உருவார்ந்த மெல்லியலோர் பாடல் வரிகள் (uruvarnta melliyalor) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்புகலி – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்புகலி – சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி

உருவார்ந்த மெல்லியலோர்

உருவார்ந்த மெல்லியலோர்
பாகமுடையீர் அடைவோர்க்குக்
கருவார்ந்த வானுலகங்
காட்டிக்கொடுத்தல் கருத்தானீர்
பொருவார்ந்த தெண்கடலொண்
சங்கந்திளைக்கும் பூம்புகலித்`
திருவார்ந்த கோயிலே
கோயிலாகத் திகழ்ந்தீரே. 1

நீரார்ந்த செஞ்சடையீர் நிறையார்
கழல்சேர் பாதத்தீர்
ஊரார்ந்த சில்பலியீர்
உழைமானுரிதோ லாடையீர்
போரார்ந்த தெண்டிரைசென்
றணையுங் கானற் பூம்புகலிச்
சீரார்ந்த கோயிலே
கோயிலாகச் சேர்ந்தீரே. 2

அழிமல்கு பூம்புனலும்
அரவுஞ்சடைமே லடைவெய்த
மொழிமல்கு மாமறையீர் கறையார்
கண்டத் தெண்தோளீர்
பொழின்மல்கு வண்டினங்கள்
அறையுங்கானற் பூம்புகலி
எழில்மல்கு கோயிலே
கோயிலாக இருந்தீரே. 3

கையிலார்ந்த வெண்மழுவொன்
றுடையீர்க்கடிய கரியின்தோல்
மயிலார்ந்த சாயல்மட
மங்கைவெருவ மெய்போர்த்தீர்
பயிலார்ந்த வேதியர்கள் மதியாய்
விளங்கும் பைம்புகலி
எயிலார்ந்த கோயிலே
கோயிலாக இருந்தீரே. 4

நாவார்ந்த பாடலீர்
ஆடலரவம் அரைக்கார்த்தீர்
பாவார்ந்த பல்பொருளின்
பயன்களானீர் அயன்பேணும்
பூவார்ந்த பொய்கைகளும்
வயலுஞ்சூழ்ந்த பொழிற்புகலித்
தேவார்ந்த கோயிலே
கோயிலாகத் திகழ்ந்தீரே. 5

மண்ணார்ந்த மண்முழவந்
ததும்பமலையான் மகளென்னும்
பெண்ணார்ந்த மெய்மகிழப்
பேணியெரிகொண் டாடினீர்
விண்ணார்ந்த மதியமிடை
மாடத்தாரும் வியன்புகலிக்
கண்ணார்ந்த கோயிலே
கோயிலாகக் கலந்தீரே. 6

களிபுல்கு வல்லவுணர் ஊர்மூன்
றெரியக் கணைதொட்டீர்
அளிபுல்கு பூமுடியீர்
அமரரேத்த அருள்செய்தீர்
தெளிபுல்கு தேன்இனமும் மலருள்
விரைசேர் திண்புகலி
ஒளிபுல்கு கோயிலே
கோயிலாக உகந்தீரே. 7

பரந்தோங்கு பல்புகழ்சேர்
அரக்கர்கோனை வரைக்கீழிட்
டுரந்தோன்றும் பாடல்கேட்
டுகவையளித்தீர் உகவாதார்
புரந்தோன்று மும்மதிலும் எரியச்
செற்றீர் பூம்புகலி
வரந்தோன்று கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே. 8

சலந்தாங்கு தாமரைமேல்
அயனுந்தரணி யளந்தானுங்
கலந்தோங்கி வந்திழிந்துங்
காணாவண்ணங் கனலானீர்
புலந்தாங்கி ஐம்புலனுஞ்
செற்றார்வாழும் பூம்புகலி
நலந்தாங்கு கோயிலே
கோயிலாக நயந்தீரே. 9

நெடிதாய வன்சமணும்
நிறைவொன்றில்லாச் சாக்கியருங்
கடிதாய கட்டுரையாற்
கழறமேலோர் பொருளானீர்
பொடியாரும் மேனியினீர்
புகலிமறையோர் புரிந்தேத்த
வடிவாருங் கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே. 10

ஒப்பரிய பூம்புகலி
ஓங்குகோயில் மேயானை
அப்பரிசிற் பதியான
அணிகொள்ஞான சம்பந்தன்
செப்பரியதண் தமிழால்
தெரிந்தபாட லிவைவல்லார்
எப்பரிசில் இடர்நீங்கி
இமையோருலகத் திருப்பாரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment