துன்னக் கோவணச் பாடல் வரிகள் (tunnak kovanac) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்புகலூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருப்புகலூர்
சுவாமி : அக்னீஸ்வரர்

துன்னக் கோவணச்

துன்னக் கோவணச்
சுண்ணவெண் ணீறணி
பொன்னக் கன்ன
சடைப்புக லூரரோ
மின்னக் கன்னவெண்
டிங்களைப் பாம்புடன்
என்னுக் கோவுடன்
வைத்திட் டிருப்பதே. 1

இரைக்கும் பாம்பு
மெறிதரு திங்களும்
நுரைக்குங் கங்கையும்
நுண்ணிய செஞ்சடைப்
புரைப்பி லாத
பொழிற்புக லூரரை
உரைக்கு மாசொல்லி
ஒள்வளை சோருமே. 2

ஊச லாம்அர
வல்குலென் சோர்குழல்
ஏச லாம்பழி
தந்தெழில் கொண்டனர்
ஓசொ லாய்மக
ளேமுறை யோவென்று
பூசல் நாமிடு
தும்புக லூரர்க்கே. 3

மின்னின் நேரிடை
யாளுமை பங்கனைத்
தன்னை நேரொப்
பிலாத தலைவனைப்
புன்னைக் கானற்
பொழில்புக லூரனை
என்னு ளாகவைத்
தின்புற் றிருப்பனே. 4

விண்ணி னார்மதி
சூடிய வேந்தனை
எண்ணி நாமங்கள்
ஓதி எழுத்தஞ்சுங்
கண்ணி னாற்கழல்
காண்பிட மேதெனிற்
புண்ணி யன்புக
லூருமென் நெஞ்சுமே. 5

அண்ட வாணர்
அமுதுண நஞ்சுண்டு
பண்டு நான்மறை
யோதிய பாடலன்
தொண்ட ராகித்
தொழுது மதிப்பவர்
புண்ட ரீகத்து
ளார்புக லூரரே. 6

தத்து வந்தலை
கண்டறி வாரிலை
தத்து வந்தலை
கண்டவர் கண்டிலர்
தத்து வந்தலை
நின்றவர்க் கல்லது
தத்து வன்னலன்
தண்புக லூரனே. 7

பெருங்கை யாகிப்
பிளிறி வருவதோர்
கருங்கை யானைக்
களிற்றுரி போர்த்தவர்
வருங்கை யானை
மதகளி றஞ்சினைப்
பொருங்கை யானைகண்
டீர்புக லூரரே. 8

பொன்னொத் தநிறத்
தானும் பொருகடல்
தன்னொத் தநிறத்
தானும் அறிகிலாப்
புன்னைத் தாது
பொழிற்புக லூரரை
என்னத் தாவென
என்னிடர் தீருமே. 9

மத்த னாய்மதி
யாது மலைதனை
எத்தி னான்றிரள்
தோள்முடி பத்திற
ஒத்தி னான்விர
லாலொருங் கேத்தலும்
பொத்தி னான்புக
லூரைத் தொழுமினே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment