Sivan Songs

பத்தூர்புக் கிரந்துண்டு பாடல் வரிகள் | patturpuk kirantuntu Thevaram song lyrics in tamil

பத்தூர்புக் கிரந்துண்டு பாடல் வரிகள் (patturpuk kirantuntu) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் நாகைக்காரோணம் – நாகப்பட்டினம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : நாகைக்காரோணம் – நாகப்பட்டினம்பத்தூர்புக் கிரந்துண்டு

பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்
பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்
செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்
செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநா ளிரங்கீர்
முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை
அவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறுங்
கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. 1

வேம்பினொடு தீங்கரும்பு விரவியெனைத் தீற்றி
விருத்திநான் உமைவேண்டத் துருத்திபுக்கங் கிருந்தீர்
பாம்பினொடு படர்சடைக ளவைகாட்டி வெருட்டிப்
பகட்டநான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன்
சேம்பினொடு செங்கழுநீர் தண்கிடங்கிற் றிகழுந்
திருவாரூர் புக்கிருந்த தீவண்ணர் நீரே
காம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டுங்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. 2

பூண்பதோர் இளஆமை பொருவிடையொன் றேறிப்
பொல்லாத வேடங்கொண் டெல்லாருங் காணப்
பாண்பேசிப் படுதலையிற் பலிகொள்கை தவிரீர்
பாம்பினொடு படர்சடைமேல் மதிவைத்த பண்பீர்
வீண்பேசி மடவார்கை வெள்வளைகள் கொண்டால்
வெற்பரையன் மடப்பாவை பொறுக்குமோ சொல்லீர்
காண்பினிய மணிமாடம் நிறைந்த நெடுவீதிக்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. 3

விட்டதோர் சடைதாழ வீணைவிடங் காக
வீதிவிடை யேறுவீர் வீணடிமை யுகந்தீர்
துட்டரா யினபேய்கள் சூழநட மாடிச்
சுந்தரராய்த் தூமதியஞ் சூடுவது சுவண்டே
வட்டவார் குழல்மடவார் தம்மைமயல் செய்தல்
மாதவமோ மாதிமையோ வாட்டமெலாந் தீரக்
கட்டியெமக் கீவதுதான் எப்போது சொல்லீர்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. 4

மிண்டாடித் திரிதந்து வெறுப்பனவே செய்து
வினைக்கேடு பலபேசி வேண்டியவா திரிவீர்
தொண்டாடித் திரிவேனைத் தொழும்புதலைக் கேற்றுஞ்
சுந்தரனே கந்தமுதல் ஆடையா பரணம்
பண்டாரத் தேயெனக்குப் பணித்தருள வேண்டும்
பண்டுதான் பிரமாணம் ஒன்றுண்டே நும்மைக்
கண்டார்க்குங் காண்பரிதாய்க் கனலாகி நிமிர்ந்தீர்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. 5

இலவவிதழ் வாயுமையோ டெருதேறிப் பூதம்
இசைபாட இடுபிச்சைக் கெச்சுச்சம் போது
பலவகம்புக் குழிதர்வீர் பட்டோடு சாந்தம்
பணித்தருளா திருக்கின்ற பரிசென்ன படிறோ
உலவுதிரைக் கடல்நஞ்சை அன்றமரர் வேண்ட
உண்டருளிச் செய்ததுமக் கிருக்கொண்ணா திடவே
கலவமயில் இயலவர்கள் நடமாடுஞ் செல்வக்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. 6

தூசுடைய அகலல்குல் தூமொழியாள் ஊடல்
தொலையாத காலத்தோர் சொற்பாடாய் வந்து
தேசுடைய இலங்கையர்கோன் வரையெடுக்க அடர்த்துத்
திப்பியகீ தம்பாடத் தேரொடுவாள் கொடுத்தீர்
நேசமுடை அடியவர்கள் வருந்தாமை அருந்த
நிறைமறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல்
காசருளிச் செய்தீரின் றெனக்கருள வேண்டும்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. 7

மாற்றமேல் ஒன்றுரையீர் வாளாநீர் இருந்தீர்
வாழ்விப்பன் எனஆண்டீர் வழியடியேன் உமக்கு
ஆற்றவேற் றிருவுடையீர் நல்கூர்ந்தீ ரல்லீர்
அணியாரூர் புகப்பெய்த அருநிதிய மதனில்
தோற்றமிகு முக்கூற்றி லொருகூறு வேண்டுந்
தாரீரேல் ஒருபொழுதும் அடியெடுக்க லொட்டேன்
காற்றனைய கடும்பரிமா ஏறுவது வேண்டும்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. 8

மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி
மலையரையன் பொற்பாவை சிறுவனையுந் தேறேன்
எண்ணிலியுண் பெருவயிறன் கணபதியொன் றறியான்
எம்பெருமான் இதுதகவோ இயம்பியருள் செய்வீர்
திண்ணெனவென் உடல்விருத்தி தாரீரே யாகில்
திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக்
கண்ணறையன் கொடும்பாடன் என்றுரைக்க வேண்டா
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. 9

மறியேறு கரதலத்தீர் மாதிமையேல் உடையீர்
மாநிதியந் தருவனென்று வல்லீராய் ஆண்டீர்
கிறிபேசிக் கீழ்வேளூர் புக்கிருந்தீர் அடிகேள்
கிறியும்மாற் படுவேனோ திருவாணை யுண்டேல்
பொறிவிரவு நற்புகர்கொள் பொற்சுரிகை மேலோர்
பொற்பூவும் பட்டிகையும் புரிந்தருள வேண்டும்
கறிவிரவு நெய்சோறு முப்போதும் வேண்டும்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. 10

பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும்
பற்றாய பெருமானே மற்றாரை உடையேன்
உண்மயத்த உமக்கடியேன் குறைதீர்க்க வேண்டும்
ஒளிமுத்தம் பூணாரம் ஒண்பட்டும் பூவுங்
கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும் வேண்டுங்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரென்
றண்மயத்தால் அணிநாவ லாரூரன் சொன்ன
அருந்தமிழ்கள் இவைவல்லார் அமருலகாள் பவரே. 11

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment