குயிற்பத்து – kuyil pathu thiruvasagam lyrics in tamil

திருச்சிற்றம்பலம் – குயிற்பத்து  (Kuyil Pathu Thiruvasagam Lyrics)

கீத மினிய குயிலே கேட்டியேல்
எங்கள் பெருமான்
பாத மிரண்டும் வினவில் பாதாளம்
ஏழினுக் கப்பால்
சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந்து
நின்ற தொன்மை
ஆதிகுண மொன்று மில்லான் அந்தமி
லான்வரக் கூவாய். 1

ஏர்தரும் ஏழுல கேத்த எவ்வுரு
வுந்தன் னுருவாய்
ஆர்கலி சூழ்தென் னிலங்கை அழகமர்
வண்டோ தரிக்குப்
பேரருளின்ப மளித்த பெருந்துறை
மேய பிரானைச்
சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி
நாடனைக் கூவாய். 2

நீல வுருவிற் குயிலே நீள்மணி
மாடம் நிலாவுங்
கோல அழகில் திகழுங் கொடிமங்கை
உள்ளுறை கோயில்
சீலம் பெரிதும் இனிய திருவுத்
தரகோச மங்கை
ஞாலம் விளங்க இருந்த நாயக
னைவரக் கூவாய். 3

தேன்பழச் சோலை பயிலுஞ் சிறுகுயி
லேயிது கேள்நீ
வான்பழித் திம்மண் புகுந்து மனிதரை
ஆட்கொண்ட வள்ளல்
ஊன்பழித் துள்ளம் புகுந்தென் உணர்வது
வாய வொருத்தன்
மான்பழித் தாண்டமென்னோக்கி மணாளனை
நீவரக் கூவாய். 4

சுந்தரத் தின்பக் குயிலே சூழ்சுடர்
ஞாயிறு போல
அந்தரத் தேநின் றிழிந்திங் கடியவ
ராசை அறுப்பான்
முந்தும் நடுவும் முடிவு மாகிய
மூவ ரறியாச்
சிந்துரச் சேவடி யானைச் சேவக
னைவரக் கூவாய். 5

இன்பந் தருவன் குயிலே ஏழுல
கும்முழு தாளி
அன்பன் அமுதளித் தூறும் ஆனந்தன்
வான்வந்த தேவன்
நன்பொன் மணிச்சுவ டொத்த நற்பரி
மேல்வரு வானைக்
கொம்பின் மிழற்றுங் குயிலே கோகழி
நாதனைக் கூவாய். 6

உன்னை உகப்பன் குயிலே உன்துணைத்
தோழியும் ஆவன்
பொன்னை அழித்தநன் மேனிப் புகழில்
திகழும் அழகன்
மன்னன் பரிமிசை வந்த வள்ளல்
பெருந்துறை மேய
தென்னவன் சேரவன் சோழன் சீர்ப்புயங்
கன்வரக் கூவாய். 7

வாவிங்கே நீகுயிற் பிள்ளாய் மாலொடு
நான்முகன் தேடி
ஓவியவ ருன்னி நிற்ப ஒண்தழல்
விண்பிளந் தோங்கி
மேவிஅன் றண்டங் கடந்து விரிசுட
ராய்நின்ற மெய்யன்
தாவி வரும்பரிப் பாகன் தாழ்சடை
யோன்வரக் கூவாய். 8

காருடைப் பொன்திகழ் மேனிக் கடிபொழில்
வாழுங் குயிலே
சீருடைச் செங்கமலத்தில் திகழுரு
வாகிய செல்வன்
பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசம்
அறுத்தெனை யாண்ட
ஆருடை அம்பொனின் மேனி அமுதினை
நீவரக் கூவாய். 9

கொந்தண வும்பொழிற் சோலைக் கூங்குயி
லேயிது கேள்நீ
அந்தண னாகிவந்திங்கே அழகிய
சேவடி காட்டி
எந்தம ராம்இவ னென்றிங் கென்னையும்
ஆட்கொண்டருளும்
செந்தழல் போல்திரு மேனித் தேவர்
பிரான்வரக் கூவாய். 10

அருளியவர் : மாணிக்கவாசகர்
தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு : சோழநாடு காவிரி வடகரை

சிறப்பு: ஆத்தும இரக்கம்; ஆசிரிய விருத்தம்.

Leave a Comment