வானத் திளமதியும் பாடல் வரிகள் (vanat tilamatiyum) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருச்சாய்க்காடு – சாயாவனம் தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருச்சாய்க்காடு – சாயாவனம்வானத் திளமதியும்

வானத் திளமதியும் பாம்புந் தம்மில்
வளர்சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலுந்
தேனைத் திளைத்துண்டு வண்டு பாடுந்
தில்லை நடமாடுந் தேவர் போலும்
ஞானத்தின் ஒண்சுடராய் நின்றார் போலும்
நன்மையுந் தீமையு மானார் போலுந்
தேனொத் தடியார்க் கினியார் போலுந்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. 1

விண்ணோர் பரவநஞ் சுண்டார் போலும்
வியன்துருத்தி வேள்விக் குடியார் போலும்
அண்ணா மலையுறையும் அண்ணல் போலும்
அதியரைய மங்கை யமர்ந்தார் போலும்
பண்ணார் களிவண்டு பாடி யாடும்
பராய்த்துறையுள் மேய பரமர் போலுந்
திண்ணார் புகார்முத் தலைக்குந் தெண்ணீர்த்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. 2

கானிரிய வேழ முரித்தார் போலுங்
காவிரிப்பூம் பட்டினத் துள்ளார் போலும்
வானிரிய வருபுரமூன் றெரித்தார் போலும்
வடகயிலை மலையதுதம் மிருக்கை போலும்
ஊனிரியத் தலைகலனா வுடையார் போலும்
உயர்தோணி புரத்துறையு மொருவர் போலுந்
தேனிரிய மீன்பாயுந் தெண்ணீர்ப் பொய்கைத்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. 3

ஊனுற்ற வெண்டலைசேர் கையர் போலும்
ஊழி பலகண் டிருந்தார் போலும்
மானுற்ற கரதலமொன் றுடையார் போலும்
மறைக்காட்டுக் கோடி மகிழ்ந்தார் போலுங்
கானுற்ற ஆட லமர்ந்தார் போலுங்
காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலுந்
தேனுற்ற சோலை திகழ்ந்து தோன்றுந்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. 4

கார்மல்கு கொன்றையந் தாரார் போலுங்
காலனையும் ஓருதையாற் கண்டார் போலும்
பார்மல்கி யேத்தப் படுவார் போலும்
பருப்பதத்தே பல்லூழி நின்றார் போலும்
ஊர்மல்கு பிச்சைக் குழன்றார் போலும்
ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலுஞ்
சீர்மல்கு பாட லுகந்தார் போலுந்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. 5

மாவாய்ப் பிளந்துகந்த மாலுஞ் செய்ய
மலரவனுந் தாமேயாய் நின்றார் போலும்
மூவாத மேனி முதல்வர் போலும்
முதுகுன்ற மூதூ ருடையார் போலுங்
கோவாய முனிதன்மேல் வந்த கூற்றைக்
குரைகழலா லன்று குமைத்தார் போலுந்
தேவாதி தேவர்க் கரியார் போலுந்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. 6

கடுவெளியோ டோ ரைந்து மானார் போலுங்
காரோணத் தென்று மிருப்பார் போலும்
இடிகுரல்வாய்ப் பூதப் படையார் போலும்
ஏகம்பம் மேவி யிருந்தார் போலும்
படியொருவ ரில்லாப் படியார் போலும்
பாண்டிக் கொடுமுடியுந் தம்மூர் போலுஞ்
செடிபடுநோ யடியாரைத் தீர்ப்பார் போலுந்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. 7

விலையிலா ஆரஞ்சேர் மார்பர் போலும்
வெண்ணீறு மெய்க்கணிந்த விகிர்தர் போலும்
மலையினார் மங்கை மணாளர் போலும்
மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலுந்
தொலைவிலார் புரமூன்றுந் தொலைத்தார் போலுஞ்
சோற்றுத் துறைதுருத்தி யுள்ளார் போலுஞ்
சிலையினார் செங்க ணரவர் போலுந்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. 8

அல்ல லடியார்க் கறுப்பார் போலும்
அமருலகந் தம்மடைந்தார்க் காட்சி போலும்
நல்லமும் நல்லூரும் மேயார் போலும்
நள்ளாறு நாளும் பிரியார் போலும்
முல்லை முகைநகையாள் பாகர் போலும்
முன்னமே தோன்றி முளைத்தார் போலுந்
தில்லை நடமாடுந் தேவர் போலுந்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. 9

உறைப்புடைய இராவணன்பொன் மலையைக் கையால்
ஊக்கஞ்செய் தெடுத்தலுமே உமையா ளஞ்ச
நிறைப்பெருந்தோள் இருபதும்பொன் முடிகள் பத்தும்
நிலஞ்சேர விரல்வைத்த நிமலர் போலும்
பிறைப்பிளவு சடைக்கணிந்த பெம்மான் போலும்
பெண்ணா ணுருவாகி நின்றார் போலுஞ்
சிறப்புடைய அடியார்கட் கினியார் போலுந்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment