தளருங் கோளர பாடல் வரிகள் (talarun kolara) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் கடம்பூர் – மேல்கடம்பூர் தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு வடகரை
தலம் : கடம்பூர் – மேல்கடம்பூர்
சுவாமி : அமிர்தகடேஸ்வரர்
அம்பாள் : சோதி மின்னம்மை
தளருங் கோளர
தளருங் கோளர
வத்தொடு தண்மதி
வளருங் கோல
வளர்சடை யார்க்கிடங்
கிளரும் பேரிசைக்
கின்னரம் பாட்டறாக்
களருங் கார்க்கடம்
பூர்க்கரக் கோயிலே. 1
வெலவ லான்புலன்
ஐந்தொடு வேதமுஞ்
சொலவ லான்சுழ
லுந்தடு மாற்றமும்
அலவ லான்மனை
யார்ந்தமென் றோளியைக்
கலவ லான்கடம்
பூர்க்கரக் கோயிலே. 2
பொய்தொ ழாது
புலியுரி யோன்பணி
செய்தெ ழாவெழு
வார்பணி செய்தெழா
வைதெ ழாதெழு
வாரவர் எள்கநீர்
கைதொ ழாவெழு
மின்கரக் கோயிலே. 3
துண்ணெ னாமனத்
தால்தொழு நெஞ்சமே
பண்ணி னான்முனம்
பாடல துசெய்தே
எண்ணி லாரெயில்
மூன்றும் எரித்தமுக்
கண்ணி னான்கடம்
பூர்க்கரக் கோயிலே. 4
சுனையுள் நீல
மலரன கண்டத்தன்
புனையும் பொன்னிறக்
கொன்றை புரிசடைக்
கனையும் பைங்கழ
லான்கரக் கோயிலை
நினையும் உள்ளத்
தவர்வினை நீங்குமே. 5
குணங்கள் சொல்லியுங்
குற்றங்கள் பேசியும்
வணங்கி வாழ்த்துவர்
அன்புடை யாரெலாம்
வணங்கி வான்மலர்
கொண்டடி வைகலுங்
கணங்கள் போற்றிசைக்
குங்கரக் கோயிலே. 6
பண்ணி னார்மறை
பல்பல பூசனை
மண்ணி னார்செய்வ
தன்றியும் வைகலும்
விண்ணி னார்கள்
வியக்கப் படுவன
கண்ணி னார்கடம்
பூர்க்கரக் கோயிலே. 7
அங்கை ஆரழ
லேந்திநின் றாடலன்
மங்கை பாட
மகிழ்ந்துடன் வார்சடைக்
கங்கை யானுறை
யுங்கரக் கோயிலைத்
தங்கை யாற்றொழு
வார்வினை சாயுமே. 8
நங்க டம்பனைப்
பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத்
திருக்கரக் கோயிலான்
தன்க டன்னடி
யேனையுந் தாங்குதல்
என்க டன்பணி
செய்து கிடப்பதே. 9
பணங்கொள் பாற்கடல்
பாம்பணை யானொடும்
மணங்க மழ்மலர்த்
தாமரை யானவன்
பிணங்கும் பேரழல்
எம்பெரு மாற்கிடங்
கணங்கள் போற்றிசைக்
குங்கரக் கோயிலே. 10
வரைக்கண் நாலஞ்சு
தோளுடை யான்றலை
அரைக்க வூன்றி
அருள்செய்த ஈசனார்
திரைக்குந் தண்புனல்
சூழ்கரக் கோயிலை
உரைக்கும் உள்ளத்
தவர்வினை ஓயுமே.
திருச்சிற்றம்பலம்