பொன்னார் மேனியனே பாடல் வரிகள் (ponnar meniyane) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருமழபாடி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருமழபாடிபொன்னார் மேனியனே

பொன்னார் மேனியனே
புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல்
மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே
மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால்
இனியாரை நினைக்கேனே. 1

கீளார் கோவணமுந்
திருநீறுமெய் பூசியுன்றன்
தாளே வந்தடைந்தேன்
தலைவாயெனை ஏன்றுகொள்நீ
வாளார் கண்ணிபங்கா
மழபாடியுள் மாணிக்கமே
*கேளா நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே.
(* ஆளாய் என்றும் பாடம்) 2

எம்மான் எம்மனையென்
றெனக்கெட்டனைச் சார்வாகார்
இம்மா யப்பிறவி
பிறந்தேயிறந் தெய்த்தொழிந்தேன்
மைம்மாம் பூம்பொழில்சூழ்
மழபாடியுள் மாணிக்கமே
அம்மான் நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே. 3

பண்டே நின்னடியேன்
அடியாரடி யார்கட்கெல்லாந்
தொண்டே பூண்டொழிந்தேன்
தொடராமைத் துரிசறுத்தேன்
வண்டார் பூம்பொழில்சூழ்
மழபாடியுள் மாணிக்கமே
அண்டா நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே. 4

கண்ணாய் ஏழுலகுங்
கருத்தாய அருத்தமுமாய்ப்
பண்ணார் இன்றமிழாய்ப்
பரமாய பரஞ்சுடரே
மண்ணார் பூம்பொழில்சூழ்
மழபாடியுள் மாணிக்கமே
அண்ணா நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே. 5

நாளார் வந்தணுகி
நலியாமுனம் நின்றனக்கே
ஆளா வந்தடைந்தேன்
அடியேனையும் ஏன்றுகொள்நீ
மாளா நாளருளும்
மழபாடியுள் மாணிக்கமே
ஆளா நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே. 6

சந்தா ருங்குழையாய்
சடைமேற்பிறை தாங்கிநல்ல
வெந்தார் வெண்பொடியாய்
விடையேறிய வித்தகனே
மைந்தார் சோலைகள்சூழ்
மழபாடியுள் மாணிக்கமே
எந்தாய் நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே. 7

வெய்ய விரிசுடரோன்
மிகுதேவர் கணங்களெல்லாஞ்
செய்ய மலர்களிட
மிகுசெம்மையுள் நின்றவனே
மையார் பூம்பொழில்சூழ்
மழபாடியுள் மாணிக்கமே
ஐயா நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே. 8

நெறியே நின்மலனே
நெடுமாலயன் போற்றிசெய்யுங்
குறியே நீர்மையனே
கொடியேரிடை யாள்தலைவா
மறிசேர் அங்கையனே
மழபாடியுள் மாணிக்கமே
அறிவே நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே. 9

ஏரார் முப்புரமும்
எரியச்சிலை தொட்டவனை
வாரார் கொங்கையுடன்
மழபாடியுள் மேயவனைச்
சீரார் நாவலர்கோன்
ஆரூரன் உரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார்
பரலோகத் திருப்பாரே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment