Thursday, November 13, 2025
HomeSivan SongsNeela Mamani Thevaram song lyrics in tamil | நீல மாமணி பாடல் வரிகள்

Neela Mamani Thevaram song lyrics in tamil | நீல மாமணி பாடல் வரிகள்

Neela Mamani Thevaram song lyrics in tamil

நீல மாமணி பாடல் வரிகள் (neela mamani) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பாலைத்துறை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருப்பாலைத்துறை
சுவாமி : பாலைவனநாதர்
அம்பாள் : தவளவெண்ணகையாள்

நீல மாமணி

நீல மாமணி
கண்டத்தர் நீள்சடைக்
கோல மாமதி
கங்கையுங் கூட்டினார்
சூல மான்மழு
வேந்திச் சுடர்முடிப்
பால்நெய் யாடுவர்
பாலைத் துறையரே. 1

கவள மால்களிற்
றின்னுரி போர்த்தவர்
தவள வெண்ணகை
மங்கையோர் பங்கினர்
திவள வானவர்
போற்றித் திசைதொழும்
பவள மேனியர்
பாலைத் துறையரே. 2

மின்னின் நுண்ணிடைக்
கன்னியர் மிக்கெங்கும்
பொன்னி நீர்மூழ்கிப்
போற்றி யடிதொழ
மன்னி நான்மறை
யோடுபல் கீதமும்
பன்னி னாரவர்
பாலைத் துறையரே. 3

நீடு காடிட
மாய்நின்ற பேய்க்கணங்
கூடு பூதங்
குழுமிநின் றார்க்கவே
ஆடி னாரழ
காகிய நான்மறை
பாடி னாரவர்
பாலைத் துறையரே. 4

சித்தர் கன்னியர்
தேவர்கள் தானவர்
பித்தர் நான்மறை
வேதியர் பேணிய
அத்த னேநமை
யாளுடை யாயெனும்
பத்தர் கட்கன்பர்
பாலைத் துறையரே. 5

விண்ணி னார்பணிந்
தேத்த வியப்புறும்
மண்ணி னார்மற
வாதுசி வாயவென்
றெண்ணி னார்க்கிட
மாவெழில் வானகம்
பண்ணி னாரவர்
பாலைத் துறையரே. 6

குரவ னார்கொடு
கொட்டியுங் கொக்கரை
விரவி னார்பண்
கெழுமிய வீணையும்
மருவு நாண்மலர்
மல்லிகை செண்பகம்
பரவு நீர்ப்பொன்னிப்
பாலைத் துறையரே. 7

தொடருந் தொண்டரைத்
துக்கந் தொடர்ந்துவந்
தடரும் போதர
னாயருள் செய்பவர்
கடலின் நஞ்சணி
கண்டர் கடிபுனற்
படருஞ் செஞ்சடைப்
பாலைத் துறையரே. 8

மேகந் தோய்பிறை
சூடுவர் மேகலை
நாகந் தோய்ந்த
அரையினர் நல்லியற்
போகந் தோய்ந்த
புணர்முலை மங்கையோர்
பாகந் தோய்ந்தவர்
பாலைத் துறையரே. 9

வெங்கண் வாளர
வாட்டி வெருட்டுவர்
அங்க ணாரடி
யார்க்கருள் நல்குவர்
செங்கண் மாலயன்
தேடற் கரியவர்
பைங்கண் ஏற்றினர்
பாலைத் துறையரே. 10

உரத்தி னாலரக்
கன்னுயர் மாமலை
நெருக்கி னானை
நெரித்தவன் பாடலும்
இரக்க மாவருள்
செய்தபா லைத்துறைக்
கரத்தி னாற்றொழு
வார்வினை யோயுமே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments