பொன்செய்த மேனியினீர் பாடல் வரிகள் (ponceyta meniyinir) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருமுதுகுன்றம் – விருத்தாசலம் தலம் நடுநாடு நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : நடுநாடு
தலம் : திருமுதுகுன்றம் – விருத்தாசலம்பொன்செய்த மேனியினீர்

பொன்செய்த மேனியினீர்
புலித்தோலை அரைக்கசைத்தீர்
முன்செய்த மூவெயிலும்
எரித்தீர்முது குன்றமர்ந்தீர்
மின்செய்த நுண்ணிடையாள்
பரவையிவள் தன்முகப்பே
என்செய்த வாறடிகேள்
அடியேனிட் டளங்கெடவே. 1

உம்பரும் வானவரும்
உடனேநிற்க வேயெனக்குச்
செம்பொனைத் தந்தருளித்
திகழும்முது குன்றமர்ந்தீர்
வம்பம ருங்குழலாள்
பரவையிவள் வாடுகின்றாள்
எம்பெரு மானருளீர்
அடியேனிட் டளங்கெடவே. 2

பத்தா பத்தர்களுக்
கருள்செய்யும் பரம்பரனே
முத்தா முக்கணனே
முதுகுன்றம் அமர்ந்தவனே
மைத்தா ருந்தடங்கண்
பரவையிவள் வாடாமே
அத்தா தந்தருளாய்
அடியேனிட் டளங்கெடவே. 3

மங்கையோர் கூறமர்ந்தீர்
மறைநான்கும் விரித்துகந்தீர்
திங்கள் சடைக்கணிந்தீர்
திகழும்முது குன்றமர்ந்தீர்
கொங்கைநல் லாள்பரவை
குணங்கொண்டிருந் தாள்முகப்பே
அங்கண னேயருளாய்
அடியேனிட் டளங்கெடவே. 4

மையா ரும்மிடற்றாய்
மருவார்புரம் மூன்றெரித்த
செய்யார் மேனியனே
திகழும்முது குன்றமர்ந்தாய்
பையா ரும்மரவே
ரல்குலாளிவள் வாடுகின்றாள்
ஐயா தந்தருளாய்
அடியேனிட் டளங்கெடவே. 5

நெடியான் நான்முகனும்
இரவியொடும் இந்திரனும்
முடியால் வந்திறைஞ்ச
முதுகுன்ற மமர்ந்தவனே
படியா ரும்மியலாள்
பரவையிவள் தன்முகப்பே
அடிகேள் *தந்தருளீர்
அடியேனிட் டளங்கெடவே.
(* தந்தருளாய் என்றும் பாடம்) 6

கொந்தண வும்பொழில்சூழ்
குளிர்மாமதில் மாளிகைமேல்
வந்தண வும்மதிசேர்
சடைமாமுது குன்றுடையாய்
பந்தண வும்விரலாள்
பரவையிவள் தன்முகப்பே
அந்தண னேயருளாய்
அடியேனிட் டளங்கெடவே. 7

பரசா ருங்கரவா
பதினெண்கண முஞ்சூழ
முரசார் வந்ததிர
முதுகுன்ற மமர்ந்தவனே
விரைசே ருங்குழலாள்
பரவையிவள் தன்முகப்பே
அரசே தந்தருளாய்
அடியேனிட் டளங்கெடவே. 8

ஏத்தா திருந்தறியேன்
இமையோர்தனி நாயகனே
மூத்தாய் உலகுக்கெல்லாம்
முதுகுன்ற மமர்ந்தவனே
பூத்தா ருங்குழலாள்
பரவையிவள் தன்முகப்பே
கூத்தா தந்தருளாய்
கொடியேனிட் டளங்கெடவே. 9

பிறையா ருஞ்சடையெம்
பெருமான் அருளாயென்று
முறையால் வந்தமரர்
வணங்கும்முது குன்றர்தம்மை
மறையார் தங்குரிசில்
வயல்நாவலா ரூரன்சொன்ன
இறையார் பாடல்வல்லார்க்
கெளிதாஞ்சிவ லோகமதே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment