வனபவள வாய்திறந்து பாடல் வரிகள் (vanapavala vaytirantu) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருகழிப்பாலை – சிவபுரி தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருகழிப்பாலை – சிவபுரி
சுவாமி : பால்வண்ணநாதர்
அம்பாள் : வேதநாயகியம்மை

வனபவள வாய்திறந்து

வனபவள வாய்திறந்து வானவர்க்குந்
தானவனே என்கின் றாளாற்
சினபவளத் திண்டோ ள்மேற் சேர்ந்திலங்கு
வெண்ணீற்றன் என்கின் றாளால்
அனபவள மேகலையோ டப்பாலைக்
கப்பாலான் என்கின் றாளாற்
கனபவளஞ் சிந்துங் கழிப்பாலைச்
சேர்வானைக் கண்டாள் கொல்லோ. 1

வண்டுலவு கொன்றை வளர்புன்
சடையானே என்கின் றாளால்
விண்டலர்ந்து நாறுவதோர் வெள்ளெருக்க
நாண்மலருண் டென்கின் றாளால்
உண்டயலே தோன்றுவதோர் உத்தரியப்
பட்டுடையன் என்கின் றாளாற்
கண்டயலே தோன்றுங் கழிப்பாலைச்
சேர்வானைக் கண்டாள் கொல்லோ. 2

பிறந்திளைய திங்களெம் பெம்மான்
முடிமேல தென்கின் றாளால்
நிறங்கிளருங் குங்குமத்தின் மேனி
யவன்நிறமே யென்கின் றாளால்
மறங்கிளர்வேற் கண்ணாள் மணிசேர்
மிடற்றவனே யென்கின் றாளாற்
கறங்கோத மல்குங் கழிப்பாலைச்
சேர்வானைக் கண்டாள் கொல்லோ. 3

இரும்பார்ந்த சூலத்தன் ஏந்தியோர்
வெண்மழுவன் என்கின் றாளாற்
சுரும்பார் மலர்க்கொன்றைச் சுண்ணவெண்
ணீற்றவனே என்கின் றாளாற்
பெரும்பால னாகியோர் பிஞ்ஞக
வேடத்தன் என்கின் றாளாற்
கரும்பானல் பூக்குங் கழிப்பாலைச்
சேர்வானைக் கண்டாள் கொல்லோ. 4

பழியிலான் புகழுடையன் பால்நீற்றன்
ஆனேற்றன் என்கின் றாளால்
விழியுலாம் பெருந்தடங்கண் இரண்டல்ல
மூன்றுளவே என்கின் றாளாற்
சுழியுலாம் வருகங்கை தோய்ந்த
சடையவனே என்கின் றாளாற்
கழியுலாஞ் சூழ்ந்த கழிப்பாலைச்
சேர்வானைக் கண்டாள் கொல்லோ. 5

பண்ணார்ந்த வீணை பயின்ற
விரலவனே என்கின் றாளால்
எண்ணார் புரமெரித்த எந்தை
பெருமானே என்கின் றாளாற்
பண்ணார் முழவதிரப் பாடலொ
டாடலனே என்கின் றாளாற்
கண்ணார் பூஞ்சோலைக் கழிப்பாலைச்
சேர்வானைக் கண்டாள் கொல்லோ. 6

முதிருஞ் சடைமுடிமேல் மூழ்கும்
இளநாகம் என்கின் றாளால்
அதுகண் டதனருகே தோன்றும்
இளமதியம் என்கின் றாளாற்
சதுர்வெண் பளிக்குக் குழைகாதின்
மின்னிடுமே என்கின் றாளாற்
கதிர்முத்தஞ் சிந்துங் கழிப்பாலைச்
சேர்வானைக் கண்டாள் கொல்லோ. 7

ஓரோத மோதி உலகம்
பலிதிரிவான் என்கின் றாளால்
நீரோத மேற நிமிர்புன்
சடையானே என்கின் றாளாற்
பாரோத மேனிப் பவளம்
அவனிறமே என்கின் றாளாற்
காரோத மல்குங் கழிப்பாலைச்
சேர்வானைக் கண்டாள் கொல்லோ. 8

வானுலாந் திங்கள் வளர்புன்
சடையானே என்கின் றாளால்
ஊனுலாம் வெண்டலைகொண் டூரூர்
பலிதிரிவான் என்கின் றாளாற்
தேனுலாங் கொன்றை திளைக்குந்
திருமார்பன் என்கின் றாளாற்
கானுலாஞ் சூழ்ந்த கழிப்பாலைச்
சேர்வானைக் கண்டாள் கொல்லோ. 9

அடர்ப்பரிய இராவணனை அருவரைக்கீழ்
அடர்த்தவனே என்கின் றாளாற்
சுடர்ப்பெரிய திருமேனிச் சுண்ணவெண்
ணீற்றவனே என்கின் றாளால்
மடற்பெரிய ஆலின்கீழ் அறம்நால்வர்க்
கன்றுரைத்தான் என்கின் றாளாற்
கடற்கருவி சூழ்ந்த கழிப்பாலைச்
சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment