வாளவரி கோளபுலி பாடல் வரிகள் (valavari kolapuli) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் நொடித்தான்மலை – திருக்கயிலாயம் தலம் வடநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : வடநாடு
தலம் : நொடித்தான்மலை – திருக்கயிலாயம்
சுவாமி : கைலாயநாதர்
அம்பாள் : கைலாயநாயகி

வாளவரி கோளபுலி

வாளவரி கோளபுலி கீளதுரி
தாளின்மிசை நாளுமகிழ்வர்
ஆளுமவர் வேளநகர் போளயில
கோளகளி றாளிவரவில்
தோளமரர் தாளமதர் கூளியெழ
மீளிமிளிர் தூளிவளர்பொன்
காளமுகில் மூளுமிருள் கீளவிரி
தாளகயி லாயமலையே. 1

புற்றரவு பற்றியகை நெற்றியது
மற்றொருகண் ஒற்றைவிடையன்
செற்றதெயில் உற்றதுமை யற்றவர்கள்
நற்றுணைவன் உற்றநகர்தான்
சுற்றுமணி பெற்றதொளி செற்றமொடு
குற்றமில தெற்றெனவினாய்
கற்றவர்கள் சொற்றொகையின் முற்றுமொளி
பெற்றகயி லாயமலையே. 2

சிங்கவரை மங்கையர்கள் தங்களன
செங்கைநிறை கொங்குமலர்தூய்
எங்கள்வினை சங்கையவை இங்ககல
வங்கமொழி யெங்குமுளவாய்த்
திங்களிருள் நொங்கவொளி விங்கிமிளிர்
தொங்கலொடு தங்கவயலே
கங்கையொடு பொங்குசடை யெங்களிறை
தங்குகயி லாயமலையே. 3

முடியசடை பிடியதொரு வடியமழு
வுடையர்செடி யுடையதலையில்
வெடியவினை கொடியர்கெட விடுசில்பலி
நொடியமகிழ் அடிகளிடமாங்
கொடியகுர லுடையவிடை கடியதுடி
யடியினொடு மிடியினதிரக்
கடியகுரல் நெடியமுகில் மடியவத
ரடிகொள்கயி லாயமலையே. 4

குடங்கையி னுடங்கெரி தொடர்ந்தெழ
விடங்கிளர் படங்கொளரவம்
மடங்கொளி படர்ந்திட நடந்தரு
விடங்கன திடந்தண்முகில்போய்த்
தடங்கடல் தொடர்ந்துட னுடங்குவ
விடங்கொள மிடைந்தகுரலாற்
கடுங்கலின் முடங்களை நுடங்கர
வொடுங்குகயி லாயமலையே. 5

ஏதமில பூதமொடு கோதைதுணை
யாதிமுதல் வேதவிகிர்தன்
கீதமொடு நீதிபல வோதிமற
வாதுபயில் நாதன்நகர்தான்
தாதுபொதி போதுவிட வூதுசிறை
மீதுதுளி கூதல்நலியக்
காதன்மிகு சோதிகிளர் மாதுபயில்
கோதுகயி லாயமலையே. 6

சென்றுபல வென்றுலவு புன்றலையர்
துன்றலொடும் ஒன்றியுடனே
நின்றமரர் என்றுமிறை வன்றனடி
சென்றுபணி கின்றநகர்தான்
துன்றுமலர் பொன்றிகழ்செய் கொன்றைவிரை
தென்றலொடு சென்றுகமழக்
கன்றுபிடி துன்றுகளி றென்றிவைமுன்
நின்றகயி லாயமலையே. 7

மருப்பிடை நெருப்பெழு தருக்கொடு
செருச்செய்த பருத்தகளிறின்
பொருப்பிடை விருப்புற விருக்கையை
யொருக்குடன் அரக்கனுணரா
தொருத்தியை வெருக்குற வெருட்டலும்
நெருக்கென நிருத்தவிரலாற்
கருத்தில வொருத்தனை யெருத்திற
நெரித்தகயி லாயமலையே. 8

பரியதிரை பெரியபுனல் வரியபுலி
யுரியதுடை பரிசையுடையான்
வரியவளை யரியகணி யுருவினொடு
புரிவினவர் பிரிவில்நகர்தான்
பெரியஎரி யுருவமது தெரியவுரு
பரிவுதரும் அருமையதனாற்
கரியவனும் அரியமறை புரியவனும்
மருவுகயி லாயமலையே. 9

அண்டர்தொழு சண்டிபணி கண்டடிமை
கொண்டவிறை துண்டமதியோ
டிண்டைபுனை வுண்டசடை முண்டதர
சண்டவிருள் கண்டரிடமாங்
குண்டமண வண்டரவர் மண்டைகையில்
உண்டுளறி மிண்டுசமயங்
கண்டவர்கள் கொண்டவர்கள் பண்டுமறி
யாதகயி லாயமலையே. 10

அந்தண்வரை வந்தபுனல் தந்ததிரை
சந்தனமொ டுந்தியகிலுங்
கந்தமலர் கொந்தினொடு மந்திபல
சிந்துகயி லாயமலைமேல்
எந்தையடி வந்தணுகு சந்தமொடு
செந்தமிழ் இசைந்தபுகலிப்
பந்தனுரை சிந்தைசெய வந்தவினை
நைந்துபர லோகமெளிதே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment