ஊனங் கைத்துயிர்ப் பாடல் வரிகள் (unan kaittuyirp) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் வலிவலம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : வலிவலம்ஊனங் கைத்துயிர்ப்

ஊனங் கத்துயிர்ப் பாயுல கெல்லாம்
ஓங்கா ரத்துரு வாகிநின் றானை
வானங் கைத்தவர்க் கும்மளப் பரிய
வள்ள லையடி யார்கள்தம் உள்ளத்
தேனங் கைத்தமு தாகியுள் ளூறுந்
தேச னைத்திளைத் தற்கினி யானை
மானங் கைத்தலத் தேந்தவல் லானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே. 1

பல்லடி யார்பணிக் குப்பரி வானைப்
பாடியா டும்பத்தர்க் கன்புடை யானைச்
செல்லடி யேநெருக் கித்திறம் பாது
சேர்ந்தவர்க் கேசித்தி முத்திசெய் வானை
நல்லடி யார்மனத் தெய்ப்பினில் வைப்பை
நானுறு குறையறிந் தருள்புரி வானை
வல்லடி யார்மனத் திச்சை உளானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே. 2

ஆழிய னாய்அகன் றேஉயர்ந் தானை
ஆதியந் தம்பணி வார்க்கணி யானைக்
கூழைய ராகிப்பொய் யேகுடிஓம்பிக்
குழைந்து மெய்யடி யார்குழுப் பெய்யும்
வாழியர்க் கேவழு வாநெறி காட்டி
மறுபி றப்பென்னை மாசறுத் தானை
மாழையொண் கண்ணுமை யைமகிழ்ந் தானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே. 3

நாத்தான் உன்றிற மேதிறம் பாது
நண்ணியண் ணித்தமு தம்பொதிந் தூறும்
ஆத்தா னைஅடி யேன்றனக் கென்றும்
அளவி றந்தபஃ றேவர்கள் போற்றுஞ்
சோத்தா னைச்சுடர் மூன்றிலும் ஒன்றித்
துருவி மால்பிர மன்னறி யாத
மாத்தா னைமாத் தெனக்குவைத் தானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே. 4

நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக்
கரசரும் பாடிய நற்றமிழ் மாலை
சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானைத்
தொண்ட னேன்அறி யாமை அறிந்து
கல்லி யல்மனத் தைக்கசி வித்துக்
கழலடி காட்டியென் களைகளை அறுக்கும்
வல்லியல் வானவர் வணங்க நின்றானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே. 5

பாடுமா பாடிப் பணியுமா றறியேன்
பனுவுமா பனுவிப் பரவுமா றறியேன்
தேடுமா தேடித் திருத்துமா றறியேன்
செல்லுமா செல்லச் செலுத்துமா றறியேன்
கூடுமா றெங்ஙன மோவென்று கூறக்
குறித்துக் காட்டிக் கொணர்ந்தெனை ஆண்டு
வாடிநீ வாளா வருந்தலென் பானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே. 6

பந்தித்த வல்வினைப் பற்றறப் பிறவிப்
படுக டற்பரப் புத்தவிர்ப் பானைச்
சந்தித் ததிற லாற்பணி பூட்டித்
தவத்தை ஈட்டிய தம்மடி யார்க்குச்
சிந்தித் தற்கெளி தாய்த்திருப் பாதஞ்
சிவலோ கந்திறந் தேற்றவல் லானை
வந்திப் பார்தம் மனத்தினுள் ளானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே. 7

எவ்வவர் தேவர் இருடிகள் மன்னர்
எண்ணிறந் தார்கள்மற் றெங்கும்நின் றேத்த
அவ்வவர் வேண்டிய தேஅருள் செய்து
அடைந்தவர்க் கேஇட மாகிநின் றானை
இவ்வவர் கருணையெங் கற்பகக் கடலை
எம்பெரு மான்அரு ளாய்என்ற பின்னை
வவ்வியென் ஆவி மனங்கலந் தானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே. 8

திரியும் முப்புரஞ் செற்றதுங் குற்றத்
திறல ரக்கனைச் செறுத்ததும் மற்றைப்
பெரிய நஞ்சமு துண்டதும் முற்றும்
பின்னை யாய்முன்ன மேமுளைத் தானை
அரிய நான்மறை அந்தணர் ஓவா
தடிப ணிந்தறி தற்கரி யானை
வரையின் பாவை மணாளனெம் மானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே. 9

ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து
நிறைக்க மாலுதி ரத்தினை ஏற்றுத்
தோன்று தோண்மிசைக் களேபரந் தன்னைச்
சுமந்த மாவிர தத்தகங் காளன்
சான்று காட்டுதற் கரியவன் எளியவன்
றன்னைத் தன்னி லாமனத் தார்க்கு
மான்று சென்றணை யாதவன் றன்னை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே. 10

கலிவ லங்கெட ஆரழல் ஓம்புங்
கற்ற நான்மறை முற்றனல் ஓம்பும்
வலிவ லந்தனில் வந்துகண் டடியேன்
மன்னும் நாவலா ரூரன்வன் றொண்டன்
ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ் பத்தும்
உள்ளத் தாலுகந் தேத்தவல் லார்போய்
மெலிவில் வானுல கத்தவர் ஏத்த
விரும்பி விண்ணுல கெய்துவர் தாமே. 11

திருச்சிற்றம்பலம்

Leave a Comment