தளிரிள வளரொளி பாடல் வரிகள் (talirila valaroli) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருநள்ளாறு தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருநள்ளாறு
சுவாமி : தர்ப்பாரண்யேஸ்வரர்
அம்பாள் : போகமார்த்த பூண்முலையாள்

தளிரிள வளரொளி

தளிரிள வளரொளி தனதெழில்
தருதிகழ் மலைமகள்
குளிரிள வளரொளி வனமுலை
யிணையவை குலவலின்
நளிரிள வளரொளி மருவுநள்
ளாறர்தம் நாமமே
மிளிரிள வளரெரி யிடிலிவை
பழுதிலை மெய்ம்மையே. 1

போதமர் தருபுரி குழலெழின்
மலைமகள் பூணணி
சீதம தணிதரு முகிழிள
வனமுலை செறிதலின்
நாதம தெழிலுரு வனையநள்
ளாறர்தந் நாமமே
மீதம தெரியினி லிடிலிவை
பழுதிலை மெய்ம்மையே. 2

இட்டுறு மணியணி யிணர்புணர்
வளரொளி யெழில்வடங்
கட்டுறு கதிரிள வனமுலை
யிணையொடு கலவலின்
நட்டுறு செறிவயல் மருவுநள்
ளாறர்தந் நாமமே
இட்டுறு மெரியினி லிடிலிவை
பழுதிலை மெய்ம்மையே. 3

மைச்சணி வரியரி நயனிதொன்
மலைமகள் பயனுறு
கச்சணி கதிரிள வனமுலை
யவையொடு கலவலின்
நச்சணி மிடறுடை யடிகள்நள்
ளாறர்தந் நாமமே
மெச்சணி யெரியினி லிடிலிவை
பழுதிலை மெய்ம்மையே. 4

பண்ணியல் மலைமகள் கதிர்விடு
பருமணி யணிநிறக்
கண்ணியல் கலசம தனமுலை
யிணையொடு கலவலின்
நண்ணிய குளிர்புனல் புகுதுநள்
ளாறர்தந் நாமமே
விண்ணிய லெரியினி லிடிலிவை
பழுதிலை மெய்ம்மையே. 5

போதுறு புரிகுழல் மலைமகள்
இளவளர் பொன்னணி
சூதுறு தளிர்நிற வனமுலை
யவையொடு துதைதலின்
தாதுறு நிறமுடை யடிகள்நள்
ளாறர்தந் நாமமே
மீதுறு மெரியினி லிடிலிவை
பழுதிலை மெய்ம்மையே. 6

கார்மலி நெறிபுரி சுரிகுழல்
மலைமகள் கவினுறு
சீர்மலி தருமணி யணிமுலை
திகழ்வொடு செறிதலின்
தார்மலி நகுதலை யுடையநள்
ளாறர்தந் நாமமே
ஏர்மலி யெரியினி லிடிலிவை
பழுதிலை மெய்ம்மையே. 7

மன்னிய வளரொளி மலைமகள்
தளிர்நிற மதமிகு
பொன்னியல் மணியணி கலசம
தனமுலை புணர்தலின்
தன்னியல் தசமுகன் நெறியநள்
ளாறர்தந் நாமமே
மின்னிய லெரியினி லிடிலிவை
பழுதிலை மெய்ம்மையே. 8

கான்முக மயிலியன் மலைமகள்
கதிர்விடு கனமிகு
பான்முக மியல்பணை யிணைமுலை
துணையொடு பயிறலின்
நான்முகன் அரியறி வரியநள்
ளாறர்தந் நாமமே
மேன்முக வெரியினி லிடிலிவை
பழுதிலை மெய்ம்மையே. 9

அத்திர நயனிதொன் மலைமகள்
பயனுறு மதிசயச்
சித்திர மணியணி திகழ்முலை
யிணையொடு செறிதலின்
புத்தரொ டமணர்பொய் பெயருநள்
ளாறர்தந் நாமமே
மெய்த்திர ளெரியினி லிடிலிவை
பழுதிலை மெய்ம்மையே. 10

சிற்றிடை அரிவைதன் வனமுலை
யிணையொடு செறிதரு
நற்றிற முறுகழு மலநகர்
ஞானசம் பந்தன
கொற்றவன் எதிரிடை யெரியினி
லிடஇவை கூறிய
சொற்றெரி யொருபதும் அறிபவர்
துயரிலர் தூயரே.

இது சமணர் வாதின்பொருட்டுத் தீயிலிடுதற்கு போகமார்த்த பூண்முலையாளென்னும்
பதிகம் உதயமாக இது தீயில் பழுது படாது என்னுந் துணிவுகொண்டு அருளிச்செய்த பதிகம்.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment