திகழுந் திருமா பாடல் வரிகள் (tikalun tiruma) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் குடவாயில் – குடவாசல் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : குடவாயில் – குடவாசல்
சுவாமி : கோணேசுவரர்
அம்பாள் : பெரியநாயகியம்மை

திகழுந் திருமா

திகழுந் திருமா
லொடுநான் முகனும்
புகழும் பெருமான்
அடியார் புகல
மகிழும் பெருமான்
குடவா யில்மன்னி
நிகழும் பெருங்கோ
யில்நிலா யவனே. 1

ஓடுந் நதியும்
மதியோ டுரகம்
சூடுஞ் சடையன்
விடைகொல் கொடிமேல்
கூடுங் குழகன்
குடவா யில்தனில்
நீடும் பெருங்கோ
யில்நிலா யவனே. 2

கலையான் மறையான்
கனலேந் துகையான்
மலையா ளவள்பா
கமகிழ்ந் தபிரான்
கொலையார் சிலையான்
குடவா யில்தனில்
நிலையார் பெருங்கோ
யில்நிலா யவனே. 3

சுலவுஞ் சடையான்
சுடுகா டிடமா
நலமென் முலையாள்
நகைசெய் யநடம்
குலவுங் குழகன்
குடவா யில்தனில்
நிலவும் பெருங்கோ
யில்நிலா யவனே. 4

என்றன் உளமே
வியிருந் தபிரான்
கன்றன் மணிபோல்
மிடறன் கயிலைக்
குன்றன் குழகன்
குடவா யில்தனில்
நின்ற பெருங்கோ
யில்நிலா யவனே. 5

அலைசேர் புனலன்
னனலன் னமலன்
தலைசேர் பலியன்
சதுரன் விதிரும்
கொலைசேர் படையன்
குடவா யில்தனில்
நிலைசேர் பெருங்கோ
யில்நிலா யவனே. 6

அறையார் கழலன்
னழலன் னியலின்
பறையாழ் முழவும்
மறைபா டநடம்
குறையா அழகன்
குடவா யில்தனில்
நிறையார் பெருங்கோ
யில்நிலா யவனே. 7

வரையார் திரள்தோள்
அரக்கன் மடியவ்
வரையா ரவொர்கால்
விரல்வைத் தபிரான்
வரையார் மதில்சூழ்
குடவா யில்மன்னும்
வரையார் பெருங்கோ
யில்மகிழ்ந் தவனே. 8

பொன்னொப் பவனும்
புயலொப் பவனும்
தன்னொப் பறியாத்
தழலாய் நிமிர்ந்தான்
கொன்னற் படையான்
குடவா யில்தனில்
மன்னும் பெருங்கோ
யில்மகிழ்ந் தவனே. 9

வெயிலின் நிலையார்
விரிபோர் வையினார்
பயிலும் முரையே
பகர்பா விகள்பால்
குயிலன் குழகன்
குடவா யில்தனில்
உயரும் பெருங்கோ
யிலுயர்ந் தவனே. 10

கடுவாய் மலிநீர்
குடவா யில்தனில்
நெடுமா பெருங்கோ
யில்நிலா யவனைத்
தடமார் புகலித்
தமிழார் விரகன்
வடமார் தமிழ்வல்
லவர்நல் லவரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment