பிடியெலாம் பின்செலப் பாடல் வரிகள் (pitiyelam pincelap) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கானப்பேர் – காளையார்கோவில் தலம் பாண்டியநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : பாண்டியநாடு
தலம் : திருக்கானப்பேர் – காளையார்கோவில்
சுவாமி : காளையீசுவரர்
அம்பாள் : மகமாயியம்மை
பிடியெலாம் பின்செலப்
பிடியெலாம் பின்செலப்
பெருங்கைமா மலர்தழீஇ
விடியலே தடமூழ்கி
விதியினால் வழிபடுங்
கடியுலாம் பூம்பொழிற்
கானப்பேர் அண்ணல்நின்
அடியலால் அடைசரண்
உடையரோ அடியரே. 1
நுண்ணிடைப் பேரல்குல்
நூபுரம் மெல்லடிப்
பெண்ணின்நல் லாளையோர்
பாகமாப் பேணினான்
கண்ணுடை நெற்றியான்
கருதிய கானப்பேர்
விண்ணிடை வேட்கையார்
விரும்புதல் கருமமே. 2
வாவிவாய்த் தங்கிய
நுண்சிறை வண்டினங்
காவிவாய்ப் பண்செயுங்
கானப்பேர் அண்ணலை
நாவிவாய்ச் சாந்துளும்
பூவுளும் ஞானநீர்
தூவிவாய்ப் பெய்துநின்
றாட்டுவார் தொண்டரே. 3
நிறையுடை நெஞ்சுளும்
நீருளும் பூவுளும்
பறையுடை முழவுளும்
பலியுளும் பாட்டுளுங்
கறையுடை மிடற்றண்ணல்
கருதிய கானப்பேர்
குறையுடை யவர்க்கலாற்
களைகிலார் குற்றமே. 4
ஏனப்பூண் மார்பின்மேல்
என்புபூண் டீறிலா
ஞானப்பே ராயிரம்
பேரினான் நண்ணிய
கானப்பே ரூர்தொழுங்
காதலார் தீதிலர்
வானப்பே ரூர்புகும்
வண்ணமும் வல்லரே. 5
பள்ளமே படர்சடைப்
பாற்படப் பாய்ந்தநீர்
வெள்ளமே தாங்கினான்
வெண்மதி சூடினான்
கள்ளமே செய்கிலார்
கருதிய கானப்பேர்
உள்ளமே கோயிலா
உள்குமென் னுள்ளமே. 6
மானமா மடப்பிடி
வன்கையால் அலகிடக்
கானமார் கடகரி
வழிபடுங் கானப்பேர்
ஊனமாம் உடம்பினில்
உறுபிணி கெடஎண்ணின்
ஞானமா மலர்கொடு
நணுகுதல் நன்மையே. 7
வாளினான் வேலினான்
மால்வரை யெடுத்ததிண்
டோ ளினான் நெடுமுடி
தொலையவே யூன்றிய
தாளினான் கானப்பேர்
தலையினால் வணங்குவார்
நாளும்நாள் உயர்வதோர்
நன்மையைப் பெறுவரே. 8
சிலையினால் முப்புரந்
தீயெழச் செற்றவன்
நிலையிலா இருவரை
நிலைமைகண் டோ ங்கினான்
கலையினார் புறவில்தேன்
கமழ்தரு கானப்பேர்
தலையினால் வணங்குவார்
தவமுடை யார்களே. 9
உறித்தலைச் சுரையொடு
குண்டிகை பிடித்துச்சி
பறித்தலும் போர்த்தலும்
பயனிலை பாவிகாள்
மறித்தலை மடப்பிடி
வளரிளங் கொழுங்கொடி
கறித்தெழு கானப்பேர்
கைதொழல் கருமமே. 10
காட்டகத் தாடலான்
கருதிய கானப்பேர்
கோட்டகத் திளவரால்
குதிகொளுங் காழியான்
நாட்டகத் தோங்குசீர்
ஞானசம் பந்தன
பாட்டகத் திவைவலார்க்
கில்லையாம் பாவமே.
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது; இத்தலம் காளையார் கோவிலென்று வழங்கப்படுகின்றது.
திருச்சிற்றம்பலம்