தேவா சிறியோம் பாடல் வரிகள் (teva ciriyom) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருமுதுகுன்றம் – விருத்தாசலம் தலம் நடுநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : நடுநாடு
தலம் : திருமுதுகுன்றம் – விருத்தாசலம்
சுவாமி : பழமலைநாதர்
அம்பாள் : பெரியநாயகி

தேவா சிறியோம்

தேவா சிறியோம் பிழையைப்
பொறுப்பாய் பெரியோனே
ஆவா வென்றங் கடியார்
தங்கட் கருள்செய்வாய்
ஓவா உவரி கொள்ள
உயர்ந்தா யென்றேத்தி
மூவா முனிவர் வணங்குங்
கோயில் முதுகுன்றே 1

எந்தை யிவனென் றிரவி
முதலா இறைஞ்சுவார்
சிந்தை யுள்ளே கோயி
லாகத் திகழ்வானை
மந்தி யேறி யினமா
மலர்கள் பலகொண்டு
முந்தித் தொழுது வணங்குங்
கோயில் முதுகுன்றே 2

நீடு மலரும் புனலுங்
கொண்டு நிரந்தரம்
தேடும் அடியார் சிந்தை
யுள்ளே திகழ்வானைப்
பாடுங் குயிலின் அயலே
கிள்ளை பயின்றேத்த
மூடுஞ் சோலை முகில்தோய்
கோயில் முதுகுன்றே 3

தெரிந்த அடியார் சிவனே
யென்று திசைதோறும்
குருந்த மலருங் குரவின்
அலருங் கொண்டேந்தி
இருந்தும் நின்றும் இரவும்
பகலும் ஏத்துஞ்சீர்
முரிந்து மேகந் தவழும்
சோலை முதுகுன்றே 4

வைத்த நிதியே மணியே
யென்று வருந்தித்தம்
சித்தம் நைந்து சிவனே
என்பார் சிந்தையார்
கொத்தார் சந்துங் குரவும்
வாரிக் கொணர்ந்துந்தும்
முத்தா றுடைய முதல்வர்
கோயில் முதுகுன்றே. 5

வம்பார் கொன்றை வன்னி
மத்தம் மலர்தூவி
நம்பா வென்ன நல்கும்
பெருமான் உறைகோயில்
கொம்பார் குரவு கொகுடி
முல்லை குவிந்தெங்கும்
மொய்ம்பார் சோலை வண்டு
பாடும் முதுகுன்றே. 6

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்து போயிற்று. 7

வாசங் கமழும் பொழில்சூழ்
இலங்கை வாழ்வேந்தை
நாசஞ் செய்த நங்கள்
பெருமான் அமர்கோயில்
பூசை செய்த அடியார்
நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ்
சோலை முதுகுன்றே 8

அல்லி மலர்மேல் அயனும்
அரவின் அணையானும்
சொல்லிப் பரவித் தொடர
வொண்ணாச் சோதியூர்
கொல்லை வேடர்கூடி
நின்று கும்பிட
முல்லை யயலே முறுவல்
செய்யும் முதுகுன்றே 9

கருகும் உடலார் கஞ்சி
யுண்டு கடுவேதின்
றுருகு சிந்தை யில்லார்க்
கயலான் உறைகோயில்
திருகல் வேய்கள் சிறிதே
வளையச் சிறுமந்தி
முருகின் பணைமே லிருந்து
நடஞ்செய் முதுகுன்றே 10

அறையார் கடல்சூழ் அந்தண்
காழிச் சம்பந்தன்
முறையால் முனிவர் வணங்குங்
கோயில் முதுகுன்றைக்
குறையாப் பனுவல் கூடிப்
பாட வல்லார்கள்
பிறையார் சடையெம் பெருமான்
கழல்கள் பிரியாரே.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment