உருவினார் உமையொடும் பாடல் வரிகள் (uruvinar umaiyotum) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவிற்கோலம் – கூவம் தலம் தொண்டைநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : தொண்டைநாடு
தலம் : திருவிற்கோலம் – கூவம்
சுவாமி : திரிபுராந்தகேசுவரர்
அம்பாள் : திரிபுராந்தகியம்மை

உருவினார் உமையொடும்

உருவினார் உமையொடும்
ஒன்றி நின்றதோர்
திருவினான் வளர்சடைத்
திங்கள் கங்கையான்
வெருவிவா னவர்தொழ
வெகுண்டு நோக்கிய
செருவினான் உறைவிடந்
திருவிற் கோலமே. 1

சிற்றிடை யுமையொரு
பங்கன் அங்கையில்
உற்றதோர் எரியினன்
ஒருச ரத்தினால்
வெற்றிகொள் அவுணர்கள்
புரங்கள் வெந்தறச்
செற்றவன் உறைவிடந்
திருவிற் கோலமே. 2

ஐயன்நல் அதிசயன்
அயன்விண் ணோர்தொழும்
மையணி கண்டனார்
வண்ண வண்ணம்வான்
பையர வல்குலாள்
பாக மாகவுஞ்
செய்யவன் உறைவிடந்
திருவிற் கோலமே. 3

விதைத்தவன் முனிவருக்
கறமுன் காலனை
உதைத்தவன் உயிரிழந்
துருண்டு வீழ்தரப்
புதைத்தவன் நெடுநகர்ப்
புரங்கள் மூன்றையுஞ்
சிதைத்தவன் உறைவிடந்
திருவிற் கோலமே. 4

முந்தினான் மூவருள்
முதல்வ னாயினான்
கொந்துலாம் மலர்ப்பொழிற்
கூகம் மேவினான்
அந்திவான் பிறையினான்
அடியர் மேல்வினை
சிந்துவான் உறைவிடந்
திருவிற் கோலமே. 5

தொகுத்தவன் அருமறை
யங்கம் ஆகமம்
வகுத்தவன் வளர்பொழிற்
கூகம் மேவினான்
மிகுத்தவன் மிகுத்தவர்
புரங்கள் வெந்தறச்
செகுத்தவன் உறைவிடந்
திருவிற் கோலமே. 6

விரித்தவன் அருமறை
விரிச டைவெள்ளந்
தரித்தவன் தரியலர்
புரங்கள் ஆசற
எரித்தவன் இலங்கையர்
கோனி டர்படச்
சிரித்தவன் உறைவிடந்
திருவிற் கோலமே. 7

இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 8

திரிதரு புரமெரி
செய்த சேவகன்
வரியர வொடுமதி
சடையில் வைத்தவன்
அரியொடு பிரமன
தாற்ற லால்உருத்
தெரியலன் உறைவிடந்
திருவிற் கோலமே. 9

சீர்மையில் சமணொடு
சீவ ரக்கையர்
நீர்மையில் உரைகள்கொள்
ளாத நேசர்க்குப்
பார்மலி பெருஞ்செல்வம்
பரிந்து நல்கிடுஞ்
சீர்மையி னானிடந்
திருவிற் கோலமே. 10

கோடல்வெண் பிறையனைக்
கூகம் மேவிய
சேடன செழுமதில்
திருவிற் கோலத்தை
நாடவல் லதமிழ்
ஞானசம் பந்தன
பாடல்வல் லார்களுக்
கில்லை பாவமே.

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. இந்தத்தலம் கூவமென வழங்கப்படுகின்றது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment