பைத்தபாம் போடரைக் பாடல் வரிகள் (paittapam potaraik) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் அரதைப்பெரும்பாழி – அரித்துவாரமங்கலம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : அரதைப்பெரும்பாழி – அரித்துவாரமங்கலம்
சுவாமி : பரதேசுவரர்
அம்பாள் : அலங்காரநாயகியம்மை
பைத்தபாம் போடரைக்
பைத்தபாம் போடரைக்
கோவணம் பாய்புலி
மொய்த்தபேய் கண்முழக்
கம்முது காட்டிடை
நித்தமா கந்நட
மாடிவெண் ணீறணி
பித்தர்கோ யில்லர
தைப்பெரும் பாழியே. 1
கயலசே லகருங்
கண்ணியர் நாடொறும்
பயலைகொள் ளப்பலி
தேர்ந்துழல் பான்மையார்
இயலைவா னோர்நினைந்
தோர்களுக் கெண்ணரும்
பெயரர்கோ யில்லர
தைப்பெரும் பாழியே. 2
கோடல்சா லவ்வுடை
யார்கொலை யானையின்
மூடல்சா லவ்வுடை
யார்முளி கானிடை
ஆடல்சா லவ்வுடை
யாரழ காகிய
பீடர்கோ யில்லர
தைப்பெரும் பாழியே. 3
மண்ணர்நீ ரார்அழ
லார்மலி காலினார்
விண்ணர்வே தம்விரித்
தோதுவார் மெய்ப்பொருள்
பண்ணர்பா டலுடை
யாரொரு பாகமும்
பெண்ணர்கோ யில்லர
தைப்பெரும் பாழியே. 4
மறையர்வா யின்மொழி
மானொடு வெண்மழுக்
கறைகொள்சூ லம்முடைக்
கையர்கா ரார்தரும்
நறைகொள்கொன் றைநயந்
தார்தருஞ் சென்னிமேல்
பிறையர்கோ யில்லர
தைப்பெரும் பாழியே. 5
புற்றர வம்புலித்
தோலரைக் கோவணந்
தற்றிர வில்நட
மாடுவர் தாழ்தரு
சுற்றமர் பாரிடந்
தொல்கொடி யின்மிசைப்
பெற்றர்கோ யில்லர
தைப்பெரும் பாழியே. 6
துணையிறுத் தஞ்சுரி
சங்கமர் வெண்பொடி
இணையிலேற் றையுகந்
தேறுவ ரும்மெரி
கணையினால் முப்புரஞ்
செற்றவர் கையினில்
பிணையர்கோ யில்லர
தைப்பெரும் பாழியே. 7
சரிவிலா வல்லரக்
கன்தடந் தோள்தலை
நெரிவிலா ரவ்வடர்த்
தார்நெறி மென்குழல்
அரிவைபா கம்மமர்ந்
தாரடி யாரொடும்
பிரிவில்கோ யில்லர
தைப்பெரும் பாழியே. 8
வரியரா என்பணி
மார்பினர் நீர்மல்கும்
எரியரா வுஞ்சடை
மேற்பிறை யேற்றவர்
கரியமா லோடயன்
காண்பரி தாகிய
பெரியர்கோ யில்லர
தைப்பெரும் பாழியே. 9
நாணிலா தசமண்
சாக்கியர் நாடொறும்
ஏணிலா தம்மொழி
யவ்வெழி லாயவர்
சேணுலா மும்மதில்
தீயெழச் செற்றவர்
பேணுகோ யில்லர
தைப்பெரும் பாழியே. 10
நீரினார் புன்சடை
நிமலனுக் கிடமெனப்
பாரினார் பரவர
தைப்பெரும் பாழியைச்
சீரினார் காழியுள்
ஞானசம் பந்தன்செய்
ஏரினார் தமிழ்வல்லார்க்
கில்லையாம் பாவமே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
திருச்சிற்றம்பலம்