துன்று கொன்றைநஞ் பாடல் வரிகள் (tunru konrainan) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவீழிமிழலை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவீழிமிழலை
சுவாமி : வீழியழகர்
அம்பாள் : அழகுமுலையம்மை

துன்று கொன்றைநஞ்

துன்று கொன்றைநஞ் சடையதே
தூய கண்டம்நஞ் சடையதே
கன்றின் மானிடக் கையதே
கல்லின் மானிடக் கையதே
என்று மேறுவ திடவமே
என்னி டைப்பலி யிடவமே
நின்ற தும்மிழலை யுள்ளுமே
நீரெனைச் சிறிதும் உள்ளுமே. 1

ஓதி வாயதும் மறைகளே
உரைப்ப தும்பல மறைகளே
பாதி கொண்டதும் மாதையே
பணிகின் றேன்மிகு மாதையே
காது சேர்கனங் குழையரே
காத லார்கனங் குழையரே
வீதி வாய்மிகும் வேதியா
மிழலை மேவிய வேதியா. 2

பாடு கின்றபண் டாரமே
பத்த ரன்னபண் டாரமே
சூடு கின்றது மத்தமே
தொழுத என்னையுன் மத்தமே
நீடு செய்வதுந் தக்கதே
நின்ன ரைத்திகழ்ந் தக்கதே
நாடு சேர்மிழலை யூருமே
நாகம் நஞ்சழலை யூருமே. 3

கட்டு கின்றகழல் நாகமே
காய்ந்த தும்மதனன் ஆகமே
இட்ட மாவதிசை பாடலே
யிசைந்த நூலினமர் பாடலே
கொட்டு வான்முழவம் வாணனே
குலாய சீர்மிழலை வாணனே
நட்ட மாடுவது சந்தியே
நானுய் தற்கிரவு சந்தியே. 4

ஓவி லாதிடுங் கரணமே
யுன்னு மென்னுடைக் கரணமே
ஏவு சேர்வுநின் னாணையே
யருளி நின்னபொற் றாணையே
பாவி யாதுரை மெய்யிலே
பயின்ற நின்னடி மெய்யிலே
மேவி னான்விறற் கண்ணனே
மிழலை மேயமுக் கண்ணனே. 5

வாய்ந்த மேனியெரி வண்ணமே
மகிழ்ந்து பாடுவது வண்ணமே
காய்ந்து வீழ்ந்தவன் காலனே
கடுந டஞ்செயுங் காலனே
போந்த தெம்மிடை யிரவிலே
உம்மி டைக்கள்வ மிரவிலே
ஏய்ந்த தும்மிழலை யென்பதே
விரும்பி யேயணிவ தென்பதே. 6

அப்பி யன்றகண் ணயனுமே
அமரர் கோமகனு மயனுமே
ஒப்பி லின்றமரர் தருவதே
ஒண்கை யாலமரர் தருவதே
மெய்ப்ப யின்றவ ரிருக்கையே
மிழலை யூரும திருக்கையே
செப்பு மின்னெருது மேயுமே
சேர்வுமக் கெருது மேயுமே. 7

தானவக் குலம் விளக்கியே
தாரகைச் செல விளக்கியே
வான டர்த்தகயி லாயமே
வந்து மேவுகயி லாயமே
தானெ டுத்தவல் லரக்கனே
தடமு டித்திர ளரக்கனே
மேன டைச்செல விருப்பனே
மிழலை நற்பதி விருப்பனே. 8

காய மிக்கதொரு பன்றியே
கலந்த நின்னவுரு பன்றியே
ஏய விப்புவி மயங்கவே
யிருவர் தாமன மயங்கவே
தூய மெய்த்திரள் அகண்டனே
தோன்றி நின்றமணி கண்டனே
மேய வித்துயில் விலக்கணா
மிழலை மேவிய விலக்கணா. 9

கஞ்சி யைக்குலவு கையரே
கலக்க மாரமணர் கையரே
அஞ்ச வாதிலருள் செய்யநீ
யணைந்தி டும்பரிசு செய்யநீ
வஞ்ச னேவரவும் வல்லையே
மதித்தெ னைச்சிறிதும் வல்லையே
வெஞ்ச லின்றிவரு வித்தகா
மிழலை சேரும்விறல் வித்தகா. 10

மேய செஞ்சடையின் அப்பனே
மிழலை மேவியவெ னப்பனே
ஏயுமா செய விருப்பனே
இசைந்த வாசெய விருப்பனே
காய வர்க்கசம் பந்தனே
காழி ஞானசம் பந்தனே
வாயு ரைத்ததமிழ் பத்துமே
வல்லவர்க் குமிவை பத்துமே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment