Thunjalum thunjali Pradosham Sivan Song Tamil Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும் (பஞ்சாக்கரப்பதிகம்) காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.
மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன
செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க்
கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.
ஊனில் உயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர்
ஞான விளக்கினை யேற்றி நன்புலத்
தேனை வழிதிறந் தேத்து வார்க்கிடர்
ஆன கெடுப்பன அஞ்செ ழுத்துமே.
நல்லவர் தீயர் எனாது நச்சினர்
செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ
கொல்ல நமன்றமர் கொண்டு போமிடத்
தல்லல் கெடுப்பன அஞ்செ ழுத்துமே.
கொங்கலர் வன்மதன் வாளி யைந்தகத்
தங்குள பூதமும் அஞ்ச ஐம்பொழில்
தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை
அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே.
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே.
வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாள்தொறும்
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடிஉ கப்பன அஞ்செ ழுத்துமே.
வண்டம ரோதி மடந்தை பேணின
பண்டை யிராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்
கண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே.
கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச்
சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்
கார்வணம் ஆவன அஞ்செ ழுத்துமே.
புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்
சித்தத் தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறணி வார்வி னைப்பகைக்
கத்திரம் ஆவன அஞ்செ ழுத்துமே.
நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
அற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத்
துற்றன வல்லவர் உம்ப ராவரே.
—————- திருச்சிற்றம்பலம் ————-
============
பஞ்சாக்கரப்பதிகம் : பாடலும் விளக்கமும்
பாடல் எண் : 1
துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.
பொழிப்புரை :
தூங்கும்பொழுதும் , விழித்திருக்கும் பொழுதும் , மனம் கசிந்து உருக நாள்தோறும் திருஐந்தெழுத்தை நினைத்துப் போற்றுங்கள் . பல வழிகளில் திரிந்து செல்லும் தன்மையுடைய மனத்தை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து ஒருமுகப்படுத்தி இறைவனையே நினைத்து அவன் திருவடிகளை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் கவர வந்த கூற்றுவனை உதைத்து அழித்தன திருவைந்தெழுத்தே .
குறிப்புரை :
துஞ்சலும் துஞ்சல் இலாதபோழ்தினும் – தூங்கும் போதும் விழித்துக்கொண்டிருக்கும்போதும் ; போழ்தின் என்ற சொல்லைத் துஞ்சல் என்பதினோடுங் கூட்டித் துஞ்சல் பொழுதினும் , துஞ்சுதல் இல்லாத போழ்தினும் என்க . நெஞ்சகம் – மனம் . நைந்து – உருகி . நாள்தோறும் மாந்தரீர் நினைப்பீர்களாக . வஞ்சகம் இன்றிச் சிவபெருமான் திருவடியை மார்க்கண்டேயர் வாழ்த்தி வழிபட அவர் வாழ்நாள்மேல் வந்த யமன் அஞ்சும்படி உதைத்தன திருஐந்தெழுத்துமே . வஞ்சகமாவது , இறைவன் மேற் படரும் சிந்தையை இடையே மாற்றி வினையைப் பிறவிடங்களிற் செலுத்தி வஞ்சித்தல் . இதனை ` நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே வஞ்சமே செய்தியாலோ ` என்ற திருநேரிசையால் அறிக . திருஐந்தெழுத்தை ஓதுவார் எமவாதை நீங்குவார் என்பது இதனாற் பெற்றாம் .
பாடல் எண் : 2
மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன
செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க்
கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.
பொழிப்புரை :
மந்திரங்களாகவும் , நான்கு வேதங்களாகவும் ஆகித் தேவர்களுடைய சிந்தையினுள்ளும் நின்று அவர்களை ஆட்கொண்டு நன்னெறி பயப்பது திருவைந்தெழுத்தே ஆகும் . செந்நிற அழலோம்பிச் செம்மை நெறியில் நிற்கும் வேதியர்க்கும் காலை , நண்பகல் , மாலை என்ற மூன்று சந்தியா காலங்களிலும் செபிக்க வேண்டிய மந்திரம் திருஐந்தெழுத்தேயாகும் .
குறிப்புரை :
மந்திரமும் நான்கு வேதங்களும் ஆகி ; திருவைந் தெழுத்தே வேதம் என்றது . மறையிற்கூறும் அனைத்தும் ஐந்தெழுத்தில் அடங்கும் என்பதுபற்றி ` அஞ்செழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறையும் ` என்ற உண்மை விளக்கம் 45 காண்க . செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்தும் – அழல் ஓம்பிச் செந்நெறி நிற்கும் வேதியருக்கும் மூன்று சந்தியா காலங்களிலும் செபிக்கத்தக்க மந்திரம் திரு ஐந்தெழுத்தேயாம் என்க . அந்தி – சந்திவேளை மூன்று . காலை , நண்பகல் , மாலை ; ` காலை அந்தியும் மாலை அந்தியும் ` என்பது புறநானூறு . ` அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் , அருக்கன் ஆவான் அரன் உரு அல்லனோ ` ( திருக்குறுந்தொகை ) இவற்றால் அந்தி என்ற சொல் மூன்று வேளையையும் குறிப்பதை அறிக . இப்பதிக வரலாற்றைச் செழு மறையோர்க்கருளி அவர் தெளியுமாற்றால் முந்தை முதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும் முதல் ஆகும் முதல்வனார் எழுத்து அஞ்சு என்பார் . அந்தியினுள் மந்திரம் அஞ்செழுத்துமே என்று அஞ்செழுத்தின் திருப்பதிகம் அருளிச் செய்தார் என்னுந் திருத்தொண்டர் புராணத்தால் அறிக .
பாடல் எண் : 3
ஊனில் உயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர்
ஞான விளக்கினை யேற்றி நன்புலத்
தேனை வழிதிறந் தேத்து வார்க்கிடர்
ஆன கெடுப்பன அஞ்செ ழுத்துமே.
பொழிப்புரை :
உடம்பில் பிராணாயாமத்தால் உயிர்ப்புச் சக்தியை ஒடுக்கி , ஞானவிளக்கம் பெறச் செய்து , அறிவைப் பெறும் வாயில்களால் நல்ல மெய்யறிவை நாடி இறைவனைப் போற்றுவார்கட்கு அறியாமையால் வரும் துன்பங்களைக் கெடுப்பன திருவைந் தெழுத்தேயாகும் .
குறிப்புரை :
ஊன் உடம்பு . உயிர்ப்பு – மூச்சு . நன்புலம் – நல்ல அறிவு . நிட்டைகூடி இருப்போருக்கு அந்நிட்டை கலையவரும் யோக சமாதியில் வாசனாமலம் முதலிய இடர்களைக் கெடுப்பதும் திரு ஐந்தெழுத்தேயாம் என்க . ` பிறவித்துயராகிய வெப்பத்துக்குக் குளிர்ந்த நிழலாய் வெளிப்பட்டு விளங்கும் . அங்ஙனம் விளங்கிய ஞானத்தான் ஞேயத்தைக் கண்ட காட்சி சலியாமைப் பொருட்டு , அப்பொருள் பயக்கும் திருவஞ்செழுத்து , அவ்விதிப்படி அறிந்து கணிக்கப்படும் .` ( சிவஞானபோத மாபாடியம் . சூ .9.)
பாடல் எண் : 4
நல்லவர் தீயர் எனாது நச்சினர்
செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ
கொல்ல நமன்றமர் கொண்டு போமிடத்
தல்லல் கெடுப்பன அஞ்செ ழுத்துமே.
பொழிப்புரை :
புண்ணியர் , பாவிகள் என்ற பாகுபாடு இன்றி விரும்பிச் செபிப்பவர்கள் யாவரேயாயினும் அவர்களுடைய மலங்களை நீக்கிச் சிவமுத்தி காட்டும் ஆற்றலுடையன திருவைந்தெழுத்தாகும் . எமதூதர்கள் வந்து உயிரைக் கொண்டு செல்லும் காலத்தும் , மரணத்தறுவாயில் ஏற்படக் கூடிய துன்பத்தைப் போக்குவனவும் திருவைந்தெழுத்தேயாகும் .
குறிப்புரை :
நல்லவர் – புண்ணியர் . தீயவர் , பாவியர் , என்று பிரிக்காமல் யாவரேயாயினும் விரும்பித் திருவைந்தெழுத்தைச் செபிப்பார்களேயாயின் , துன்பந்தரும் மலங்கள் நீங்கச் சிவப்பேறாகிய முத்தியின்பத்தை அடையலாம் . உயிர்போகும் தறுவாயில் நினைத்தாலும் உச்சரித்தாலும் எமவாதை இல்லாதொழிக்கலாம் என்பது . இதனை ` மந்தரம் அன பாவங்கள் மேவிய பந்தனை யவர் தாமும் பகர்வரேல் , சிந்தும்வல்வினை செல்வமும் மல்குமால் நந்திநாமம் நமச்சிவாயவே ` என்ற பாசுரத்தாலும் , ` விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணியபுகில் அவையொன்றும் இல்லையாம் , பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை , நண்ணிநின்று அறுப்பது நமச்சிவாயவே ` என்னும் பாசுரத்தாலும் அறிக . கொல்ல … இடத்து – மரணத் தறுவாயில் வரக்கடவனவாகிய துன்பங்களைக் கெடுக்கும் .
பண் :காந்தார பஞ்சமம்
பாடல் எண் : 5
கொங்கலர் வன்மதன் வாளி யைந்தகத்
தங்குள பூதமும் அஞ்ச ஐம்பொழில்
தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை
அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே.
பொழிப்புரை :
வலிய மன்மதனின் அம்பானது தேன்துளிர்க்கும் தாமரை , அசோகு , மா , முல்லை , கருங்குவளை என்ற ஐந்து மலர்கள் ஆகும் . இவ்வுலகிலுள்ள பூதங்கள் நிலம் , நீர் , நெருப்பு , காற்று , ஆகாயம் என்ற ஐந்தாகும் . சோலைகள் அரிசந்தனம் , கற்பகம் , சந்தானம் , பாரிசாதம் , மந்தாரம் என ஐந்தாகும் . பாம்பின் படம் ஐந்து ஆகும் . செபிப்போருடைய கைவிரல்கள் ஐந்தாகும் . இவ்வாறு ஐவகையாகக் காணப்படும் யாவற்றுக்கும் ஒப்ப , மந்திரமும் திருவைந்தெழுத்தே யாகும் .
குறிப்புரை :
முதல் இரண்டடிக்கு – வல்மதன் கொங்கு அலர்வாளி ஐந்து – வலிய மன்மதனது மணத்தையுடைய மலர் அம்பு ஐந்து என்க . அகம் – இடம் ; உலகம் . இவ்வுலகத்தில் உள்ள பூதங்களும் அஞ்ச . ( அஞ்சு + அ ) ஐந்து ஆவன . ஐம்பொழில் – கற்பகச் சோலைகளும் , ஐந்தாவன – தங்கு அரவின் படம் அஞ்சு , தம்முடைய அங்கையில் ஐவிரல் , இறைவன் திருமேனியில் அணியாக உள்ள பாம்பின் படமும் ஐந்து , செபிப்போரது கையில் உள்ள விரலும் ஐந்து . இவற்றிற்கொப்ப மந்திரமும் அஞ்செழுத்து மாயின .
பாடல் எண் : 6
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே.
பொழிப்புரை :
தும்மல் , இருமல் தொடர்ந்து வந்த பொழுதும் , கொடிய நரகத் துன்பத்தை அனுபவிக்க நேரும் பொழுதும் , முற்பிறப்புக்களில் செய்த வினை இப்பிறவியில் வந்து வருத்தும் பொழுதும் , இப்பிறவியில் நாள்தோறும் ஓதிவந்ததன் பயனால் மறுபிறவியிலும் வந்து துணையாவது திருவைந்தெழுத்தேயாகும் .
குறிப்புரை :
தும்மும்போதும் இருமும்போதும் உடலில் நீங்குவது உள்ளமையால் அப்பொழுதும் , கொடிய நரகத்துன்பம் நுகரவந்த விடத்தும் , முற்பிறப்பிற் செய்தவினை இம்மைக்கண் அடர்த்துச் சேரும்பொழுதும் , உச்சரிக்கத் துணையாவதும் இம்மையில் ஓயாது ஓதி வந்ததின் பயனாக மறுபிறவியில் வந்து துணையாவதும் திருவைந்தெழுத்தே .
பாடல் எண் : 7
வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாள்தொறும்
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடிஉ கப்பன அஞ்செ ழுத்துமே.
பொழிப்புரை :
இறப்பு , பிறப்பு இவற்றை அறுத்து இத்திரு மந்திரத்தைப் பாராட்டிச் செபிப்பவர்களின் துன்பங்களை நீக்குவன . தினந்தோறும் செல்வங்கள் யாவும் கொடுப்பன . நிலைபெற்ற நடனத்தையாடும் சிவபெருமான் மகிழ்வன திருவைந்தெழுத்தே யாகும் .
குறிப்புரை :
வீடு – இங்குச் சாதல் என்னும் பொருளில் வந்துள்ளது . பிறப்பு – பிறத்தல் . சாதலும் பிறத்தலும் தவிர்த்து . மெச்சினர் – தன்னைப் பாராட்டிப் பயில்பவர் . பீடை – பிறவியில் வரக்கடவ துன்பங்கள் . அவை :- பிற உயிர்களால் வருவன , தெய்வத்தால் வருவன , தன்னால் வருவன என மூவகைப்படும் . மாடு – செல்வம் . கொடுப்பன . திருவைந்தெழுத்து செல்வமும் தரும் என்பதைச் ` சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால் , நந்திநாமம் நமச்சிவாயவே ` என்பதற்கண் காண்க மன்னும் – நிலைபெற்ற , மா நடம் – பெரிய கூத்தை , ஆடி மகிழ்வனவும் திருவைந்தெழுத்துக்களாம் . அஞ்செழுத்தே நடம் ஆடி உகப்பன என்றது ` சிவாயநம வென்னும் திருவெழுத்தைந்தாலே அபாய மற நின்றாடுவான் .` என்ற உண்மை விளக்கச் செய்யுட்கருத்து .
பாடல் எண் : 8
வண்டம ரோதி மடந்தை பேணின
பண்டை யிராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்
கண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே.
பொழிப்புரை :
வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமா தேவியால் செபிக்கப்படும் சிறப்புடையன திருவைந்தெழுத்தாகும் . முற்காலத்தில் இராவணன் திருவைந்தெழுத்து ஓதி உய்ந்தான் . அடியார்கள் தங்கள் கடமையாகக் கொண்டு , செபித்த அளவில் அவர்களுக்கு அண்டங்களையெல்லாம் அரசாளக் கொடுப்பன இவ்வைந்தெழுத்தாகும் .
குறிப்புரை :
வண்டுஅமர் ….. பேணின – வண்டுகள் விரும்பும் கூந்தலையுடைய அம்பிகையாரால் பாராட்டிச் செபிக்கப்பெற்றன . இராவணன் பாடியது இப் பஞ்சாக்கரமே என்கிறது இரண்டாம் அடி . தொண்டர்கள் – அடியார்கள் . கொண்டு – தங்கள் கடமையைக் கொண்டு . துதித்தபின் – செபித்த அளவில் . அவர்களுக்கு அண்டங்களையெல்லாம் அரசாளக் கொடுப்பன இவ்வைந் தெழுத்துமாம் . தொண்டர்கள் கொண்டு துதித்தமை ஆனாய நாயனார் புராணம் ( தி .12) முதலியவற்றாலறிக .
பாடல் எண் : 9
கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச்
சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்
கார்வணம் ஆவன அஞ்செ ழுத்துமே.
பொழிப்புரை :
திருமாலும் , பிரமனும் காணவொண்ணாத சிறப்புடைய திருவடிகளின் பெருமையை நாள்தோறும் பலமுறை பேசிப் போற்றும் பக்தர்கட்கு ஆர்வமாக விளங்குவன திருவைந் தெழுத்தாகும் .
குறிப்புரை :
பிரம விட்டுணுக்களால் காண முடியாத அடி என்றது . அத்தகுசீரிய அடியைக் காணுவதுமட்டும் அன்று . அத் திருவடிப் பேறாகிமேல் இன்பத்தில் திளைத்தலுமாகும் . பேர்வணம் – இறைவ னுடைய திருப்பெயராகிய தன்மையை ( அஞ்செழுத்தை ). பேசி – உச்சரித்து , பிதற்றும் அதனையே எண்ணிப் பன்னிப் பன்னிப் பலதரமும் சொல்லும் பக்தருக்கு (` பிடித்தொன்றை விடாதுபேசல் பிதற்றுதல் என்று மாமே ` என்பது சூடா மணி நிகண்டு .) ஆர்வணம் – ஆர்தல் ; திளைத்தல் . பித்தர் – இங்குப் பேரன்பினர் என்னும் பொருளில் வந்தது . ` நின்கோயில் வாயிலிற் பிச்சனாக்கினாய் ` திருவாசகம் . ` அம்பலவர்க்குற்ற பத்தியர்போல ….. ஓர் பித்தி தன்பின்வர முன்வருமோஓர் பெருந்தகையே ` ( திருக்கோவையார் – 242) என வருவனவற்றால் அறிக . பிரமன் முடியையும் திருமால் அடியையும் தேடிக் காணமாட்டாமை ஏனைய பதிகங்கள் குறிக்க , இப்பதிகம் இருவரும் காணாத சேவடி என்று மட்டும் குறிக்கிறது . அதன் கருத்து , திருமாலால் காணமுடியாத அடி பிரமனாலும் காணமுடியாது என்பதாம் . அநுபலப்தியால் பெறவைப்பான் ` கார்வணன் நான்முகன் காணுதற்கொணாச் சீர்வணச் சேவடி ` யென்று ; அடியே காணாதார் முடிகாண மாட்டாமையும் பெற வைத்தமையறிக .
பாடல் எண் : 10
புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்
சித்தத் தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறணி வார்வி னைப்பகைக்
கத்திரம் ஆவன அஞ்செ ழுத்துமே.
பொழிப்புரை :
புத்தர்களும் , சமணர்களும் கூறும் பொய் வார்த்தைகளை மனத்திற் கொள்ளாத தெளிந்த சித்தத்தவர்களால் உறுதியுடன் ஓதப்படுவன திருவைந்தெழுத்தாகும் . சகல சக்திகளுமுடைய திருநீற்றை அணிபவர்களுடன் போர்புரிய வரும் பகைவர்களை எதிர்த்து அம்புபோல் பாய்ந்து அழிக்கவல்லன திருவைந்தெழுத்தேயாகும்.
குறிப்புரை :
சமணர்களாகிய கழுவையேந்திய கையையுடையவர் . வித்தகம் நீறு – திறமையைத் தரும் விபூதி . அத்திரம் – அம்பு . நீறணிவார் – சிவனடியார் . வினை – போர் . ` வினைநவின்ற யானை ` என்பது புறநானூறு . சிவனடியார் மேற் போர்புரியப் பகைவர் எவர்வரினும் அவரை எதிர்த்து அம்பு போற்பாய்ந்து அழிக்க வல்லது திரு ஐந்தெழுத்துமே . போதி மங்கையில் கூட்டத்தோடு புகலியர் கோனை எதிர்த்த புத்த நந்தி தலையில் இடிவிழச் செய்தது இப்பாசுரமே . வினையாகிய பகைக்கு ஐந்தெழுத்து ஆகிய அத்திரம் என்றது உருவகம் .
பாடல் எண் : 11
நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
அற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத்
துற்றன வல்லவர் உம்ப ராவரே.
பொழிப்புரை :
நன்னெறி கூட்டுவிக்கும் தமிழ் பரப்பும் , ஞானசம்பந்தன் , நான்கு வேதங்களையும் கற்று வல்லவனாய்ச் சீகாழி மக்கள் தலைவனாய் மனத்தால் தியானித்துப் பாடிய , கேடுகள் வாராமல் தடுக்கும் திருவைந்தெழுத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் இம்மாலையின் பத்துப் பாடல்களையும் ஓதவல்லவர்கள் தேவர்களாவார்கள் .
குறிப்புரை :
உன்னிய – நினைத்துப்பாடிய . அற்றம் இல் மாலை – கேடு அவமானம் முதலியன இல்லையாக்குவிக்கும் ( வாராமல் தடுக்கும் ) மாலை . ஐந்தெழுத்து உற்றன ஆகிய இம்மாலையிலுள்ள பத்துப் பாசுரங்களில் வல்லவர் தேவர் ஆவர் .
இந்த | thunjalum thunjali பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, பிரதோஷ பாடல் வரிகள், பிரதோஷ பூஜை, Pradosham songs lyrics in tamil, பிரதோஷ கால மந்திரம், Pradosham Sivan Song துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும் (பஞ்சாக்கரப்பதிகம்) போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…