திருத்தசாங்கம் – Thiruthasangam thiruvasagam lyrics in tamil
திருச்சிற்றம்பலம் – Thiruthasangam thiruvasagam lyrics in tamil
ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன்
சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் – ஆரூரன்
செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோல்
எம்பெருமான் தேவர்பிரான் என்று. 1
ஏதமிலா இன்சொல் மரகதமே ஏழ்பொழிற்கும்
நாதன் நமை ஆளுடையான் நாடுரையாய் – காதலவர்க்கு
அன்பாண்டு மீளா அருள்புரிவான் நாடென்றும்
தென்பாண்டி நாடே தெளி. 2
தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும்
மாதாடும் பாகத்தான் வாழ்பதியென் – கோதாட்டிப்
பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும்
உத்தர கோசமங்கை யூர். 3
செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீநஞ் சிந்தைசேர்
ஐயன் பெருந்துறையான் ஆறுரையாய் – தையலாய்
வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும்
ஆனந்தங் காணுடையான் ஆறு. 4
கிஞ்சுகவாய் அஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன்
மஞ்சன் மருவும் மலைபகராய் – நெஞ்சத்து
இருளகல வாள்வீசி இன்பமரும் முத்தி
அருளுமலை என்பதுகாண் ஆய்ந்து. 5
இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே
ஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே – எப்போதும்
தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பெண் ணேத்திசைப்ப
வான்புரவி யூரும் மகிழ்ந்து. 6
கோற்றேன் மொழிக்கிள்ளாய் கோதில் பெருந்துறைக்கோன்
மாற்றாரை வெல்லும் படைபகராய் – ஏற்றார்
அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயுங்
கழுக்கடைகாண் கைக்கொள் படை. 7
இன்பால் மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோன்
முன்பால் முழங்கும் முரசியம்பாய் – அன்பாற்
பிறவிப் பகைகலங்கப் பேரின்பத் தோங்கும்
பருமிக்க நாதப் பறை. 8
ஆய மொழிக்கிள்ளாய் அள்ளூறும் அன்பர்பால்
மேய பெருந்துறையான் மெய்த்தாரென் – தீயவினை
நாளுமணு காவண்ணம் நாயேனை ஆளுடையான்
தாளிஅறு காம் உவந்த தார். 9
சோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன்
கோலம் பொலியுங் கொடிகூறாய் – சாலவும்
ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி ஏர்காட்டும்
கோதிலா ஏறாம் கொடி. 10
அருளியவர் : மாணிக்கவாசகர்
தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சிறப்பு: அடிமை கொண்ட முறைமை; நேரிசை வெண்பா.