Vaazhapathu lyrics in tamil

வாழாப்பத்து

அருளியவர் : மாணிக்கவாசகர்
தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
நாடு : பாண்டியநாடு

சிறப்பு: முத்தி உபாயம்; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

திருச்சிற்றம்பலம்

பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்
பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன்
ஆண்டநீ அருளிலை யானால்
வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன்றருள் புரியாயே. 1

வம்பனேன் தன்னை ஆண்டமா மணியே
மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
உம்பரும் அறியா ஒருவனே இருவர்க்
குணர்விறந்துலக மூடுருவுஞ்
செம்பெருமானே சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
எம்பெருமானே என்னையாள்வானே
என்னைநீ கூவிக் கொண்டருளே. 2

பாடிமால் புகழும் பாதமே அல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
தேடிநீ ஆண்டாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
ஊடுவ துனனோ டுவப்பதும்
உன்னை உணர்த்துவ துனக்கெனக்குறுதி
வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன்றருள் புரியாயே. 3

வல்லைவாளரக்கர் புரமெரித்தானே
மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
தில்லைவாழ் கூத்தா சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
எல்லைமூவுலகும் உருவியன் றிருவர்
காணும்நாள் ஆதியீ றின்மை
வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே. 4

பண்ணினேர் மொழியாள் பங்கநீயல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
திண்ணமே ஆண்டாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
எண்ணமே உடல்வாய் மூக்கொடு
செவிகண் என்றிவை நின்கணே வைத்து
மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன்றருள் புரியாயே. 5

பஞ்சின்மெல்லடியாள் பங்கநீ யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செஞ்செவே ஆண்டாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ அளித்த
அருளினை மருளினால் மறந்த
வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே. 6

பரிதிவாழ் ஒளியாய் பாதமே யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
திருவுயர்கோலச் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக்
கலந்துநான் வாழுமா றறியா
மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே. 7

பந்தணை விரலாள் பங்கநீ யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செந்தழல் போல்வாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
அந்தமில் அமுதே அரும்பெரும் பொருளே
ஆரமுதே அடியேனை
வந்துய ஆண்டாய் வாழ்கிலேன்
கண்டாய் வருக என்றருள் புரியாயே. 8

பாவநாசாவுன் பாதமே யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
தேவர் தந்தேவே சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
மூவுல குருவ இருவர்கீழ் மேலாய்
முழங்கழலாய் நிமிர்ந்தானே
மாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே. 9

பழுதில்தொல் புகழாள் பங்கநீயல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செழுமதி அணிந்தாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
தொழுவனோ பிறரைத் துதிப்பனோ
எனக்கோர் துணையென நினைவனோ சொல்லாய்
மழவிடையானே வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே. 10


Leave a Comment