திருத்திகழ் மலைச்சிறுமி பாடல் வரிகள் (tiruttikal malaiccirumi) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவையாறு தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவையாறு
சுவாமி : ஐயாற்றப்பர்
அம்பாள் : அறம்வளர்த்த நாயகி

திருத்திகழ் மலைச்சிறுமி

திருத்திகழ் மலைச்சிறுமி
யோடுமிகு தேசர்
உருத்திகழ் எழிற்கயிலை
வெற்பிலுறை தற்கே
விருப்புடைய அற்புத
ரிருக்குமிடம் ஏரார்
மருத்திகழ் பொழிற்குலவு
வண்திருவை யாறே. 1

கந்தமர வுந்துபுகை
யுந்தலில் விளக்கேர்
இந்திர னுணர்ந்துபணி
யெந்தையிட மெங்கும்
சந்தமலி யுந்தரு
மிடைந்தபொழில் சார
வந்தவளி நந்தணவு
வண்திருவை யாறே. 2

கட்டுவட மெட்டுமுறு
வட்டமுழ வத்தில்
கொட்டுகர மிட்டவொலி
தட்டும்வகை நந்திக்
கிட்டமிக நட்டமவை
யிட்டவ ரிடஞ்சீர்
வட்டமதி லுள்திகழும்
வண்திருவை யாறே. 3

நண்ணியொர் வடத்தின்நிழல்
நால்வர்முனி வர்க்கன்
றெண்ணிலி மறைப்பொருள்
விரித்தவ ரிடஞ்சீர்த்
தண்ணின்மலி சந்தகிலொ
டுந்திவரு பொன்னி
மண்ணின்மிசை வந்தணவு
வண்திருவை யாறே. 4

வென்றிமிகு தாருகன
தாருயிர் மடங்கக்
கன்றிவரு கோபமிகு
காளிகதம் ஓவ
நின்றுநட மாடியிட
நீடுமலர் மேலால்
மன்றல்மலி யும்பொழில்கொள்
வண்திருவை யாறே. 5

பூதமொடு பேய்கள்பல
பாடநட மாடிப்
பாதமுதல் பையரவு
கொண்டணி பெறுத்திக்
கோதைய ரிடும்பலி
கொளும்பர னிடம்பூ
மாதவி மணங்கமழும்
வண்திருவை யாறே. 6

துன்னுகுழல் மங்கையுமை
நங்கைசுளி வெய்தப்
பின்னொரு தவஞ்செய்துழல்
பிஞ்ஞகனு மங்கே
என்னசதி என்றுரைசெ
யங்கண னிடஞ்சீர்
மன்னுகொடை யாளர்பயில்
வண்திருவை யாறே. 7

இரக்கமில் குணத்தொடுல
கெங்கும்நலி வெம்போர்
அரக்கன்முடி யத்தலை
புயத்தொடு மடங்கத்
துரக்கவிர லிற்சிறிது
வைத்தவ ரிடஞ்சீர்
வரக்கருணை யாளர்பயில்
வண்திருவை யாறே. 8

பருத்துருவ தாகிவிண்
அடைந்தவனொர் பன்றிப்
பெருத்துருவ தாயுல
கிடந்தவனு மென்றுங்
கருத்துரு வொணாவகை
நிமிர்ந்தவ னிடங்கார்
வருத்துவகை தீர்கொள்பொழில்
வண்திருவை யாறே. 9

பாக்கியம தொன்றுமில்
சமண்பதகர் புத்தர்
சாக்கியர்க ளென்றுடல்
பொதிந்துதிரி வார்தம்
நோக்கரிய தத்துவ
னிடம்படியின் மேலால்
மாக்கமுற நீடுபொழில்
வண்திருவை யாறே. 10

வாசமலி யும்பொழில்கொள்
வண்திருவை யாற்றுள்
ஈசனை யெழிற்புகலி
மன்னவன்மெய்ஞ் ஞானப்
பூசுர னுரைத்ததமிழ்
பத்துமிவை வல்லார்
நேசமலி பத்தரவர்
நின்மல னடிக்கே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment