செத்திலாப்பத்து திருவாசகம் பாடல் வரிகள் – sethila pathu thiruvasagam lyrics

திருச்சிற்றம்பலம் – sethila pathu thiruvasagam lyrics

பொய்யனேன் அகம்நெகப் புகுந்தமுதூறும்
புதுமலர்க்கழலிணையடி பிரிந்தும்
கையனேன் இன்னுஞ் செத்திலேன் அந்தோ
விழித்திருந் துள்ளக் கருத்தினை இழந்தேன்
ஐயனே அரசே அருட்பெருங் கடலே
அத்தனே அயன் மாற்கறி யொண்ணாச்
செய்யமே னியனே செய்வகை அறியேன்
திருப்பெருந்துறை மேவிய சிவனே. 1

புற்று மாய்மர மாய்ப்புனல் காலே
உண்டி யாய் அண்ட வாணரும் பிறரும்
வற்றியாரும் நின்மலரடி காணா
மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப்
பற்றினாய் பதையேன் மனமிக உருகேன்
பரிகிலேன் பரியாவுடல் தன்னைச்
செற்றிலேன் இன்னுந் திரிதருகின்றேன்
திருப்பெருந்துறை மேவிய சிவனே. 2

புலைய னேனையும் பொருளென நினைந்துன்
அருள்புரிந்தனை புரிதலுங் களித்துத்
தலையினால் நடந்தேன் விடைப்பாகா
சங்கரா எண்ணில் வானவர்க்கெல்லாம்
நிலையனே அலைநீர்விடமுண்ட நித்தனே
அடையார்புர மெரித்த
சிலையனே யெனைச் செத்திடப் பணியாய்
திருப்பெருந்துறை மேவிய சிவனே. 3

அன்பராகிமற் றருந்தவம் முயல்வார்
அயனும் மாலுமற் றழலுறு மெழுகாம்
என்பராய் நினைவார் எனைப்பலர்
நிற்க இங்கெனை எற்றினுக் காண்டாய்
வன்பராய் முருடொக்கும் என்சிந்தை
மரக்கண் என்செவி இரும்பினும் வலிது
தென்பராய்த் துறை யாய் சிவலோகா
திருப்பெருந்துறை மேவிய சிவனே. 4

ஆட்டுத்தேவர் தம் விதியொழித் தன்பால்
ஐயனே என்றுன் அருள்வழி யிருப்பேன்
நாட்டுத்தேவரும் நாடரும் பொருளே
நாதனே உனைப் பிரிவுறா அருளைக்
காட்டித்தேவநின் கழலிணை காட்டிக்
காயமாயத்தைக் கழித்தருள் செய்யாய்
சேட்டைத்தேவர்தந் தேவர்பிரானே
திருப்பெருந்துறை மேவிய சிவனே. 5

அறுக்கிலேன் உடல்துணிபடத்தீப்புக்
கார்கிலேன் திருவருள் வகையறியேன்
பொறுக்கிலேன்உடல் போக்கிடங் காணேன்
போற்றி போற்றியென் போர்விடைப் பாகா
இறக்கிலேன் உனைப்பிரிந்தினிதிருக்க
என்செய்கேன்இது செய்க என்றருளாய்
சிறைக்கணே புனல் நிலவிய வயல்சூழ்
திருப்பெருந்துறை மேவிய சிவனே. 6

மாயனேமறிகடல்விடம் உண்ட
வானவாமணி கண்டத்தெம் அமுதே
நாயினேன் உனைநினையவும் மாட்டேன்
நமச்சிவாய என் றுன்னடி பணியாப்
பேயன் ஆகிலும் பெருநெறி காட்டாய்
பிறைகுலாஞ்சடைப் பிஞ்ஞகனேயோ
சேயனாகிநின்றலறுவ தழகோ
திருப்பெருந்துறை மேவிய சிவனே. 7

போது சேரயன் பொருகடற் கிடந்தோன்
புரந்த ராதிகள் நிற்கமற்றென்னைக்
கோதுமாட்டிநின் குரைகழல் காட்டிக்
குறிக்கொள் கென்றுநின்தொண்டரிற் கூட்டாய்
யாது செய்வதென் றிருந்தனன் மருந்தே
அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ
சீதவார்புனல் நிலவிய வயல்சூழ்
திருப்பெருந்துறை மேவிய சிவனே. 8

ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர்
நிற்க மற்றெனை நயந்தினி தாண்டாய்
காலன் ஆர்உயிர்கொண்ட பூங்கழலாய்
கங்கை யாய் அங்கி தங்கிய கையாய்
மாலும் ஓலமிட்டலறும் அம்மலர்க்கே
மரக்க ணேனையும் வந்திடப் பணியாய்
சேலும் நீலமும் நிலவிய வயல்சூழ்
திருப்பெருந்துறை மேவிய சிவனே. 9

அளித்துவந்தெனக் காவஎன்றருளி
அச்சந்தீர்த்தநின் அருட்பெருங்கடலில்
திளைத்துந்தேக்கியும் பருகியும் உருகேன்
திருப்பெருந்துறை மேவிய சிவனே
வளைக்கை யானொடு மலரவன் அறியா
வான வாமலை மாதொரு பாகா
களிப்பெலாம் மிகக் கலங்கிடு கின்றேன்
கயிலை மாமலை மேவிய கடலே. 10

அருளியவர் : மாணிக்கவாசகர்
தலம் : திருப்பெருந்துறை
நாடு : சோழநாடு காவிரி வடகரை

சிறப்பு: சிவானந்தம் அளவறுக்கொணாமை; எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

Leave a Comment