வானத்துயர்தண் மதிதோய்சடைமேல் பாடல் வரிகள் (vanattuyartan matitoycataimel) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருஈங்கோய்மலை – திருஎன்கோயிமலை தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருஈங்கோய்மலை – திருஎன்கோயிமலை
சுவாமி : மரகதாசலேஸ்வரர்
அம்பாள் : மரகதவல்லி

வானத்துயர்தண் மதிதோய்சடைமேல்

வானத்துயர்தண் மதிதோய்சடைமேல்
மத்த மலர்சூடித்
தேனொத்தனமென் மொழிமான்விழியாள்
தேவி பாகமாக்
கானத்திரவில் எரிகொண்டாடுங்
கடவுள் உலகேத்த
ஏனத்திரள்வந் திழியுஞ்சாரல்
ஈங்கோய் மலையாரே. 1

சூலப்படையொன் றேந்திஇரவிற்
சுடுகா டிடமாகக்
கோலச்சடைகள் தாழக்குழல்யாழ்
மொந்தை கொட்டவே
பாலொத்தனைய மொழியாள்காண
ஆடும் பரமனார்
ஏலத்தொடுநல் இலவங்கமழும்
ஈங்கோய் மலையாரே. 2

கண்கொள்நுதலார் கறைகொள்மிடற்றார்
கரியின் உரிதோலார்
விண்கொள்மதிசேர் சடையார்விடையார்
கொடியார் வெண்ணீறு
பெண்கொள்திருமார் பதனிற்பூசும்
பெம்மான் எமையாள்வார்
எண்கும்அரியுந் திரியுஞ்சாரல்
ஈங்கோய் மலையாரே. 3

மறையின்னிசையார் நெறிமென்கூந்தல்
மலையான் மகளோடும்
குறைவெண்பிறையும் புனலுந்நிலவுங்
குளிர்புன் சடைதாழப்
பறையுங்குழலுங் கழலும்ஆர்ப்பப்
படுகாட் டெரியாடும்
இறைவர்சிறைவண் டறைபூஞ்சாரல்
ஈங்கோய் மலையாரே. 4

நொந்தசுடலைப் பொடிநீறணிவார்
நுதல்சேர் கண்ணினார்
கந்தமலர்கள் பலவுந்நிலவு
கமழ்புன் சடைதாழப்
பந்தண்விரலாள் பாகமாகப்
படுகாட் டெரியாடும்
எந்தம்மடிகள் கடிகொள்சாரல்
ஈங்கோய் மலையாரே. 5

நீறார்அகலம் உடையார்நிரையார்
கொன்றை அரவோடும்
ஆறார்சடையார் அயில்வெங்கணையால்
அவுணர் புரம்மூன்றும்
சீறாஎரிசெய் தேவர்பெருமான்
செங்கண் அடல்வெள்ளை
ஏறார்கொடியார் உமையாளோடும்
ஈங்கோய் மலையாரே. 6

வினையாயினதீர்த் தருளேபுரியும்
விகிர்தன் விரிகொன்றை
நனையார்முடிமேல் மதியஞ்சூடும்
நம்பா னலமல்கு
தனையார்கமல மலர்மேலுறைவான்
தலையோ டனலேந்தும்
எனையாளுடையான் உமையாளோடும்
ஈங்கோய் மலையாரே. 7

பரக்கும்பெருமை இலங்கையென்னும்
பதியிற் பொலிவாய
அரக்கர்க்கிறைவன் முடியுந்தோளும்
அணியார் விரல்தன்னால்
நெருக்கியடர்த்து நிமலாபோற்றி
யென்று நின்றேத்த
இரக்கம்புரிந்தார் உமையாளோடும்
ஈங்கோய் மலையாரே. 8

வரியார்புலியின் உரிதோலுடையான்
மலையான் மகளோடும்
பிரியாதுடனாய் ஆடல்பேணும்
பெம்மான் திருமேனி
அரியோடயனும் அறியாவண்ணம்
அளவில் பெருமையோ
டெரியாய்நிமிர்ந்த எங்கள் பெருமான்
ஈங்கோய் மலையாரே. 9

பிண்டியேன்று பெயராநிற்கும்
பிணங்கு சமணரும்
மண்டைகலனாக் கொண்டுதிரியும்
மதியில் தேரரும்
உண்டிவயிறார் உரைகள்கொள்ளா
துமையோ டுடனாகி
இண்டைச்சடையான் இமையோர்பெருமான்
ஈங்கோய் மலையாரே. 10

விழவாரொலியும் முழவும்ஓவா
வேணு புரந்தன்னுள்
அழலார்வண்ணத் தடிகளருள்சே
ரணிகொள் சம்பந்தன்
எழிலார்சுனையும் பொழிலும்புடைசூழ்
ஈங்கோய்மலையீசன்
கழல்சேர்பாடல் பத்தும்வல்லார்
கவலை களைவாரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment