பாட்டும் பாடிப் பரவித் பாடல் வரிகள் (pattum patip paravit) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவொற்றியூர் தலம் தொண்டைநாடு நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : தொண்டைநாடு
தலம் : திருவொற்றியூர்பாட்டும் பாடிப் பரவித்
பாட்டும் பாடிப்
பரவித் திரிவார்
ஈட்டும் வினைகள்
தீர்ப்பார் கோயில்
காட்டுங் கலமுந்
திமிலுங் கரைக்கே
ஓட்டுந் திரைவாய்
ஒற்றி யூரே. 1
பந்துங் கிளியும்
பயிலும் பாவை
சிந்தை கவர்வார்
செந்தீ வண்ணர்
எந்தம் அடிகள்
இறைவர்க் கிடம்போல்
உந்துந் திரைவாய்
ஒற்றி யூரே. 2
பவளக் கனிவாய்ப்
பாவை பங்கன்
கவளக் களிற்றின்
உரிவை போர்த்தான்
தவழும் மதிசேர்
சடையாற் கிடம்போல்
உகளுந் திரைவாய்
ஒற்றி யூரே. 3
என்ன தெழிலும்
நிறையுங் கவர்வான்
புன்னை மலரும்
புறவிற் றிகழுந்
தன்னை முன்னம்
நினைக்கத் தருவான்
உன்னப் படுவான்
ஒற்றி யூரே. 4
பணங்கொள் அரவம்
பற்றிப் பரமன்
கணங்கள் சூழக்
கபாலம் ஏந்தி
வணங்கும் இடைமென்
மடவார் இட்ட
உணங்கல் கவர்வான்
ஒற்றி யூரே. 5
படையார் மழுவன்
பால்வெண் ணீற்றன்
விடையார் கொடியன்
வேத நாவன்
அடைவார் வினைகள்
அறுப்பான் என்னை
உடையான் உறையும்
ஒற்றி யூரே. 6
சென்ற புரங்கள்
தீயில் வேவ
வென்ற விகிர்தன்
வினையை வீட்ட
நன்று நல்ல
நாதன் நரையே
றொன்றை உடையான்
ஒற்றி யூரே. 7
கலவ மயில்போல்
வளைக்கை நல்லார்
பலரும் பரவும்
பவளப் படியான்
உலகின் உள்ளார்
வினைகள் தீர்ப்பான்
உலவுந் திரைவாய்
ஒற்றி யூரே. 8
பற்றி வரையை
எடுத்த அரக்கன்
இற்று முரிய
விரலால் அடர்த்தார்
எற்றும் வினைகள்
தீர்ப்பார் ஓதம்
ஒற்றுந் திரைவாய்
ஒற்றி யூரே. 9
ஒற்றி யூரும்
அரவும் பிறையும்
பற்றி யூரும்
பவளச் சடையான்
ஒற்றி யூர்மேல்
ஊரன் உரைத்த
கற்றுப் பாடக்
கழியும் வினையே. 10
திருச்சிற்றம்பலம்