வானைக்காவில் வெண்மதி பாடல் வரிகள் (vanaikkavil venmati) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவானைக்கா – திருவானைக்கோவில் தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவானைக்கா – திருவானைக்கோவில்
சுவாமி : நீர்த்தீரள்நாதர்
அம்பாள் : அகிலாண்டநாயகி

வானைக்காவில் வெண்மதி

வானைக்காவில் வெண்மதி
மல்குபுல்கு வார்சடைத்
தேனைக்காவில் இன்மொழித்
தேவிபாக மாயினான்
ஆனைக்காவில் அண்ணலை
அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க்
கேதும்ஏதம் இல்லையே. 1

சேறுபட்ட தண்வயற்
சென்றுசென்று சேணுலா
வாறுபட்ட நுண்டுறை
யானைக்காவில் அண்ணலார்
நீறுபட்ட மேனியார்
நிகரில்பாதம் ஏத்துவார்
வேறுபட்ட சிந்தையார்
விண்ணிலெண்ண வல்லரே. 2

தாரமாய மாதராள்
தானொர்பாக மாயினான்
ஈரமாய புன்சடை
யேற்றதிங்கள் சூடினான்
ஆரமாய மார்புடை
யானைக்காவில் அண்ணலை
வாரமாய் வணங்குவார்
வல்வினைகள் மாயுமே. 3

விண்ணினண்ணு புல்கிய
வீரமாய மால்விடைச்
சுண்ணவெண்ணீ றாடினான்
சூலமேந்து கையினான்
அண்ணல்கண்ணொர் மூன்றினான்
ஆனைக்காவு கைதொழ
எண்ணும்வண்ணம் வல்லவர்க்
கேதமொன்றும் இல்லையே. 4

வெய்யபாவங் கைவிட
வேண்டுவீர்கள் ஆண்டசீர்
மைகொள்கண்டன் வெய்யதீ
மாலையாடு காதலான்
கொய்யவிண்ட நாண்மலர்க்
கொன்றைதுன்று சென்னியெம்
ஐயன்மேய பொய்கைசூழ்
ஆனைக்காவு சேர்மினே. 5

நாணுமோர்வு சார்வுமுன்
நகையுமுட்கு நன்மையும்
பேணுறாத செல்வமும்
பேசநின்ற பெற்றியான்
ஆணும்பெண்ணு மாகிய
ஆனைக்காவில் அண்ணலார்
காணுங்கண்ணு மூன்றுடைக்
கறைகொள்மிடறன் அல்லனே. 6

கூருமாலை நண்பகற்
கூடிவல்ல தொண்டர்கள்
பேருமூருஞ் செல்வமும்
பேசநின்ற பெற்றியான்
பாரும்விண்ணுங் கைதொழப்
பாயுங்கங்கை செஞ்சடை
ஆரநீரோ டேந்தினான்
ஆனைக்காவு சேர்மினே. 7

பொன்னமல்கு தாமரைப்
போதுதாது வண்டினம்
அன்னமல்கு தண்டுறை
ஆனைக்காவில் அண்ணலைப்
பன்னவல்ல நான்மறை
பாடவல்ல தன்மையோர்
முன்னவல்லர் மொய்கழல்
துன்னவல்லர் விண்ணையே. 8

ஊனொடுண்டல் நன்றென
வூனொடுண்டல் தீதென
ஆனதொண்டர் அன்பினாற்
பேசநின்ற தன்மையான்
வானொடொன்று சூடினான்
வாய்மையாக மன்னிநின்
றானொடஞ்சும் ஆடினான்
ஆனைக்காவு சேர்மினே. 9

கையிலுண்ணுங் கையருங்
கடுக்கடின் கழுக்களும்
மெய்யைப்போர்க்கும் பொய்யரும்
வேதநெறியை யறிகிலார்
தையல்பாக மாயினான்
தழலதுருவத் தானெங்கள்
ஐயன்மேய பொய்கைசூழ்
ஆனைக்காவு சேர்மினே. 10

ஊழியூழி வையகத்
துயிர்கள்தோற்று வானொடும்
ஆழியானுங் காண்கிலா
ஆனைக்காவில் அண்ணலைக்
காழிஞான சம்பந்தன்
கருதிச்சொன்ன பத்திவை
வாழியாகக் கற்பவர்
வல்வினைகள் மாயுமே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment