பரசுபாணியர் பாடல்வீணையர் பாடல் வரிகள் (paracupaniyar patalvinaiyar) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பல்லவனீசுரம் – பூம்புகார் தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்பல்லவனீசுரம் – பூம்புகார்
சுவாமி : பல்லவனேஸ்வரர்
அம்பாள் : சௌந்தர நாயகி

பரசுபாணியர் பாடல்வீணையர்

பரசுபாணியர் பாடல்வீணையர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தரசுபேணி நின்றார் இவர்தன்மை யறிவாரார் 1

பட்டநெற்றியர் நட்டமாடுவர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
திட்ட மாயிருப்பார் இவர்தன்மை யறிவாரார். 2

பவளமேனியர் திகழும் நீற்றினர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தழகரா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார். 3

பண்ணில்யாழினர் பயிலும்மொந்தையர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தண்ணலா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார். 4

பல்லிலோட்டினர் பலிகொண்டுண்பவர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தெல்லி யாட்டுகந்தார் இவர்தன்மை யறிவாரார். 5

பச்சைமேனியர் பிச்சை கொள்பவர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
திச்சையா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார். 6

பைங்கண் ஏற்றினர் திங்கள்சூடுவர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தெங்குமா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார். 7

பாதங் கைதொழ வேதமோதுவர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தாதியா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார். 8

படிகொள்மேனியர் கடிகொள் கொன்றையர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தடிகளா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார். 9

பறைகொள் பாணியர் பிறைகொள் சென்னியர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
திறைவரா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார். 10

வானமாள்வதற் கூனமொன்றிலை மாதர்
பல்லவனீச் சரத்தானை
ஞானசம்பந்தன் நற்றமிழ் சொல்லவல்லவர் நல்லரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment