பெண்ணமர் மேனியி னாரும் பாடல் வரிகள் (pennamar meniyi narum) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பாண்டிக்கொடுமுடி – கொடுமுடி தலம் கொங்குநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : கொங்குநாடு
தலம் : திருப்பாண்டிக்கொடுமுடி – கொடுமுடி
சுவாமி : கொடுமுடிநாதர்
அம்பாள் : பண்மொழிநாயகி

பெண்ணமர் மேனியி னாரும்

பெண்ணமர் மேனியி னாரும்
பிறைபுல்கு செஞ்சடை யாருங்
கண்ணமர் நெற்றியி னாருங்
காதம ருங்குழை யாரும்
எண்ணம ருங்குணத் தாரும்
இமையவ ரேத்த நின்றாரும்
பண்ணமர் பாடலி னாரும்
பாண்டிக் கொடுமுடி யாரே. 1

தனைக்கணி மாமலர் கொண்டு
தாள்தொழு வாரவர் தங்கள்
வினைப்பகை யாயின தீர்க்கும்
விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில்
நினைத்தெழு வார்துயர் தீர்ப்பார்
நிரைவளை மங்கை நடுங்கப்
பனைக்கைப் பகட்டுரி போர்த்தார்
பாண்டிக் கொடுமுடி யாரே. 2

சடையமர் கொன்றையி னாருஞ்
சாந்தவெண் ணீறணிந் தாரும்
புடையமர் பூதத்தி னாரும்
பொறிகிளர் பாம்பசைத் தாரும்
விடையம ருங்கொடி யாரும்
வெண்மழு மூவிலைச் சூலப்
படையமர் கொள்கையி னாரும்
பாண்டிக் கொடுமுடி யாரே. 3

நறைவளர் கொன்றையி னாரும்
ஞாலமெல் லாந்தொழு தேத்தக்
கறைவளர் மாமிடற் றாருங்
காடரங் காக்கன லேந்தி
மறைவளர் பாடலி னோடு
மண்முழ வங்குழல் மொந்தை
பறைவளர் பாடலி னாரும்
பாண்டிக் கொடுமுடி யாரே. 4

போகமு மின்பமு மாகிப்
போற்றியென் பாரவர் தங்கள்
ஆகமு றைவிட மாக
அமர்ந்தவர் கொன்றையி னோடும்
நாகமுந் திங்களுஞ் சூடி
நன்னுதல் மங்கைதன் மேனிப்
பாகம் உகந்தவர் தாமும்
பாண்டிக் கொடுமுடி யாரே. 5

கடிபடு கூவிளம் மத்தங்
கமழ்சடை மேலுடை யாரும்
பொடிபட முப்புரஞ் செற்ற
பொருசிலை யொன்றுடை யாரும்
வடிவுடை மங்கைதன் னோடு
மணம்படு கொள்கையி னாரும்
படிபடு கோலத்தி னாரும்
பாண்டிக் கொடுமுடி யாரே. 6

ஊனமர் வெண்டலை யேந்தி
உண்பலிக் கென்றுழல் வாருந்
தேனம ரும்மொழி மாது
சேர்திரு மேனியி னாரும்
கானமர் மஞ்ஞைக ளாலுங்
காவிரிக் கோலக் கரைமேல்
பானல நீறணி வாரும்
பாண்டிக் கொடுமுடி யாரே. 7

புரந்தரன் தன்னொடு வானோர்
போற்றியென் றேத்தநின் றாரும்
பெருந்திறல் வாளரக் கன்னைப்
பேரிடர் செய்துகந் தாருங்
கருந்திரை மாமிடற் றாருங்
காரகில் பன்மணி யுந்திப்
பரந்திழி காவிரிப் பாங்கர்ப்
பாண்டிக் கொடுமுடி யாரே. 8

திருமகள் காதலி னானுந்
திகழ்தரு மாமலர் மேலைப்
பெருமக னும்மவர் காணாப்
பேரழ லாகிய பெம்மான்
மருமலி மென்மலர்ச் சந்து
வந்திழி காவிரி மாடே
பருமணி நீர்த்துறை யாரும்
பாண்டிக் கொடுமுடி யாரே. 9

புத்தரும் புந்தியி லாத
சமணரும் பொய்ம்மொழி யல்லால்
மெய்த்தவம் பேசிட மாட்டார்
வேடம் பலபல வற்றால்
சித்தருந் தேவருங் கூடிச்
செழுமலர் நல்லன கொண்டு
பத்தர்கள் தாம்பணிந் தேத்தும்
பாண்டிக் கொடுமுடி யாரே. 10

கலமல்கு தண்கடல் சூழ்ந்த
காழியுள் ஞானசம் பந்தன்
பலமல்கு வெண்டலை யேந்திப்
பாண்டிக் கொடுமுடி தன்னைச்
சொலமல்கு பாடல்கள் பத்துஞ்
சொல்ல வல்லார் துயர்தீர்ந்து
நலமல்கு சிந்தைய ராகி
நன்னெறி யெய்துவர் தாமே.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment