திருவேயென் செல்வமே பாடல் வரிகள் (tiruveyen celvame) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவாவடுதுறை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவாவடுதுறைதிருவேயென் செல்வமே

திருவேயென் செல்வமே தேனே வானோர்
செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதி மிக்க
உருவேஎன் னுறவேஎன் ஊனே ஊனின்
உள்ளமே உள்ளத்தி னுள்ளே நின்ற
கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற்
கருமணியே மணியாடு பாவாய் காவாய்
அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே. 1

மாற்றேன் எழுத்தஞ்சும் என்றன் நாவின்
மறவேன் திருவருள்கள் வஞ்ச நெஞ்சின்
ஏற்றேன் பிறதெய்வம் எண்ணா நாயேன்
எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்
மேற்றான்நீ செய்வனகள் செய்யக் கண்டு
வேதனைக்கே யிடங்கொடுத்து நாளு நாளும்
ஆற்றேன் அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே. 2

வரையார் மடமங்கை பங்கா கங்கை
மணவாளா வார்சடையாய் நின்றன் நாமம்
உரையா உயிர்போகப் பெறுவே னாகில்
உறுநோய்வந் தெத்தனையு முற்றா லென்னே
கரையா நினைந்துருகிக் கண்ணீர் மல்கிக்
காதலித்து நின்கழலே யேத்து மன்பர்க்
கரையா அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே. 3

சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவச்
சிலைவளைவித் துமையவளை யஞ்ச நோக்கிச்
கலித்தாங் கிரும்பிடிமேற் கைவைத் தோடுங்
களிறுரித்த கங்காளா எங்கள் கோவே
நிலத்தார் அவர்தமக்கே பொறையாய் நாளும்
நில்லா வுயிரோம்பு நீத னேநான்
அலுத்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே. 4

நறுமா மலர்கொய்து நீரின் மூழ்கி
நாடோறும் நின்கழலே யேத்தி வாழ்த்தித்
துறவாத துன்பந் துறந்தேன் தன்னைத்
சூழுலகில் ஊழ்வினைவந் துற்றா லென்னெ
உறவாகி வானவர்கள் முற்றும் வேண்ட
ஒலிதிரைநீர்க் கடல்நஞ்சுண் டுய்யக் கொண்ட
அறவா அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே. 5

கோன்நா ரணன் அங்கத் தோள்மேற் கொண்டு
கொழுமலரான் தன்சிரத்தைக் கையி லேந்திக்
கானார் களிற்றுரிவைப் போர்வை மூடிக்
கங்காள வேடராய் எங்குஞ் செல்வீர்
நானார் உமக்கோர் வினைக்கே டனேன்
நல்வினையுந் தீவினையு மெல்லாம் முன்னே
ஆனாய் அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே. 6

உழையுரித்த மானுரிதோ லாடை யானே
உமையவள்தம் பெருமானே இமையோர் ஏறே
கழையிறுத்த கருங்கடல்நஞ் சுண்ட கண்டா
கயிலாய மலையானே உன்பா லன்பர்
பிழைபொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்றன்
கடனன்றே பேரருளுன் பால தன்றே
அழையுறுத்து மாமயில்க ளாலுஞ் சோலை
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே. 7

உலந்தார் தலைகலனொன் றேந்தி வானோ
ருலகம் பலிதிரிவாய் உன்பா லன்பு
கலந்தார் மனங்கவருங் காத லானே
கனலாடுங் கையவனே ஐயா மெய்யே
மலந்தாங் குயிர்ப்பிறவி மாயக் காய
மயக்குளே விழுந்தழுந்தி நாளும் நாளும்
அலந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே. 8

பல்லார்ந்த வெண்டலை கையி லேந்திப்
பசுவேறி யூரூரன் பலிகொள் வானே
கல்லார்ந்த மலைமகளும் நீயு மெல்லாங்
கரிகாட்டி லாட்டுகந்தீர் கருதீ ராகில்
எல்லாரு மெந்தன்னை யிகழ்வர் போலும்
ஏழையமண் குண்டர்சாக் கியர்களொன்றுக்
கல்லாதார் திறத்தொழிந்தேன் அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே. 9

துறந்தார்தந் தூநெறிக்கண் சென்றே னல்லேன்
துணைமாலை சூட்டநான் தூயே னல்லேன்
பிறந்தேன்நின் திருவருளே பேசி னல்லாற்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
செறிந்தார் மதிலிலங்கைக் கோமான் தன்னைச்
செறுவரைக்கீ ழடர்த்தருளிச் செய்கை யெல்லாம்
அறிந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment