
தீயவன்காண் தீயவுணர் புரஞ்செற் றான்காண்
சிறுமான்கொள் செங்கையெம் பெருமான் றான்காண்
ஆயவன்காண் ஆரூரி லம்மான் றான்காண்
அடியார்கட் காரமுத மாயி னான்காண்
சேயவன்காண் சேமநெறி யாயி னான்காண்
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. 5

பாரவன்காண் பாரதனிற் பயிரா னான்காண்
பயிர்வளர்க்குந் துளியவன்காண் துளியில் நின்ற
நீரவன்காண் நீர்சடைமேல் நிகழ்வித் தான்காண்
நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோங்கும்
பேரவன்காண் பிறையெயிற்று வெள்ளைப் பன்றி
பிரியாது பலநாளும் வழிபட் டேத்துஞ்
சீரவன்காண் சீருடைய தேவர்க் கெல்லாஞ்
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. 6

வெய்யவன்காண் வெய்யகன லேந்தி னான்காண்
வியன்கெடில வீரட்டம் மேவி னான்காண்
மெய்யவன்காண் பொய்யர்மனம் விரவா தான்காண்
வீணையோ டிசைந்துமிகு பாடல் மிக்க
கையவன்காண் கையில்மழு வேந்தி னான்காண்
காமரங்கம் பொடிவீழ்த்த கண்ணி னான்காண்
செய்யவன்காண் செய்யவளை மாலுக் கீந்த
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. 7

இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் மறைந்து போயிற்று. 8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் மறைந்து போயிற்று. 9

கலையாரு நூலங்க மாயி னான்காண்
கலைபயிலுங் கருத்தன்காண் திருத்த மாகி
மலையாகி மறிகடலேழ் சூழ்ந்து நின்ற
மண்ணாகி விண்ணாகி நின்றான் றான்காண்
தலையாய மலையெடுத்த தகவி லோனைத்
தகர்ந்துவிழ ஒருவிரலாற் சாதித் தாண்ட
சிலையாரும் மடமகளோர் கூறன் றான்காண்
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment