Piditha Pathu lyrics in tamil

பிடித்தபத்து (Piditha Pathu lyrics tamil)

அருளியவர் : மாணிக்கவாசகர்
தலம் : சீர்காழி – 05-தோணிபுரம்
நாடு : சோழநாடு காவிரி வடகரை

சிறப்பு: முத்திக்கலப்புரைத்தல்; எழுசீர் ஆசிரிய விருத்தம்.

திருச்சிற்றம்பலம்

உம்பர்கட்கரசே ஒழிவறநிறைந்த
யோகமே ஊற்றையேன் தனக்கு
வம்பெனப் பழுத்தென் குடிமுழுதாண்டு
வாழ்வற வாழ்வித்த மருந்தே
செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே
செல்வமே சிவபெருமானே
எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 1

விடைவிடா துகந்த விண்ணவர் கோவே
வினையனே னுடையமெய்ப் பொருளே
முடைவிடா தடியேன் மூத்தறமண்ணாய்
முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து
கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட
கடவுளே கருணைமா கடலே
இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 2

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 3

அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே
பெருந்திறல் அருந்தவர்க் கரசே
பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த
போகமே யோகத்தின் பொலிவே
தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த
செல்வமே சிவபெருமானே
இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 4

ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன்
உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
மெய்ப்பதம் அறியா வீறிலியேற்கு
விழுமிய தளித்ததோர் அன்பே
செப்புதற் கரிய செழுந்சுடர் மூர்த்தீ
செல்வமே சிவபெருமானே
எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 5

அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்
டளவிலா ஆனந்த மருளிப்
பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட
பிஞ்ஞகா பெரியஎம் பொருளே
திறவிலே கண்ட காட்சியே அடியேன்
செல்வமே சிவபெருமானே
இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 6

பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப்
பற்றுமா றடியனேற் கருளிப்
பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து
பூங்கழல் காட்டிய பொருளே
தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ
செல்வமே சிவபெருமானே
ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 7

அத்தனே அண்டர் அண்டமாய் நின்ற
ஆதியே யாதும்ஈ றில்லாச்
சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த
செல்வமே சிவபெருமானே
பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப்
பிழைத்தவை அல்லையாய் நிற்கும்
எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 8

பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 9

புன்புலால் யாக்கை புரைபுரை கனியப்
பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்
என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட
ஈசனே மாசிலா மணியே
துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காந்
தொடக்கெலாம் அறுத்தநற்சோதி
இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 10

Leave a Comment