பாடிளம் பூதத்தி பாடல் வரிகள் (patilam putatti) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவாரூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவாரூர்
சுவாமி : புற்றிடங்கொண்டார்
அம்பாள் : அல்லியம்பூங்கோதை

பாடிளம் பூதத்தி

பாடிளம் பூதத்தி னானும்
பவளச்செவ் வாய்வண்ணத் தானுங்
கூடிள மென்முலை யாளைக்
கூடிய கோலத்தி னானும்
ஓடிள வெண்பிறை யானும்
ஒளிதிகழ் சூலத்தி னானும்
ஆடிளம் பாம்பசைத் தானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே. 1

நரியைக் குதிரைசெய் வானும்
நரகரைத் தேவுசெய் வானும்
விரதங்கொண் டாடவல் லானும்
விச்சின்றி நாறுசெய் வானும்
முரசதிர்ந் தானை முன்னோட
முன்பணிந் தன்பர்கள் ஏத்த
அரவரைச் சாத்திநின் றானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே. 2

நீறுமெய் பூசவல் லானும்
நினைப்பவர் நெஞ்சத்து ளானும்
ஏறுகந் தேறவல் லானும்
எரிபுரை மேனியி னானும்
நாறு கரந்தையி னானும்
நான்மறைக் கண்டத்தி னானும்
ஆறு சடைக்கரந் தானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே. 3

கொம்புநல் வேனி லவனைக்
குழைய முறுவல்செய் தானுஞ்
செம்புனல் கொண்டெயில் மூன்றுந்
தீயெழக் கண்சிவந் தானும்
வம்புநற் கொன்றையி னானும்
வாட்கண்ணி வாட்டம தெய்த
அம்பர ஈருரி யானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே. 4

ஊழி யளக்கவல் லானும்
உகப்பவர் உச்சியுள் ளானுந்
தாழிளஞ் செஞ்சடை யானுந்
தண்ணமர் திண்கொடி யானுந்
தோழியர் தூதிடை யாடத்
தொழுதடி யார்கள் வணங்க
ஆழி வளைக்கையி னானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே. 5

ஊர்திரை வேலையுள் ளானும்
உலகிறந் தொண்பொரு ளானுஞ்
சீர்தரு பாடலுள் ளானுஞ்
செங்கண் விடைக்கொடி யானும்
வார்தரு பூங்குழ லாளை
மருவி யுடன்வைத் தவனும்
ஆர்திரை நாளுகந் தானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே. 6

தொழற்கங்கை துன்னிநின் றார்க்குத்
தோன்றி யருளவல் லானுங்
கழற்கங்கை பன்மலர் கொண்டு
காதல் கனற்றநின் றானுங்
குழற்கங்கை யாளையுள் வைத்துக்
கோலச் சடைக்கரந் தானும்
அழற்கங்கை ஏந்தவல் லானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே. 7

ஆயிரந் தாமரை போலும்
ஆயிரஞ் சேவடி யானும்
ஆயிரம் பொன்வரை போலும்
ஆயிரந் தோளுடை யானும்
ஆயிர ஞாயிறு போலும்
ஆயிர நீண்முடி யானும்
ஆயிரம் பேருகந் தானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே. 8

வீடரங் காநிறுப் பானும்
விசும்பினை வேதி தொடர
ஓடரங் காகவைத் தானும்
ஓங்கியொ ரூழியுள் ளானுங்
காடரங் காமகிழ்ந் தானுங்
காரிகை யார்கள் மனத்துள்
ஆடரங் கத்திடை யானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே. 9

பையஞ் சுடர்விடு நாகப்
பள்ளிகொள் வானுள்ளத் தானுங்
கையஞ்சு நான்குடை யானைக்
கால்விர லாலடர்த் தானும்
பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப்
புகழ்புரிந் தார்க்கருள் செய்யும்
ஐயஞ்சின் அப்புறத் தானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment