உரித்திட்டார் ஆனை பாடல் வரிகள் (urittittar anai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பயற்றூர் – திருப்பயத்தங்குடி தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருப்பயற்றூர் – திருப்பயத்தங்குடி
அம்பாள் : காவியங்கண்ணியம்மை

உரித்திட்டார் ஆனை

உரித்திட்டார் ஆனை யின்றோல்
உதிரவா றொழுகி யோட
விரித்திட்டார் உமையா ளஞ்சி
விரல்விதிர்த் தலக்கண் நோக்கித்
தரித்திட்டார் சிறிது போது
தரிக்கில ராகித் தாமுஞ்
சிரித்திட்டார் எயிறு தோன்றத்
திருப்பயற் றூர னாரே. 1

உவந்திட்டங் குமையோர் பாகம்
வைத்தவர் ஊழி யூழி
பவந்திட்ட பரம னார் தாம்
மலைச்சிலை நாகம் ஏற்றிக்
கவர்ந்திட்ட புரங்கள் மூன்றுங்
கனலெரி யாகச் சீறிச்
சிவந்திட்ட கண்ணர் போலுந்
திருப்பயற் றூர னாரே. 2

நங்களுக் கருள தென்று
நான்மறை யோது வார்கள்
தங்களுக் கருளும் எங்கள்
தத்துவன் றழலன் றன்னை
எங்களுக் கருள்செய் யென்ன
நின்றவன் நாகம் அஞ்சுந்
திங்களுக் கருளிச் செய்தார்
திருப்பயற் றூர னாரே. 3

பார்த்தனுக் கருளும் வைத்தார்
பாம்பரை யாட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார்
சாமுண்டி சாம வேதங்
கூத்தொடும் பாட வைத்தார்
கோளரா மதியம் நல்ல
தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார்
திருப்பயற் றூர னாரே. 4

மூவகை மூவர் போலும்
முற்றுமா நெற்றிக் கண்ணர்
நாவகை நாவர் போலும்
நான்மறை ஞான மெல்லாம்
ஆவகை யாவர் போலும்
ஆதிரை நாளர் போலுந்
தேவர்கள் தேவர் போலுந்
திருப்பயற் றூர னாரே. 5

ஞாயிறாய் நமனு மாகி
வருணனாய்ச் சோம னாகித்
தீயறா நிருதி வாயுத்
திப்பிய சாந்த னாகிப்
பேயறாக் காட்டி லாடும்
பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
தீயறாக் கையர் போலுந்
திருப்பயற் றூர னாரே. 6

ஆவியாய் அவியு மாகி
அருக்கமாய்ப் பெருக்க மாகிப்
பாவியர் பாவந் தீர்க்கும்
பரமனாய்ப் பிரம னாகிக்
காவியங் கண்ண ளாகிக்
கடல்வண்ண மாகி நின்ற
தேவியைப் பாகம் வைத்தார்
திருப்பயற் றூர னாரே. 7

தந்தையாய்த் தாயு மாகித்
தரணியாய்த் தரணி யுள்ளார்க்
கெந்தையு மென்ன நின்ற
ஏழுல குடனு மாகி
எந்தையெம் பிரானே என்றென்
றுள்குவா ருள்ளத் தென்றுஞ்
சிந்தையுஞ் சிவமு மாவார்
திருப்பயற் றூர னாரே. 8

புலன்களைப் போக நீக்கிப்
புந்தியை யொருங்க வைத்து
இலங்களைப் போக நின்று
இரண்டையும் நீக்கி யொன்றாய்
மலங்களை மாற்ற வல்லார்
மனத்தினுட் போக மாகிச்
சினங்களைக் களைவர் போலுந்
திருப்பயற் றூர னாரே. 9

மூர்த்திதன் மலையின் மீது
போகாதா முனிந்து நோக்கிப்
பார்த்துத்தான் பூமி மேலாற்
பாய்ந்துடன் மலையைப் பற்றி
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும்
அடர்த்துநல் லரிவை யஞ்சத்
தேத்தெத்தா என்னக் கேட்டார்
திருப்பயற் றூர னாரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment